
நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ஜனநாயகன்.எச்.வினோத் இயக்கத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தணிக்கைச் சிக்கல் காரணமாக இதுவரை வெளியாகவில்லை. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, படத்தை மறுதணிக்கைக் குழு கடந்த மாதம் பார்த்தது. படத்துக்கு விரைவில் தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சூழலில்,ஜனநாயகன் படத்தில் இடம்பெற்றுள்ள சுமார் 5 நிமிட காட்சிகள் இணையத்தில் 9 ஆம் தேதி
வெளியானது. பல்வேறு வலைதளங்களிலும் இது வேகமாக பகிரப்பட்டது. இதனால், படத்தயாரிப்பு நிறுவனமும், படக்குழுவினரும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில்,ஜனநாயகன் முழுப்படமும் நேற்று அதிகாலை இணையத்தில் சட்டவிரோதமாக மர்ம நபர்களால் வெளியிடப்பட்டது. இணையம் மற்றும் வலைதளங்களில் இதுவும் வேகமாகப் பகிரப்பட்டது.
முழுப்படமும் இணையத்தில் வெளியானது திரைப்படதுறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முழுப்படத்தையும் சட்ட விரோதமாக வெளியிட்டதற்கு நடிகர் சங்கம்,தயாரிப்பாளர்கள் சங்கம்,தொழிலாளர்கள் சங்கம், விஷால்,ரஜினிகாந்த்,சூர்யா,சிரஞ்சீவி,சிவகார்த்திகேயன்,விஜய் ஆண்டனி,ஜீவா,ஜி.வி.பிரகாஷ் குமார் உட்பட திரையுலகினர் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அப்படத்தின் உள்ளடக்கம் தொடர்பான சர்ச்சையும் எழுந்துள்ளது.
நேற்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இந்திய தேசிய லீக் கட்சி தமிழ்நாடு தலைவர்
அப்துல்ரகீம், ஜனநாயகன் படம் குறித்து புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது….
ஜனநாயகன் திரைப்பட முன்னோட்டம் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.இந்த முன்னோட்டக் காட்சியில் வெடிகுண்டு செய்து ஊர் திருவிழாவில் பொதுமக்கள் கூடும் இடத்தில் முஸ்லிம் குண்டு வைப்பதுபோல் காட்சி வருகிறது. தேர்தல் நேரத்தில் முஸ்லிம் வெறுப்பு பிரசாரம் செய்து தேர்தலை நிறுத்தவோ அல்லது வன்முறை நடத்தவோ ஜோசப் விஜய்யும், இப்படத்தினை இயக்கிய இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் முயற்சி செய்வதாகத் தோன்றுகிறது. ஆகவே நடிகர் ஜோசப் விஜய் மற்றும் இயக்குநர் எச்.வினோத், கே.வி.என் புரொடக்ஷன் உரிமையாளர் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.


