எடப்பாடி கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன் – சசிகலா உறுதி

அஇபுதமமுக பொதுச்செயலாளர் சசிகலா தென்காசி புதியபேருந்து நிலையத்தில் அவரது கட்சி வேட்பாளருக்காக வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது….

சிறைக்குச் செல்வதற்கு முன் நமது ஆள் ஒருத்தரை (எடப்பாடி பழனிச்சாமி) இங்கே அமரவைத்துச் சென்றேன். அவர் நாற்காலியில் உட்கார்ந்த மறுநாளே மாறிவிட்டார்.அந்தப் பதவியில் அமரவைத்த 60 தினங்களுக்குள் என்னையே கட்சியிலிருந்து நீக்கிவிட்டார்.இன்று சகலமும் நானாக இருக்கவேண்டும் என்று அவர் நினைக்கிறார்.

சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்.
ஒரு மானமில்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார்.எதிர்காலம் வரும் என் கடமை வரும் இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன் என்று எம்ஜிஆர் பாடினார்.

சிறையில் இருக்கும்போது, இந்தப்பாட்டு நமக்குச் சரியாக வருகிறதே என்று நினைத்தேன்.எம்ஜிஆர் நமக்காகவே அன்று பாடி வைத்துச் சென்றுள்ளார் என்று புரிந்துகொண்டேன்.தமிழ்நாட்டில் துரோக கூட்டம் என்று ஒன்று இருக்கிறது.அது யார் என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். தனக்கு ஆதாயம் வேண்டுமெனில் தமிழ்நாட்டை பட்டா போட்டு கொடுத்து விடுவார். எல்லோரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு பதிலாக பத்துமுறை தோல்வியைச் சந்தித்து இருக்கிறார்.

வினை விதைத்தவன் வினை அறுப்பான்,திணை விதைத்தவன் திணை அறுப்பான்.வினை விதைத்ததால்தான் அவர் இதுவரை வெற்றி பெறவில்லை.நான் உதவி செய்தது பெரிய தவறாகப் போய்விட்டது.நான் எல்லோருக்கும் ஏணியாகத்தான் இருந்திருக்கிறேன்.ஆனால்,அவர் மேலே ஏறிவிட்டு ஏணியை உதறிவிட்டார்.இதற்கு தமிழ்நாட்டு மக்களிடம் கட்டாயம் பதில் சொல்ல வேண்டும்.எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் இந்தத் தேர்தலில் பாடம் கற்பிக்கவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response