
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் மற்றும் ஈரான் இராணுவம் இடையே தற்காலிக போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், இருதரப்பினரும் பங்கேற்கும் அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தான் தலைநகர்
இஸ்லாமாபாத்தில் இன்று நடைபெறுகிறது.
இதில் பங்கேற்க அமெரிக்க துணைஅதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழுவினர் பாகிஸ்தான்
விரைந்துள்ளனர்.ஈரான் தரப்பில் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப், வெளியுறவு அமைச்சர்
அப்பாஸ் அராக்சி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் மற்றும் ஈரான் இராணுவத்துக்கு இடையே பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் போர் நடைபெற்று வந்த நிலையில்,ஏப்ரல் 8 ஆம் தேதி தற்காலிக போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா, ஈரான் பிரதிநிதிகள் பங்கேற்கும் அமைதிப் பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.
இதில், அமெரிக்கா தரப்பில் துணைஅதிபர் ஜே.டி.வான்ஸ்,சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப்,அதிபர் ட்ரம்பின் மருமகன் ஜெராட் குஷ்னர் ஆகியோரும்,ஈரான் தரப்பில் அந்தநாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப், வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, வெளியுறவு துணைஅமைச்சர் மஜித் தக்த் ரவஞ்சி ஆகியோரும்
பங்கேற்கின்றனர்.
சமரச தூதர்களாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இராணுவ தளபதி அசிம் முனீர், வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் ஆகியோர் செயல்பட உள்ளனர்.
பேச்சுவார்த்தையில் பங்கேற்க, அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் நேற்று சிறப்பு விமானத்தில் இஸ்லாமாபாத் புறப்பட்டார்.அப்போது, ஈரானுடன் பேசவேண்டிய விவகாரங்கள் குறித்து அதிபர் ட்ரம்ப் தெளிவான வழிகாட்டுதல் வழங்கியுள்ளார்.அதன்படி பேச்சுவார்த்தை நடத்துவேன்.எங்களோடு ஈரான் விளையாட முயன்றால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்று அவர் கூறினார்.
ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், லெபனான் மீது இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறது. இது போர்நிறுத்த ஒப்பந்த மீறல் ஆகும். தாக்குதலை உடனே நிறுத்தவேண்டும்.நாங்கள் மீண்டும் துப்பாக்கியைத் தூக்கத் தயங்கமாட்டோம்.எந்தச் சூழலிலும் லெபனான்
மக்களைக் கைவிடமாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
இருதரப்பும் இப்படி முறுக்கிக் கொண்டு நிற்பதால் இன்றைய சமாதான பேச்சுவார்த்தை வெற்றி பெறுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. சமாதானம் ஏற்பட வேண்டும் போர் நிரந்தரமாக நிற்கவேண்டும் என உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.


