
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பத்தாவது சிறப்புப் பொதுக்குழுவின் முதல் கூட்டம், 2026 பிப்ரவரி 28 மற்றும் மார்ச்சு 1 ஆகிய இரு நாட்கள், கோபிச்செட்டிப்பாளையம் – ரோட்டரி அரங்கத்தில் நடைபெற்றது.
பேரியக்கத்தின் மூத்த பொதுக்குழு உறுப்பினர்கள் க.காமராசு, இரா.முருகப்பெருமாள்,மகளிர் ஆயம் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் செந்தமிழ்ச்செல்வி ஆகிய மூவரையும் கொண்ட தலைமைக்குழு, பொதுக்குழுவுக்குத் தலைமை தாங்கியது.
பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் – 1
தமிழ்நாட்டுத் தொழில், வணிகம், வேலை தமிழர்களுக்கே! வெளி மாநிலத்தவர் ஆக்கிரமிப்பைத் தடுப்போம்!
திருச்சி ஜி.எஸ்.டி. அலுவலகம் முற்றுகைப் போராட்டம்
தீர்மானம் – 3
கொங்கு மண்டலத்தின் பொருளியலை மீட்டெடுக்க ஜி.எஸ்.டி. வரியை திரும்பப் பெற வேண்டும்!
தீர்மானம் – 4
ஈரான் அதிபர் கொமேனியைக் கொன்றுள்ள வடஅமெரிக்கக் காட்டுமிராண்டித்தனத்தை இந்திய அரசு கண்டிக்க வேண்டும்
தீர்மானம் – 5
புதுச்சேரிக்குத் தனி மாநிலத் தகுதி வழங்க வேண்டும்!
தீர்மானம் – 6
சத்தியமங்கலம் பேருந்து நிலையத்திற்கு ‘மொழிப்போர் ஈகி முத்து’ பெயர் சூட்டி,அவருக்கு மணிமண்டபம் எழுப்ப வேண்டும்!
தீர்மானம் – 7
கொடிவேரி அணைக்கட்டிய வேட்டுவ செயங்கொண்ட சோழ கொங்காள்வன் அரசருக்கு மார்பளவுச் சிலை வேண்டும்!
இவற்ரோடு இரண்டாவது தீர்மானமாக,
தீர்மானம் – 2
தமிழ்த்தேசியம் காக்க நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்பீர்!
ஒரு சமூகத்திற்கு அதன் இனம், மொழி, வரலாறு, சமூக ஒழுங்கு ஆகியவற்றை சமகாலத்தில் பாதுகாக்கக்கூடியது அரசியல்! ஆனால், அந்த அரசியல் தமிழ்நாட்டில் சீரழிந்து கிடக்கிறது. இலட்சியம், நேர்மை, ஒழுக்கம் எவையும் அரசியலுக்குத் தேவையில்லை என்ற நிலை இருக்கிறது.
இவை மட்டுமின்றி, தமிழினத்தின் அடையாளத்தை, தமிழ் மொழியின் வளர்ச்சியை சீர்குலைக்கக் கூடிய வகையில், இந்தியன் – இந்தியத்தேசியம் என்ற வடவர் ஆதிக்க அரசியலும், திராவிட இனம் என்ற அண்டை அயல் இனத்தார் ஆதிக்க அரசியலும் தமிழர்களை தங்கள் இனத்திற்கே எதிரானவர்களாக மாற்றிச் சிதைத்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி நம்முடைய தமிழினம், தமிழர் தாயகம், தமிழர் வரலாறு, தமிழீழத் தமிழர் வீரம் – ஈகம் ஆகியவற்றை முதன்மைப்படுத்தி, செந்தமிழன் சீமான் தலைமையில் செயல்பட்டு வருகிறது.
தமிழ்த்தேசியப் பேரியக்கம், தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு முழு அதிகாரம் இல்லை என்ற நிலையிலும், இந்திய அரசுக்குக் கீழ்பட்ட ஒன்றாக இருக்கிறது என்ற நிலையிலும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலைப் புறக்கணித்து வந்தது.
தமிழ்த்தேசியப் பேரியக்கம், தமிழினத்தின் இறையாண்மை மீட்பு என்ற அடிப்படை இலட்சியத்திற்கு மக்கள் எழுச்சிப் போராட்டங்களே இறுதித் தீர்வாக முடியும் என்பதில், இப்போதும் மாற்றமில்லை! தேர்தலில் போட்டியிடுவதில்லை, எந்தக் கட்சியோடும் தேர்தல் கூட்டணி வைப்பதில்லை என்பதை தொடர்ந்து உறுதி செய்கிறது.
அதேவேளை, இறையாண்மை மீட்பு இலட்சியம் நிறைவேறும் வரை வாக்களிப்பைப் புறக்கணிக்க முடியாது என்ற நிலையில், வாக்களிப்பில் பங்கேற்பது என தீர்மானிக்கிறது.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், ஆரியத்துவ இந்தியத் தேசியத்திற்கும், திராவிடத்துவத் திரிபுகளுக்கும் எதிராக தமிழ்த்தேசியம் என்ற கோட்பாட்டை முன்னிறுத்தி, தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்பதென முடிவு செய்கிறது. தமிழ்நாட்டு மக்கள், நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் வேண்டுகோள் வைக்கிறது!
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவ்வளவு காலம் தேர்தல் புறக்கணிப்பு நிலையில் இருந்த தமிழ்த் தேசியப் பேரியக்கம், முதன்முறையாக வாக்களிப்பில் கலந்து கொள்வது என்றும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று முடிவெடுத்திருப்பதும் கவனிக்கத்தக்கது.


