
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி நடக்கிறது.இத்தேர்தலில்,திமுக,அதிமுக,தவெக,நாதக,இந்திய கம்யூனிஸ்ட் உள்பட 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்தக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து கட்சித் தலைவர்கள் பரப்புரை செய்யும் தேதிகள்
அறிவிக்கப்பட்டுள்ளன.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,இந்திய பொதுவுடைமைக்கட்சி தமிழ்நாடு செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் பரப்புரை மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில்,தவெக தலைவரும் முதல்வருமான விஜய்,வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து,செப்டம்பர் 30 ஆம் தேதி தாராபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.மேலும் வாக்குசேகரிப்பு இறுதிநாளான அக்டோபர் 4 ஆம்தேதி சாலைவலம் நடத்தி வாக்கு சேகரிக்க உள்ளதாக தவெக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதையொட்டி பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.இதற்காக தாராபுரம்- உடுமலை சாலையில் சுமார் 54 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண்குமார் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முகாமிட்டு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் என்று சொல்லப்படுகிறது.
தாராபுரம் தொகுதிக்கு இரண்டுமுறை விஜய் பரப்புரைக்குச் செல்லக் காரணம் இருக்கிறதாம்.உளவுத்துறை அறிக்கைப்படி,மதுராந்தகத்தில் அதிமுகவும் தாராபுரத்தில் திமுகவும் வெல்லும் என்று சொல்லப்படுகிறது.
இதனால் திடுக்கிட்ட ஆளுங்கட்சியினர்,மதுராந்தகத்தில் அதிமுக வெற்றிக்கு பாமக வாக்குவங்கி உதவியாக இருக்கும் என்றெண்ணி அக்கட்சியினரிடம் பேசி அதிமுகவுக்கு ஆதரவில்லை என்று சொல்லவைத்துவிட்டார்கள்.
பாமக ஆதரவில்லையென்பதால் அங்கு அதிமுக வெல்லமுடியாது என்பது அவர்களுடைய எண்ணம்.
தாராபுரத்தில் திமுக வெல்வதைத் தடுக்க வேண்டுமெனில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்பதால் விஜய் இருமுறை அங்கு பரப்புரைக்குச் செல்லவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.


