
மோகமுள்,முகம்,பாரதி,பெரியார் மற்றும் ராமாநுசன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஞானராஜசேகரன் அவர்களோடு ஒரு சந்திப்பிற்குத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும்,தேடல் திரைப்படச் சங்கமமும் ஈரோடு நாடகக் கொட்டகை அரங்கில் ஒரு சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தது.
அதில் பங்கேற்ற இயக்குநர் அவர்கள் தனது படைப்புகள் குறித்தும்; பொதுவாகத் தமிழ்த்திரைப்படங்கள் குறித்தும் விரிவாக உரையாற்றினார். அவரது உரையில் தெரிவித்த சில கருத்துக்களை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
எட்டாம் வகுப்பிலிருந்து முதுகலை (M.Sc.Physics) இறுதி ஆண்டு வரை தமிழில் வெளியான அனைத்து படங்களையும் நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அதே போல் தமிழில் வெளிவந்த சிறந்த நாடகங்களையும் கல்லூரி நாட்களிலேயே பார்த்தேன். 60-களில் வெளிவந்த மலையாளப் படங்கள் என்னை மிகவும் ஈர்த்தன. மலையாள இலக்கியத்தை அப்பொழுதிருந்த மலையாள இயக்குனர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டனர். அத்தகைய போக்கு வரவேற்கத்தக்கது.
தமிழ்நாட்டில் திரைப்படம் என்பது மக்கள் வாழ்வின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. ஒரு தாய் இறக்கும் தருவாயில் தனது மகனையும் மகளையும் அழைத்து; பாசமலர் திரைப்படத்தில் வருவது போல நீங்கள் இருவரும் அவ்வளவு பிரியத்தோடு இருக்க வேண்டும் என வாக்குறுதி வாங்கியதை நான் அறிவேன். நடிகர் வடிவேலுவின் பெயரைச் சொல்லாமல் இன்றைக்கு ரீல்ஸ் எதுவும் போட முடியாது. திரைப்படத்திற்கு இந்த அளவு முக்கியத்துவம் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.
தமிழ்த் திரைப்படங்களில் தொழில்நுட்பம் மிகச் சிறப்பாக உள்ளது. ஆனால் படைப்பாக்கம் போதிய அளவு இல்லை.
ரசனை என்பது வேறு படைப்பாக்கம் (Creativity) என்பது வேறு. ஆனால், தமிழ் இரசிகர்கள் பத்து நிமிடத்திற்கு ஒருமுறை திரையில் மாற்றம் வர வேண்டும் என எதிர்பார்க்கின்றனர் இல்லாவிட்டால் அவர்கள் பதற்றம் அடைகின்றனர். சினிமா என்பது திருப்பங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பது தமிழ் இரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. திரைப்படத்தில் அப்படி இல்லை என்றால் அவர்கள் பொறுமை இழந்துவிடுகின்றனர். திரைப்படம் என்பது பொழுது போக்குவதற்கான ஒரு சாதனம் என்பது இங்கு விதியாக உள்ளது. இந்தப் போக்கை மாற்றக்கூடிய சில படங்களும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அதற்குச் சிறந்த தமிழ் நாவல்களைத் திரைப்படமாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஆனால், தமிழ்த்திரைப் படங்களுக்கென என ஒரு கட்டமைப்பு உருவாகி உள்ளது. கதாநாயகன் / கதாநாயகி / கொஞ்சம் பாடல் / கொஞ்சம் காமெடி / சண்டைக்காட்சி / கிளைமாக்ஸ் என்ற இந்தக் கட்டமைப்பு மீற முடியாத விதியாகத் தமிழ்ப் படங்களில் இறுகிவிட்டது.
இன்று தமிழ் திரையுலகம், வணிகத்தை மையமாகக் கொண்டு சுழல்கிறது. முன்பு எம்ஜிஆர் படம் 36 திரையரங்குகளில் ஒரே சமயத்தில் வெளியிடப்படும். எப்படியும் ஒருசில மாதங்களில் படத்திற்குப் போட்ட மூலதனம் திரும்பி வந்துவிடும்.பெரிய நட்டம் ஏற்படாது. ஆனால் இன்று ஒரு படத்தைத் தயாரிக்கவே100 கோடி / 150 கோடி எனச் செலவிடப்படுகிறது. இதில் கதாநாயகனுக்குக் கொடுக்கக்கூடிய சம்பளம்தான் மிகவும் அதிகம். கதாநாயகனுக்கும் மற்ற நடிக — நடிகைகளுக்கும் வழங்கப்படக்கூடிய சம்பளத்தில் இன்று மிகப்பெரிய இடைவெளியும் வேறுபாடும் உள்ளது.
ஒரே கதை வெவ்வேறு பெயர்களில் திரைப்படமாக எடுக்கப்படுகிறது இதற்கு முட்டுக்கொடுக்கச் சூப்பர் ஸ்டார் எனும் மாயை உருவாக்கப் படுகிறது. இன்று ஒரு படம் 2000 தியேட்டர்களில் ஒரே சமயத்தில் வெளியாகிறது. படம் வெளியான மூன்று நாட்களில் கிடைக்கும் வசூல் / ஓடிடி வருமானம் மூலம் படத்திற்காகப் போடப்பட்ட மூலதனத்தில் 80% திரும்ப வசூலாகி விடுகிறது. இந்த மாயச் சுழலில் தரமான படம் என்பது எதிர்நீச்சலாக உள்ளது. இருப்பினும் சிறந்த படங்களுக்கு வரவேற்பு இருக்கவே செய்கிறது. 1994 -ல் எனது படமான “மோகமுள் ” ஒரே திரையரங்கில் 100 நாள்கள் ஓடிச் சாதனை படைத்தது. ஒன்றிய அரசின் பரிசையும் அது பெற்றது.
திரைப்படத்திற்கு இயக்குனராக வர விரும்புபவர்கள் சில குறைந்தபட்சத் தகுதிகளையாவது கொண்டிருக்க வேண்டும். அவர்களுக்குப் படைப்பாற்றல் இருக்க வேண்டும் நல்ல படிப்பு இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளாவது திரைத்துறையில் அவர்கள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பிறகுதான் சுயமாகப் படங்களை இயக்க முன்வர வேண்டும் ஆனால் இன்று இயக்குனர் ஆக வேண்டும் என்ற கனவோடு நூற்றுக்கணக்கான பேர் சென்னைக்கு நாள்தோறும் வந்து குவிகிறார்கள் இவர்கள் அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பி இருக்கின்றார்கள் அல்லது தனக்கு உள்ள சிபாரிசை நம்பிக் களம் இறங்கிப் படுதோல்வி அடைகின்றனர்
அதேபோல் தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயக ஆதிக்கம் ஒழிய வேண்டும்.
ஒரு படத்தில் கதாநாயகனை மட்டுமே இயக்குனர் வழிநடத்துகிறார் ஆனால் ஒரு காட்சியில் கதாநாயகனோடு இருக்கக்கூடிய மற்ற துணை நடிகர்களுக்கு எதுவும் சொல்லிக் கொடுப்பதில்லை. எனவே பல பேர் உள்ள ஒரு காட்சியில் அங்குள்ள துணை நடிகர்களுக்குத் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது தெரிவதில்லை. ஆனால் வெளிநாட்டு படங்களில் அவ்வாறு இல்லை. குறிப்பிட்ட படக்காட்சி குறித்துத் துணை நடிகர்களுக்கும் அனைத்து விவரங்களும் கற்பிக்கப்படுகின்றன.. எனவேதான் அவர்களது திரைப்படத்தின் தகுதி செறிவாக அமைகிறது.
குறிப்பாக ஆளுமைகளைப் பற்றிய படங்களை எடுக்கும் பொழுது அந்த ஆளுமைகள் குறித்து மிக விரிவாக இயக்குனர் அறிந்திருக்க வேண்டும் அந்த ஆளுமையின் மீது ஆத்மார்த்தமான ஈடுபாடும் அவருக்கு இருக்க வேண்டும் அப்படித்தான் நான் பாரதி திரைப்படத்தையும் பெரியார் திரைப்படத்தையும் இயக்கினேன்.
பெரியார் படத்தின் வெற்றியைப் பார்த்துச் சாதித்தலைவர்கள் குறித்துத் தனித்தனியே படம் எடுப்பதற்காக என்னைப் பலரும் அணுகினர். ஆனால் அப்படி வந்த எட்டுத் தயாரிப்பாளர்களை நான் திட்டவட்டமாக மறுத்து விட்டேன்.
பெரியார் பற்றிய திரைப்படத்தில் கூட பெரியாரது முழு ஆளுமையையும் என்னால் கொண்டு வர இயலவில்லை குறிப்பாகப் பெண் விடுதலை குறித்த அவரது கருத்தை அனைவரும் அறிந்திருக்க வேண்டும். கடவுள் மறுப்பு என்பதோடு நின்றுவிடாமல், அவரது சமூக சீர்திருத்தக் கொள்கைகளை மக்களிடம் நாம் கொண்டு செல்ல வேண்டும்.அப்படிக் கொண்டு செல்லும் பொழுது அனைவரும் பெரியாருக்கு ஆதரவு தர முன்வருவார்கள்.
பெரியார் படத்தில் தேவதாசி ஒழிப்பு குறித்த ஒரு காட்சியைக் கோயில் ஒன்றில் எடுக்க வேண்டி இருந்தது: அதற்காகப் பல்வேறு கோவில்களை நான் அணுகினேன். ஆனால் பெரியார் பெயரைக் கேட்டதும் கோயிலில் படம் எடுக்க அனைவரும் மறுத்துவிட்டனர். இப்படி 30/ 40 கோயில்களுக்கு நான் அலைந்தேன்.ஆனால் திருவாரூரில் ஒரு பெருமாள்கோயில் உள்ளது.அக்கோயிலின் அறங்காவலர் குழுவிலுள்ளவர்களிடம் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த ஒருவர்,படத்தின் பின்னணியை விரிவாக விளக்கியதும்,அந்த ஐயங்கார் கோயிலில் படம் எடுக்க எனக்கு அனுமதி அளித்தனர்.இப்படிப் பெரியாரின் பல்வேறு சீர்திருத்தக் கூறுகளை மக்களிடம் கொண்டு செல்லவேண்டிய கடமை நமக்கு உள்ளது.அதை விடுத்துப் பிராமணக் கடப்பாறையைக் கொண்டு இடிப்பேன் என்று சொல்வது பாமரத்தனமானது.
தொடர்ந்து பல்வேறு ஆளுமைகள் குறித்த படங்களை வெற்றிகரமாக நான் எடுத்த காரணத்தால், அப்படிப்பட்ட வகையிலான படங்களுக்கு நான்தான்பொருத்தமானவன் எனப் பலரும் கருதுகின்றனர். இருப்பினும் நான் ஆத்மார்த்தமாக நேசிக்கக் கூடிய ஆளுமைகள் குறித்த படங்களைத்தான் நான் எடுத்து வருகிறேன். அந்த வகையில் நான் அடுத்ததாக வள்ளலார் படத்தை எடுக்க இருக்கிறேன்.வள்ளலாரின் ஆறாம் திருமுறையை அடிப்படையாகக் கொண்டு அந்தப்படம் தயாரிக்கப்படுகிறது.வள்ளலாரைப் போல ஒரு சமதர்மவாதியைச் சமகாலத்தில் நாம் காணமுடியாது.எல்லா மதங்களும் அன்பைப் போதிக்கின்றன.இருப்பினும்,மதம் வெறியாக மாறும்பொழுது அது சமூகத்திற்குத் தீங்கு விளைவிக்கிறது.அப்படிப்பட்ட மதவெறிக்கு எதிராக வள்ளலார் எழுப்பிய முழக்கம்,மிகவும் முக்கியமானது.அத்தகைய சன்மார்க்கத் துறவியைப் பற்றிய படத்தை இயக்க நான் மிகுந்த ஆர்வம் உடையவனாக இருக்கிறேன்.விரைவில் அந்தப்படம் வெளிவர உள்ளது.
– கண.குறிஞ்சி


