
தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்புவரை பயிலும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் நோக்கத்தில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் என்ற பெயரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2022 செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கிவைத்தார்.தொடர்ந்து அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இத்திட்டம் விரிவாக்கம்
செய்யப்பட்டது.இந்தத்திட்டத்தின்கீழ் கிச்சடி,பொங்கல்,உப்புமா என தினமும் ஏதேனும் ஒருவகை உணவு
வழங்கப்பட்டு வருகிறது.தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள 37,447 அரசு,அரசு உதவிபெறும் பள்ளிகளில்
படிக்கும் 19.34 இலட்சம் குழந்தைகளுக்குக் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
சமூக நலத்துறை செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் சென்னை
தலைமைச்செயலகத்தில் ஜூன் 15 ஆம் தேதி நடைபெற்றது.இதில் காலைஉணவுத் திட்டத்தை 6 முதல் 8 ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்வதற்கு முடிவானது.இந்நிலையில் காலைஉணவுத்
திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டு,அதை விரிவாக்கம் செய்வதற்காக ரூ.217 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து,சமூக நலத்துறைச் செயலர் ம.பல்லவி பல்தேவ் வெளியிட்ட அரசாணையில்…
அரசு,அரசு உதவிபெறும் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் காலைஉணவுத் திட்டம் இனி ‘பெருந்தலைவர் காமராஜர் காலைஉணவுத் திட்டம்’ என்று பெயரிடப்படுகிறது.இத்திட்டம் 6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு
விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.இத்திட்டம் பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17 ஆம் தேதி முதல்வர்
விஜய்யால் தொடங்கி வைக்கப்பட உள்ளது.தமிழகம் முழுவதும் 15,454 அரசு மற்றும் அரசு உதவிபெறும்
பள்ளிகளில் பயிலும் 15 இலட்சத்து 14,274 மாணவர்கள் பயன்பெறுவார்கள்.
இந்தத்திட்டத்தை விரிவுபடுத்துவதற்காக,நடப்பு நிதியாண்டில்(2026-27) தொடர் செலவினமாக ரூ.204 கோடியும், தொடரா செலவினமாக (உபகரணங்கள் வாங்குதல்) ரூ.13.57 கோடியும் என ஒட்டுமொத்தமாக ரூ.217.63 கோடிக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு மாணவருக்கும் தினசரி காலைஉணவுச் செலவாக ரூ.12.71 நிர்ணயம்
செய்யப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சியில் ஆணையரகமும்,பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் நகராட்சி நிர்வாக இயக்குநரகமும் ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் வாயிலாக செயல்படுத்தப்படும்.
மேலும்,ஊரகப் பகுதிகளில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் அந்தந்தப் பள்ளிகளிலேயே காலைஉணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தபோது,முதல்வரின் காலைஉணவுத்திட்டம் என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது.இப்போது பெருந்தமிழர் காமராசர் காலைஉணவுத்திட்டம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.இதனால்,இப்போதும் முதல்வர் என்றார் மு.க.ஸ்டாலின் தான் என்கிற எண்ணம் முதல்வருக்கே வருகிறது.அதனால்தான் பெயரை மாற்றிவிட்டார்கள் என்கிற விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.


