நான் ஆட்சிக்கு வந்ததும் டாஸ்மாக்கை மூடுவேன் – சீமான் உறுதி

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பால்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆலங்குளத்தில் நேற்று பரப்புரை செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது….

உங்களுக்கு சாதிக்கான தலைவன் வேண்டுமா? சாதிக்கத் துடிக்கும் தலைவன் வேண்டுமா?. நாட்டை ஆள்பவன் இறைவனைப்போல் இருக்கவேண்டும். சாதனைகளைச் சொல்லி வாக்குக் கேட்கத் தகுதி இல்லாதவர்கள் காசு கொடுத்து வாக்கை வாங்குகிறார்கள்.உரிமையை ஒருபோதும் இழக்கக்கூடாது.

காசு இல்லாததால் தொடர்ந்து நான் தோற்றுத் தோற்று நிற்கிறேன். என்றைக்கு என்னை உணர்கிறீர்களோ அன்றைக்கு என்னை வெல்ல வைத்தால் போதும். நான்குமுறை நான் போட்டியிட்டுள்ளேன்.ஆனால் நான் தோற்கவில்லை.நீங்கள்தான் தோற்றுப்போனீர்கள்.தோல்விக்குப் பயந்து 2 தொகுதிகளில் போட்டியிடவில்லை. சாதி, மதத்தைச் சொல்லி நான் வாக்குக் கேட்கவில்லை. தமிழன் என்ற இனத்தைச் சொல்லி வாக்குக் கேட்கிறேன். நான் வாக்குக்குக் காசு கொடுக்கமாட்டேன்.ஆனால்,ஆகச்சிறந்த வாழ்க்கையைத் தருவேன்.

அதிமுக ஆட்சியில் தந்தை,மகனை அடித்துக் கொன்றார்கள். இப்போது பனை ஏறும் தொழிலாளியை காலில் சுட்டுள்ளார்கள்.நான் கள் இறக்குகிறேன்.மீண்டும் தேதி குறித்து கள் இறக்குவேன்.என்னை வந்து சுடுங்கள் பார்க்கலாம்.நான் வென்று வருவேன்.துப்பாக்கியால் சுட்டவர்களை அதே பனையில் கட்டிவைத்து, பச்சைமட்டையால் அடிப்பேன்.

தூத்துக்குடியில் துப்பாக்கியால் சுடச் சொன்னது யார்?. தந்தை, மகனை அடித்துக் கொன்றது யார்?. பனை தொழிலாளியைச் சுடச் சொன்னது யார்?. இவர்களுக்கு மானங்கெட்டு ஓட்டு போடப் போகிறீர்களா?.

கள்ளச்சாராயம் காய்ச்சியவனை சுடாதவர்கள், பதநீர் இறக்குகிறவனை சுடுகிறார்கள் என்றால் நோக்கம் என்ன?. துப்பாக்கியால் சுட்டவரை டிஸ்மிஸ் செய்யாத இந்த ஆட்சியை டிஸ்மிஸ் செய்வோம்.

கள்ளச்சாராயம் குடித்து இறந்தவருக்கும், நடிகனை பார்க்கச் சென்று நெரிசலில் சிக்கி இறந்தவருக்கும் ரூ.10 இலட்சம் கொடுத்தார்கள். 2 கால்களிலும் சுடப்பட்டவரின் குடும்பத்துக்கு என்ன கொடுத்தீர்கள்? அவரது குடும்பத்துக்கு நிவாரணம் கொடுக்க வேண்டும். மக்களிடம் கையேந்தியாவது அந்தக் குடும்பத்தைக் காப்பாற்றுவேன். நான் வென்று வருவேன். நான் டாஸ்மாக்கை மூடுவேன், பனை, தென்னை, ஈச்ச மர கள் இறக்குவதை திறந்துவிடுவேன்.

தேர்தலில் உங்கள் தீர்ப்பை மாற்றி எழுதுங்கள்.இதுதான் உங்களுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு.யார் நல்லாட்சி கொடுத்தது,யார் நல்லாட்சி கொடுக்கப் போகிறார் என இரண்டே பேருக்குத்தான் போட்டி.

காமராஜர் நல்லாட்சி கொடுத்தார்.அவரைவிடச் சிறந்த ஆட்சியை நான் கொடுப்பேன்.எனக்கு ஓட்டுப்போடுங்கள், போடாமல் போங்கள்.ஆனால் காங்கிரசு, பாஜக, திமுக, அதிமுகவுக்கு ஓட்டுப் போடாதீர்கள்.

தியேட்டரில் விசில் அடித்து, தெருவிலும் விசில் அடித்துத் திரியாதீர்கள். ரோடுஷோ பார்த்து மயங்காதீர்கள். இதுவரை என்னோடு நீங்கள் நிற்கவில்லை. இனியாவது என்னோடு நில்லுங்கள்

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response