
பெட்ரோல் டீசல் விலையை நாள்தோறும் உயர்த்திக் கொண்டேயிருக்கிறது ஒன்றிய அரசு.அதுமட்டுமின்றி மக்களின் அத்தியாவசியத் தேவையான எரிகாற்று உருளை விலையையும் ஏற்றிக்கொண்டேயிருக்கிறார்கள்.
இது ஒருபுறமென்றால்,இன்னொருபுறம் செயற்கையாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுத்தும் வேலைகளிலும் இறங்கியுள்ளார்கள்.
தென்மாவட்டங்களில் எல்லா எரிபொருள் நிலையங்களுக்கும் முறையாக விநியோகம் செய்வதில்லையாம்.
அதிகாரிகளுக்கு வேண்டியவர்களுக்கு கேட்கும்போதெல்லாம் அனுப்புவது மற்றவர்களுக்கு நான்கு நாட்கள் ஐந்து நாட்கள் அனுப்பாமல் இருக்கிறார்களாம்.
கேட்டால்,இயல்பாகவே எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது என்று கூசாமல் பொய் சொல்கிறார்களாம்.
இதனால் பல எரிபொருள் விற்பனை நிலையங்கள் கடுமையான பாதிப்பைச் சந்திக்கின்றன என்று சொல்லி வருந்துகிறார்கள்.
உண்மையாகவே தட்டுப்பாடு இருக்கிறதா என்று விசாரித்தால், தேவையான அளவு விநியோகம் முறையாக நடக்கிறது என்று எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.
அப்படியானால் தென்மாவட்டங்களில் தற்போது நிலவும் தட்டுப்பாட்டுக்கு என்ன காரணம்?
ஒன்றிய அரசு நாள்தோறும் செய்யும் விலை உயர்வால் மக்கள் கொந்தளித்துவிடக் கூடாது என்பதற்காகவே செயற்கையாக இந்தத் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறார்கள்.
இன்னொன்று,மின்சார வாகனங்களை அதிகளவு தயாரித்துவிட்டார்கள்.அந்த வாகனங்களின் விற்பனை எதிர்பார்த்த மாதிரி நடக்கவில்லை.
அதனால் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படுத்தினால் மக்கள் மின்சார வாகனங்களை நோக்கித் திரும்புவார்கள் என்பதால் இப்படிச் செய்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.
ஒரு சில பெருமுதலாளிகள் நலனுக்காக ஒட்டுமொத்த மக்களையும் மோடி அரசு வதைக்கிறது என்கிற குற்றச்சாட்டை மெய்ப்பிக்கிற மாதிரியே இந்தத் தட்டுப்பாடும் இருக்கிறது என்று மக்கள் சொல்கிறார்கள்.
– முருகன்


