சங்கீதாவுக்கு எதிராக ஆபாச பரப்புரை – விஜய்க்கு மாதர்சங்கம் கண்டனம்

நடிகரும் தவெக தலைவருமான விஜய் மனைவி சங்கீதா மீது,விஜய் இரசிகர்களின் சமூக வலைதள தாக்குதல்கள் மிக மோசமாக இருக்கின்றன.அதை கண்டிக்காமல் மவுனம் காக்கும் விஜய்க்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில்….

திரைப்பட நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கி, பொதுவாழ்வில் நேரடியாக செயல்பட்டு வருகிறார்.இந்தச்சூழலில்,விஜய்யின் மனைவி சங்கீதா,செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில்,விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்திருப்பது ஒரு தனிப்பட்ட சட்ட நடைமுறை ஆகும்.அது இரு நபர்களுக்கும், நீதிமன்றத்திற்கும் உரிய விசயமே தவிர,அதை சமூக வலைதளங்களில் இழிவுபடுத்தி,ஆபாசமாக விவாதிக்கும் உரிமை யாருக்கும் இல்லை.

ஆனால் விஜய் பெயரைச் சொல்லிக்கொண்டு இயங்கும் அக்கட்சியின் தொண்டர்கள் சமூகவலைதளங்களில் சங்கீதாவைக் குறிவைத்து,ஆபாசமான,இழிவான ஆணாதிக்கச் சமூகவலைதள வன்முறைப் பதிவுகள், கேலிச்சித்திரங்கள் போன்றவற்றை தொடர்ந்து பரப்பி வருகின்றனர்.

இது கருத்துச் சுதந்திரமல்ல.பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறை.பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கை,பொதுச்சொத்து அல்ல.ஒரு பெண்,தனது திருமண வாழ்க்கை தொடர்பாக நீதிமன்றத்தை நாடுவது, அப்பெண்ணை அவமதிக்கவோ,கேலிசெய்யவோ,பாலியல் இழிவுக்கு உள்ளாக்கவோ யாருக்கும் உரிமை இல்லை. விவாகரத்து என்பது,அடிப்படை மனித உரிமை என்பதை மறந்து பெண்களை இழிவுபடுத்தும் போக்கு,ஆழமான ஆணாதிக்க மனநிலையின் வெளிப்பாடாகும்.

திரைப்பட நடிகராக இருப்பது ஒரு தனிப்பட்ட தொழில் ஆனால் அரசியல்கட்சி தொடங்கி,மக்களிடம் ஆதரவு கோரும்போது,அந்த நபர் பொதுவாழ்வின் நெறிமுறைகளுக்கு உட்பட்டவராக மாறுகிறார்.விஜய்யின் பெயரை பயன்படுத்தி பெண்களை இழிவுபடுத்துவது குறிப்பாக சங்கீதாவை ஆபாசப்படுத்தி பதிவுகள் பரவும்போது அதைக் கண்டிக்காமல் விஜய் மவுனம் காப்பது கண்டிக்கத்தக்கது.அந்த மவுனம்,அந்தச் செயல்களுக்கு மறைமுக ஒப்புதலாகவே பார்க்கப்படும்.

எனவே, இரசிகர்கள் என்ற பெயரில் நடைபெறும் இந்த ஆணாதிக்கச் சமூகவலைதள வன்முறையை வெளிப்படையாகவும்,தெளிவாகவும் கண்டிக்கவேண்டும்.இது ஒரு அரசியல்கட்சி தலைவரின் அரசியல் சமூகப் பொறுப்பு,இத்தகைய வலைதள வன்முறைக்கு மவுனம் காப்பது,குற்றத்திற்குச் சமமானதாகும்.எனவே சங்கீதா மீது சமூக வலைதளங்களில் மேற்கொள்ளப்படும் ஆணாதிக்கச் சமூக வலைதள வன்முறை,ஆபாச,இழிவான தாக்குதல்களை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடுமையாகக் கண்டிக்கிறது.பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அரசியல் பொழுதுபோக்கு விவாதமாக மாற்றும் போக்கை எதிர்க்கிறது.

பொதுவாழ்வில் இருப்பவர்கள்,பெண்களை இழிவுபடுத்தும் செயல்களுக்கு எதிராக தெளிவான நிலைப்பாடு எடுக்கவேண்டும்.பெண்களின் மரியாதை,சமத்துவம்,சுதந்திரம் ஆகியவை எந்த அரசியல் ஆதரவுக்கும்,இரசிக மனநிலைக்கு பலியாக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.

எனவே சமூக வலைதளங்களில் ஆபாச பதிவுகளை தடுத்து நிறுத்த காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவு நடவடிக்கைகள் எடுத்திடவேண்டும்.சங்கீதா மீது ஆபாச அவதூறு பரப்புபவர்கள் மீது தவெக கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.உடனடியாக இந்த ஆபாச பிரசாரத்தை கண்டித்து எதிர்வினை ஆற்றவேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response