
2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசு போட்டியிடும் 28 தொகுதிகளுக்கான மேலிடப்
பார்வையாளர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரசு கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அகில இந்திய காங்கிரசைச் சேர்ந்த மூத்த பார்வையாளர்கள் முகுல் வாஸ்னிக், உத்தம்குமார் ரெட்டி, குவாசி நிசாமுதின், தமிழ்நாடு பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர்,அஇகா செயலாளர்கள் சூரஜ் எம்.என்.ஹெக்டே, நிவேதித் ஆல்வா
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, இளைய கம்பன் எழுதி, ஸ்டீபன் ராயல் இசையமைப்பில் உருவான ‘தாய்க்கும் தாயான கட்சி’ என்ற காங்கிரசுக் கொள்கை முழக்கப் பரப்புரைப் பாடல் வெளியிடப்பட்டது.
கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கிரிஷ் சோடங்கர் கூறியதாவது….
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் மற்றும் அனைத்துக்கட்சிக் கூட்டங்கள் நடைபெற்று வருவதால் மல்லிகார்ஜுன
கார்கே, இராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரின் தமிழ்நாடு வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் தமிழ்நாட்டில் அவர்கள் பிரச்சாரத்தைத் தொடங்குவார்கள்.
புதுச்சேரி பிரச்சாரத்தின்போது இராகுல் காந்தி கேரளா செல்ல வேண்டியிருந்ததாலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்கூட்டியே திட்டமிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியிருந்ததாலும் அவர்கள்
ஒரேமேடையில் தோன்றவில்லை. இதை வைத்து சில கட்சிகள் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த
முயல்கின்றன.
ஆனால்,மிக விரைவில் இராகுல் காந்தியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இணைந்து பிரம்மாண்டப்
பிரச்சாரத்தை மேற்கொள்வார்கள். காங்கிரசுப் பேரியக்கத்தின் உண்மையான தொண்டர்கள் எப்போதும்
காங்கிரசுக் கட்சியில்தான் இருப்பார்கள். அவர்கள் வெளியே செல்லமாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.


