தமிழ் மீனவர்கள் தாக்குதலுக்கு ஒன்றிய அரசு கண்டனம் – இப்படி ஒரு பின்னணியா?

காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த ஆனந்தவேல் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் அதே ஊரைச் சேர்ந்த மாணிக்கவேல், தினேஷ், காரத்திகேசன், செந்தமிழ், பட்டினச்சேரியை சேர்ந்த மைவிழிநாதன், வெற்றிவேல், தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டம் சந்திரப்பாடியை சேர்ந்த நவெந்து, வானகிரியை சேர்ந்த ராஜேந்திரன், ராம்கி, நாகை மாவட்டம் நம்பியார் நகர் சசிகுமார், நந்தகுமார், பாபு, குமரன் ஆகிய 13 பேர் சனவரி 26 ஆம் தேதி காலை 10 மணியளவில் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.

சனவரி 27 இரவு 9.30 மணியளவில் கோடியக்கரைக்கு அருகே இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் 13 மீனவர்களும் விசைப்படகுடன் கைது செய்யப்பட்டனர். மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டபோது படகிலிருந்து தவறி கடலில் விழுந்த இரண்டு மீனவர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்துக்கு உடனடியாக இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் தரப்பில், ‘பாக் ஜலசந்தியில் உள்ள டெல்ஃப்ட் தீவுக்கு அருகே இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில், இருவர் படுகாயமடைந்தனர், மேலும் மூவர் காயமடைந்தனர். 13 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. படுகாயமடைந்த இரண்டு மீனவர்களும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அங்கு இந்திய தூதரக அதிகாரிகள் அவர்களுக்கு உதவி வழங்க சென்றனர்.

இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சகம், டெல்லியில் உள்ள இலங்கையின் (பொறுப்பு) தூதரை அழைத்து எதிர்ப்பை பதிவு செய்தது. கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் மூலமும் இந்தப் பிரச்சினையை இலங்கை அதிகாரிகளிடம் எழுப்பியது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே பலமுறை தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் துப்பாக்கிச்சூடு ஆகியனவற்றைச் செய்திருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் அதுகுறித்து தொடர்ந்து பேசியும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

அப்போதெல்லாம் ஒன்றிய அரசு தரப்பிலிருந்து எவ்வித நடவடிக்கையும் இருக்காது.

ஆனால் இப்போது, காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு மற்றும் கைது நடவடிக்கை என்றதும் உடனடியாக ஒன்றிய அரசின் வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.அதோடு இலங்கை தூதரை அழைத்து எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறது.

ஒன்றிய அரசின் இந்தச் செயல்பாடு வரவேற்கத்தக்கது.

ஆனால் இதற்கும் ஒரு பின்புலம் இருக்கிறதென அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

அது என்ன?

கட்ந்த சில நாட்களுக்கு முன்பு,இலங்கை அமைச்சரவை ஒரு முடிவு எடுத்திருந்தது.

கடந்த ஆண்டு மே மாதம் அதானி குழுமத்திற்கும் அப்போதைய ரணில் விக்கிரம சிங்க தலைமையிலான இலங்கை அரசுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி இலங்கையின் வடமேற்குப் பகுதியில் அதானி குழுமம் காற்றாலைகளை நிறுவி அதன் மூலம் மின்சாரம் தயாரித்து இலங்கை அரசுக்கு ஒரு கிலோ வாட் 0.0826 டாலர்களுக்கு விற்பனை செய்யும் என ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, இப்போதைய அனுர குமார திசநாயக தலைமையிலான இலங்கை அரசு அதானி குழுமத்துக்கு வழங்கிய மின்சார கொள்முதல் ஒப்பந்தத்தை திடீரென ரத்து செய்துள்ளது என்றும் இது அதானி குழுமத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவு என்று செய்திகள் வெளியாகின.

இச்செய்தி வெளியானதும், இந்த ஒப்பந்தம் இரத்து செய்யப்படவில்லை என அதானி குழுமம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன்பின் இலங்கை அமைச்சர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவும் இதை உறுதிப்படுத்தினார்.

அதேநேரம், அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் விற்பனைத் தொகையை ஏற்க முடியாதெனவும் அது தொடர்பாக புதிய விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது.

இதுவும் அதானி குழுமத்துக்குப் பின்னடைவுதான் என்று சொல்லப்படுகிறது.

அதானி குழும ஒப்பந்த விசயத்தில் அனுர குமார அரசாங்கம் இந்த முடிவை எடுத்ததால் அந்த அரசு மீது அதானி கோபம் கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

அதானியின் கோபம் காரணமாகத் தான் தமிழ்நாடு மீனவர் மீதான தாக்குதலைக் காரணமாக வைத்து இலங்கை அரசாங்கத்தை இந்திய ஒன்றிய அரசு கண்டித்துள்ளது என்று கூறுகிறார்கள்.

Leave a Response