
மதுரை மண்டேலா நகரில் தேசிய சனநாயகக் கூட்டணி கட்சிகளின் பரப்புரைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் ஒன்றிய அமைச்சர்கள் பியூஷ் கோயல், எல்.முருகன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை, பாமக சார்பில் அன்புமணி, அமமுக சார்பில் டிடிவி.தினகரன், தமாகா ஜி.கே.வாசன், ஐஜேகே பாரிவேந்தர், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஜான்பாண்டியன், புரட்சி பாரதம் பூவை ஜெகன் மூர்த்தி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது….
தேசிய சனநாயகக் கூட்டணியில் மக்கள் செல்வாக்குள்ள கட்சிகள் எல்லாம் இணைந்திருக்கின்றன. தேர்தல் நேரத்தில் ஒன்றாக இணைந்து தேனீக்கள், எறும்புகளைப் போல் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க அனைவரும் உழைக்க வேண்டும். நம்முடைய கூட்டணி நடைபெற உள்ள தேர்தலில் 210 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும்.
தென்மாவட்டங்களில் தேசிய சனநாயகக் கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணியாக உள்ளது.முதல் தேர்தலை எம்ஜிஆர் சந்தித்ததும் தென்மாவட்டத்தில் தான்.முதன்முதலில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தேர்தலில் தான், மக்கள் வெற்றியைக் கொடுத்தனர். அதேபோல்,வரும் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்க தென்மாவட்ட மக்கள் துணை நிற்பார்கள்.ஜெயலலிதாக முதல்வராக இருந்தபோது தென் மாவட்ட மக்களுக்காக எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவர வேண்டுமென கேட்டார்.அதையும் ஒன்றிய அரசு கொடுத்து அந்தப் பணி நடந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
அதன்பின்னர், பிரதமர் மோடி பேசியதாவது….
நாவில் இனிக்கும் தமிழுக்கும், நாசியில் மணக்கும் மல்லிகைக்கும் பெயர் போனது நம் மதுரை மண். தமிழ்நாட்டில் கடந்த 12 ஆண்டுகளில் சுமார் ரூ.12 ஆயிரம் கோடி மதிப்புள்ள 74 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டு தொடர நம் அரசுதான் அவசரச் சட்டம் பிறப்பித்தது. செங்கோலுக்கு நாடாளுமன்றத்தில் தனி இடம் தந்து நாம்தான் மரியாதை அளித்தோம்.
அண்மையில் இந்தியா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் வரலாற்று முக்கியத்துவமான ஒப்பந்தத்தை நிறைவு செய்தோம். 28 முன்னேறிய நாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளோம். தமிழ்நாட்டிற்கு இதனால் என்ன ஆதாயம் என்பதில் கவனம் செலுத்த உள்ளேன். இது இளைஞர், பணியாளர், விவசாய தொழில் முனைவோருக்கு பொன்னான வாய்ப்பு. ஜவுளி, மின்னணு, கடல்சார் உணவு ஏற்றுமதியாளர், ஆயிரக்கணக்கான சிறு குறு வணிகர்களுக்கு உலகளாவிய சந்தை வாய்ப்பும், ஆர்டர்களும் கிடைக்கும், விவசாயி, மீனவர்களுக்கு சிறப்பு விலை கிடைக்கும்.
பல இலட்சம் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இவையெல்லாம் நடக்க வேண்டும் என்று சொன்னால் உங்கள் நலனில் அக்கறையுள்ள ஒரு அரசு இருந்தாக வேண்டும். என்டிஏ அரசால் மட்டுமே நிலையான மக்களை மையமாகக் கொண்ட அரசை தமிழ்நாட்டில் அளிக்க முடியும். வளர்ச்சியடைந்த தமிழ்நாடு, இந்தியாவை உறுதி செய்வோம்.
இவ்வாறு பேசினார்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பேசும்போது, அதிமுக ஆட்சி என பேசியுள்ள நிலையில், அதற்குப் பின்னர் பேசிய பிரதமர் மோடி ஒவ்வொரு முறையும் என்டிஏ கூட்டணி அரசு என்றே குறிப்பிட்டார்.
இதனால் அதிமுக அரசா? என் டி ஏ அரசா? என்கிற கேள்வி அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


