
பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மகனும் தீவிர தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளருமான பொழிலன்,சில் நாட்களுக்கு முன் தமிழ்நாடு அரசுக்கு ஒரு கோரிக்கை வைத்திருந்தார்.
அதன் விவரம்….
நம் நாடு தமிழ்நாடு! தாயக நாளைக் கொண்டாடு!
தமிழ்நாடு பெயர் சூட்டப்பட்ட நாள் விழா கொண்டாடுவோம்!..
தமிழ்நாடு அரசு சூலை 18 -ஆம் நாளைத் தமிழ்நாடு விழா நாளாக அறிவித்திருக்கிறது.பல ஆண்டுகளாகத் தமிழ் அறிஞர்களும் இயக்கங்களும் நடந்தி வந்த நவம்பர் 1 -ஆம் நாளில் தமிழ்நாடு விழாவை 2018 தொடங்கி மூன்றாண்டுகளாகப் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு முன்னெடுத்து நடத்தியதன் அடிப்படையில் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 1-ஆம் நாளே சிறப்புற நடந்துவதே சிறந்தது.
அரசு அறிவிப்புப்படி தமிழ்நாடு பெயர் சூட்டப்பட்ட நாளாகச் சூலை 18 ஆம் நாளையும் கொண்டாடலாம்.
நமக்குத் தமிழ்நாடு முற்றுரிமை பெறவேண்டும் என்பதுதான் இலக்கும்,நோக்கமும்.
ஆனால்,தமிழ்நாடு மாநிலமாக உருக்கொள்ள நடந்த முயற்சிகளைக் குறைத்து மதிப்பிட்டுவிடமுடியாது.
1911 தொடங்கி மாநில உரிமைகளுக்காக நடந்த முயற்சிகள் எண்ணற்றவை.
1947 க்கு முன்பாகப் பேராயக்(காங்கிரசுக்) கட்சியும்,பொதுவுடைமைக் கட்சியும்கூட மொழிவழி மாநிலங்களை வலியுறுத்தியும் மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரங்கள் வேண்டும் என்றும் போராடின.
1947 – இந்தியா விடுதலை பெற்றதாக அறிவிக்கப்பட்டதன் பிறகு காங்கிரசுக் கட்சி மொழிவழி மாநிலப் பிரிவுகளை மறுத்தது.
1947 தொடங்கி 1956 வரை மொழிவழி மாநிலக்களுக்காக நடந்த முயற்சிகள் அதிகம்.
எண்ணற்ற போராட்டங்களுக்குப் பிறகு பல பகுதிகளை இழந்து ஒரு வழியாகத் தமிழ்நாடு மாநிலமாக ஓர் அரசைப் பெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சில பகுதிகள் இழந்து எஞ்சிய குமரிமாவட்டம் தாய்நில அரசோடு 1956 நவம்பர் 1ஆம் நாள்தான் இணைந்தது.
ஆக,நவம்பர் 1 ஆம் நாள் தமிழ்நாடு மொழி மாநில அரசாக உறுதிப்பட்ட நாள்.
எனவே,அந்நாளைக் கொண்டாடுவது என்பது அந்த உரிமை மீட்போடு,தமிழ்நாட்டின் முற்றுரிமையைப் பெற வேண்டுமான நோக்கத்தைக் கொண்டது.
அதன் காரணமாக..
நவம்பர் 1 ஆம் நாள் விழாவாகக் கொண்டாட வேண்டிய நாள்.
அதேபோல்..
தமிழ்நாடு என்று பெயர் வைப்பதற்கும் பெரும் போராட்டம் நடத்த வேண்டி இருந்தது.
1956 இல் மொழி மாநிலமாகப் பிரிந்ததிலிருந்து 1968 வரை பன்னிரண்டு ஆண்டுகள் தமிழ்நாடு பெயர் வைப்புக்காகப் போராட வேண்டியிருந்தது.
சங்கரலிங்கனார் அதற்காக உண்ணாநோன்பு இருந்து ஈகியாக உயிர் துறந்தார்.
காங்கிரசுக் கட்சி தமிழ்நாடு பெயரைக் கடுமையாக மறுத்தது.பொதுவுடைமைக் கட்சியும்,தி க வும்,திமுக வும், தமிழ்அறிஞர்களும் போராடினர்.
பெற்ற குழந்தைக்குப் பெயர் வைப்பது போன்று எளிதாகத் தமிழ்நாட்டின் பெயரை வைத்துவிடமுடியவில்லை.. பெரும் போராட்டத்தின் இறுதியிலேயே தமிழ்நாடு பெயர் வைக்கப்பட்டது.
எனவே,தமிழ்நாடு பெயர் வைக்கப்பட்ட நாளும் கொண்டாடப்பட வேண்டிய முகாமை நாள்தான்.
எனவே, தமிழ்நாடு அரசு இந்த இரண்டு நாள்களுக்கும் முகாமை கொடுத்து
இரண்டு நாள்களையும் கொண்டாடிட வேண்டும் எனத் தமிழ்நாட்டு அரசைக் கேட்டுக்கொண்டோம்.
அவ்வகையில் சூலை 18 ஆம் நாளாகிய இன்றைய நாளை தமிழ்நாடு (பெயர் உரிமை) நாள் விழாவாகக் கொண்டாடலாம்.
ஏதோ ஒரு இடத்தில் ஒரு நிகழ்ச்சியை நடத்தி விடுகிற அளவில் நிறுத்திவிடாமல் தமிழ்நாடு எங்கும் மூளை முடுக்கில் எல்லாம் தமிழ்நாடு நாள் விழாவை(எந்த ஒரு நாளிலாவது) மக்கள் விழாவாகத் தமிழ்நாட்டுக்குரிய கொடியாக அறிவிப்பு செய்து அதையேற்றிக் கொண்டாடுகிற பெருவிழாவாகத் தமிழ்நாடு அரசு நடத்தியாக வேண்டும்.
கர்நாடகாவில் கர்நாடகம் முழுக்க முதலமைச்சர் உள்ளிட்டு அனைவரும்கொண்டாடுவது போல் தமிழ்நாட்டிலும் கொண்டாடப் பெறவேண்டும்.
தமிழ்நாடு அரசு
ஏன் தயக்கம்கொள்கிறது?..
நம் விழாவை நாம் கொண்டாட
ஏன் அச்சப்பட வேண்டும்?
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இன்றைக்கு முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில்….
தமிழரின் தொன்மை, வரலாறு,பண்பாடு,மொழியுணர்வைப் போற்றும் வகையில் நமது மாநிலத்திற்கு “தமிழ்நாடு” எனப் பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இந்நாளில்,தமிழ்மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த “தமிழ்நாடு நாள்” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மெட்ராஸ் மாநிலமாக உருவான நவம்பர் 1-ஆம் நாளையும்,தமிழ்நாடு’ எனும் பெயர் சூட்ட பேரறிஞர் அண்ணா அவர்களால் சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ஆம் நாளையும் இந்த அரசு கொண்டாடும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சங்கம் கண்ட செம்மொழியின் தாயகமாக,சமத்துவமும், சமூகநீதியும் தழைத்தோங்கி,கல்வியிலும், தொழில்நுட்பத்திலும்,திறன்மிகு மனிதவளத்திலும் சிறந்தோங்கும் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம்!
தமிழின் இனிமையும்,தமிழரின் உயரியபண்பாடும்,மனிதநேய மரபும் தலைமுறைகள் கடந்தும் தழைத்தோங்கட்டும்.தமிழ்நாடு உருவாக உழைத்திட்ட தியாக சீலர்களை இந்நாளில் நினைவுகூர்ந்து வணங்கிடுவோம்!
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
தமிழ்த் தேசியப் போராளி பொழிலன் விடுத்த கோரிக்கையை ஏற்று முதல்வர் விஜய் விடுத்துள்ள அறிக்கை கவனம் பெற்றுள்ளது.


