தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி திமுக கொடுத்தது – பிரேமலதா மகிழ்ச்சி

தமிழ்நாட்டில் என்.ஆர். இளங்கோ, செல்வராசு, தம்பிதுரை, திருச்சி சிவா, கனிமொழி சோமு மற்றும் ஜி.கே. வாசன் ஆகியோரின் மாநிலங்களவைப் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இந்த 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் மார்ச் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் இப்போது கட்சிகளுக்கு உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் அடிப்படையில் திமுக 4 உறுப்பினர்களையும், அதிமுக 2 உறுப்பினர்களையும் தேர்வு செய்ய முடியும்.

இந்நிலையில், திமுக கூட்டணியில் அண்மையில் இணைந்த தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.

தேமுதிக தொடங்கியதிலிருந்து இதுவரை நாடாளுமன்றம் சென்றதில்லை.அக்கட்சியின் வரலாற்றில் முதல்முறையாக நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை பெறவிருக்கிறது.இதன்மூலம், தேமுதிகவின் 15 ஆண்டு கனவு நிறைவேறியது.

கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருவதாகச் சொல்லி ஏமாற்றிவிட்டனர். அதோடு எப்போது நாங்கள் கொடுப்பதாகச் சொன்னோம் என்று கேள்வியும் கேட்டார்கள் என அதிமுக மீது தேமுதிகவினர் குற்றம் சாட்டினர்.

இப்போது திமுகவுடன் கூட்டணியில் சேர்ந்தவுடனே தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினரைக் கொடுத்து திமுக ஒரு நம்பகமான கூட்டாளி என்பதை நிரூபித்துவிட்டதென அக்கட்சியின் தலைவர் பிரேமலதாவும் தேமுதிக தொண்டர்களும் மகிழ்ச்சியுடன் சொல்லி வருகின்றனர்.

மு.க.ஸ்டாலினின் இந்த நடவடிக்கை தமிழ்நாட்டு அரசியலில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது என்கிறார்கள்.

Leave a Response