நான்கு பேர் பிடியில் விஜய் – வெளியான அதிர்ச்சித் தகவல்

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை விமர்சித்து காணொலி வெளியிட்டுவருகிறார்.

நேற்று அவர் வெளியிட்ட காணொலியில்….

மே 10 இல் விஜய் தம்பி முதல்வராகப் பதவியேற்றபோது,எனது ஆட்சியிலே நான் மட்டும்தான் பவர் சென்டர் என விண்ணை முட்ட,நரம்பு புடைக்க முழங்கினார்.இந்த ஒரு மாதத்திற்குள் விஜய் தம்பியைச் சுற்றி 4 பேர் பவர் சென்டராக தலைமைச் செயலகத்தை ஆக்கிரமித்து ஐஏஎஸ்,ஐபிஎஸ் உள்பட ஒட்டுமொத்த தலைமைச் செயலக நிர்வாகத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதைப் பார்த்து ஒட்டுமொத்த தமிழ்நாடும் கவலையடைந்துள்ளது.

அறிஞர் அண்ணா,எம்ஜிஆர்,ஜெயலலிதா,கலைஞர்,எடப்பாடி பழனிச்சாமி,மு.க.ஸ்டாலின் ஆகியோர் முதலமைச்சராக இருந்த காலங்களில்,தங்களின் தனிப்பட்ட உதவியாளர்களை தலைமைச் செயலகத்திற்கு அழைத்து வந்ததாக செய்தியோ,வரலாறோ கிடையாது.

விஜய் தம்பி,நான் மட்டுமே பவர் சென்டர் என்றார்.ஆனால் ஜான் ஆரோக்கியசாமி யார்? மொழிப்போர் தியாகியா, தமிழ் இனத்திற்காகச் சிறை சென்றவரா? விஷ்ணுரெட்டி யார்? ஜெகதீஷ் பழனிச்சாமி யார்? இவர்கள் இந்த மண்ணுக்காக இந்த மக்களுக்காக உரிமைப் போராட்டம் நடத்தி வரலாற்றில் இடம்பெற்றவர்களா? ராம்குமார் யார்? அவருக்கும் தலைமைச் செயலகத்திற்கும் என்ன தொடர்பு? இந்த நால்வரும் நாட்டின் விடுதலைக்காக, மொழிக்காக, தமிழக உரிமைக்காகப் போராடிய தியாகிகளா? தமிழக மக்களுக்காகப் போராடிச் சிறை சென்ற தியாகச் செம்மல்களா?டெல்லிக்குச் செல்கிற போதும்,தனி விமானத்தில் அரசு அதிகாரிகளைத் தள்ளி வைத்துவிட்டு இந்த நால்வரை அழைத்துச் செல்கிறார்.

இந்த நால்வருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இணையான மதிப்பு கொடுத்து கோட்டையில் அமரவைத்திருப்பது,ஒட்டுமொத்த நிர்வாகத்துக்கும் களங்கத்தை ஏற்படுத்தியிருப்பது விஜய்க்கு தெரியுமா? தெரியாதா?

மக்களின் தீர்ப்பை மதித்து முதல்வர் விஜய் தம்பிக்கு மரியாதை செலுத்தவேண்டியது ஐஏஎஸ் ஐபிஎஸ் ஆகியோர் கடமை.அதுதான் மரபு.ஆனால் அவருடைய நண்பர்களுக்கும் நட்புவட்டாரத்தில் இருப்பவர்களுக்கும் அவருக்குத் தெரிந்தவர்களுக்கு தெரியாதவர்களுக்கு எல்லாம் மரியாதை செலுத்துவதும் அவர்கள் கேட்கிற கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய துர்ப்பாக்கிய சூழல் உருவாகியிருப்பது அரசு அதிகாரிகளின் மாண்பை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

உச்சபட்ச அதிகாரம் படைத்த தலைமைச் செயலக அலுவலகத்தில் அரசு நிர்வாகத்திற்குத் தொடர்பில்லாதவர்களை அமரவைப்பது தமிழகம் இதுவரை கண்டிராத விசித்திரமான விபரீத செயல்.

இந்த நான்குபேரின் வழிகாட்டுதலில் சிக்கியுள்ள முதல்வர் விஜய் தம்பி,எப்படி சுதந்திரமான முடிவெடுத்து தூய்மையான ஆட்சியைத் தரமுடியும் எனப்தே வாக்களித்த மக்களுக்கு எழுந்துள்ள கவலை.

இவ்வாறு பேசியுள்ளார்.

Leave a Response