சசிகலா கட்சியின் தேர்தல் அறிக்கை – முக்கிய அம்சங்கள்

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாகப் பேசியிருந்த சசிகலா,சென்னையில் குளிர்சாதன அறையில் அமர்ந்து கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கக் கூடாது.நம் துரோகிகளும் அதைத்தான் செய்து வருகின்றனர்.நாங்களும் ஒரு தேர்தல் அறிக்கையை கொடுக்க உள்ளோம்.
அதற்காக,மக்கள் பிரச்னைகளை தொகுதிகள் தோறும் கேட்டபடி வருகின்றேன்.அதை வைத்துக் கொண்டு ஒரு தேர்தல் அறிக்கையை தயார் செய்வோம் எனக் கூறியிருந்தார்.

அதில், 60 தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அவற்றில் முக்கியமானவை…

மகப்பேறு உதவித்தொகையாக தற்போது வழங்கப்படுகின்ற ரூ.18 ஆயிரத்தை உயர்த்தி ரூ.24 ஆயிரமாக வழங்கப்படும்.
அம்மா நலப்பெட்டகம் சரியாக வழங்கப்படும்.
அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படும்.
நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,250 ஆக வழங்கப்படும்.
கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ.4,250 ஆக உயர்த்தப்படும்.
விவசாய மின் இணைப்புகள் துரிதமாக வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
2 இலட்சம் அரசுப் பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும்.
மீனவர்களுக்கு வழங்கக் கூடிய டீசல் மானியம் உயர்த்தப்படும்.
இலவச மடிக்கணினி திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.
போதையில்லா தமிழகத்தை உருவாக்கிட தேவையான அனைத்துச் சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும். தென்மாவட்டங்களில் நிலவும் வன்முறை கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திட தேவையான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படும்.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு 100 சதவீதம் உறுதி செய்யப்படும்.
மாதந்தோறும் அரிசி அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பருப்பு,1 லிட்டர் சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்படும்.
1000 அம்மா உணவகங்கள் அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் துவக்கப்படும்.
10 ஆயிரம் புதியபேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.
நிறுத்தப்பட்ட அனைத்து சேவைகள் கொண்டு வரப்படும்.
முதியோர் உதவித் தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
ஆவின்பால் கொள்முதல் விலை ரூ.4 உயர்த்தி வழங்கப்படும்.

இவை உட்பட 60 தேர்தல் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

Leave a Response