
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது….
நாங்கள் அதிமுகவுடன் இணைந்துதான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.கரூர் சம்பவத்தில் காவல்துறை தவறாக வழிநடத்தியதாகக் கூறும் முதல்வர் விஜய்,அந்தத் துறையை அவர்தான் வைத்துள்ளார்.அந்தத் துறையினர் மீது என்ன நடிவடிக்கை எடுத்துள்ளார்?விஜய் கூறுவதெல்லாம் உண்மையா? என்பது குறித்து சிபிஐ விசாரணை சென்றுகொண்டிருக்கிறது.ஆனால் பழியை யார் மீதும் சொல்வது சரியாக இருக்காது.கரூர் துயர சம்பவத்துக்கு காரணமானவர்கள் யார் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கும்.
கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்ததுபோல அரசுப்பணி வழங்கியுள்ளார் விஜய்.கட்சி நிகழ்ச்சியில் இறந்தவர்களுக்கு அரசுப்பணி வழங்குவது தவறான முன்னுதாரணம் ஆகும்.துக்கத்துக்கு வருவது போல கருப்புச்சட்டை மட்டுமே அணிந்திருந்தார்;ஆனால் விஜய் பேச்சில் துக்கம் இல்லை.முதலமைச்சர் விஜய்யின் கரூர் பேச்சு மற்றும் உடல்மொழியில் துக்கம் வெளிப்படவில்லை.வாழ்வு வந்துவிட்டது என்பதற்காக விஜய் அர்த்த ராத்திரியில் குடை பிடிக்கவேண்டாம்
முதலமைச்சர் விஜய் பேச்சில் ஆணவம்,அகங்காரம்தான் தெரிகிறது.விஜய்க்கு ஆதரவு கொடுத்த எம்எல்ஏக்கள் அனைவரும் தவெகவை எதிர்த்து வெற்றி பெற்றவர்கள்தான்.அதிமுக உறுப்பினர்கள் தானாக பதவி விலகினார்கள் என்பதை குழந்தைகூட நம்பாது.அதிமுக உறுப்பினர்கள் ராஜினாமா செய்தது குதிரை பேரம்தான்.தமிழ்நாட்டை அழிக்கவந்த நாசகாரசக்திதான் தவெக.தேர்தல் வாக்குறுதிகளை 5 ஆண்டு ஆனாலும் தவெக அரசு நிறைவேற்றாது. அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்தது ஊழல்தான்.மக்களை தவெக அரசு ஏமாற்றவேண்டாம்
பிள்ளை பிடிப்பது போல எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை பிடித்து ஆட்சி நடத்துவதை தவிர்க்கவேண்டும். தவெகவினர் எம்எல்ஏ திருடர்கள்.6 அதிமுக எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்ததே களவாணித்தனம்தான்.’Reel Less Work More’ என முதல்வர் விஜய் மாறவேண்டும்.ரீல் விடுவதை குறைத்துவிட்டு விஜய் ஆட்சி நிர்வாகத்தில் கவனம் செலுத்தவேண்டும்.ஷூட்டிங் மனநிலையில் இருந்து மாறி விஜய் முதலமைச்சராக வெளியே வரவேண்டும்.அரசியலை விட்டு தமிழக மக்கள் யாரை வெளியேற்றுவார்களோ அவர்களை வெளியேற்றுவார்கள்.
தமிழகத்தில் வேலைவாய்ப்பை பெருக்குவதற்கு,வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டுவர வேண்டும்.அடிப்படை வசதிகளை தொடர்ந்து மேம்படுத்த வேண்டும்.அதைவிட்டு,மேடைகளில் ஏறி மற்றவர்களைப் பற்றி தவறாகப் பேசக்கூடாது,விவசாயக் கடனை ரத்து செய்யச் சொல்லி எந்த விவசாயியும் கேட்கவில்லை,ஆட்சிக்கு வந்த உடனே கடனை ரத்து செய்வேன் என்று கூறியது ஏமாற்று வேலை.இதற்காக போராடிய ஒரு விவசாயிகூட இறந்துவிட்டார்.அவருடைய வீட்டில் யாருக்காவது வேலைவாய்ப்பு கொடுத்தால்,அதை எல்லாரும் பாராட்டுவார்கள்.
திமுக,அதிமுக கூட்டுக் களவாணி என முதல்வர் விஜய் கூறுகிறார்.ஆனால்,அவர்தான் ஒவ்வொரு கட்சிகளிலும் உள்ள எம்எல்ஏக்களை திருடி வருகிறார்.அவர்தான் முதல் எம்எல்ஏ களவாணி.அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கொண்டு வருவது எப்படி என்பது எங்களுக்குத் தெரியும்.அவர் ரீல் விடுவதை நிறுத்திவிட்டு ரியல் ஆட்சியை நடத்தவேண்டும்.
அதிமுகவும்,திமுகவும் கூட்டு சேரக்கூடிய சூழலை நாம் கணிக்க முடியாது.அரசியல் சூழல் யாரை வேண்டுமானாலும் மாற்றும்.அதைத்தானே கடந்தகாலத்தில் பார்த்திருக்கோம்.அண்ணாவும்,ராஜாஜியும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.இதுபோன்று பல உதாரணங்கள் உள்ளன.அதுபோல கூட்டணியை அரசியல் சூழ்நிலைதான் முடிவு செய்யும்.
முதல்வர் விஜய் தனது ஆட்சி கவிழ்ந்துவிடுமோ என்ற பயத்தில்,ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறாரே தவிர,தமிழ்நாட்டு வளர்ச்சியில் அவருக்கு ஈடுபாடு இல்லை.விஜயகாந்த் சினிமாவில் மட்டும்தான் நடித்தார்.வெளியில் நடிக்கவில்லை.எனவே,முதல்வர் விஐய்யை விஜயகாந்துடன் ஒப்பிடவேண்டாம்
இவ்வாறு தினகரன் கூறினார்.


