
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி தொகுதியில் நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் சத்தியபாமா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.ஆனால்,அவர் பதவி ஏற்ற ஒரேவாரத்தில் தனது பதவியை விட்டுவிலகி ஆளும்கட்சிக்கு மாறினார்.இதையடுத்து காலியானதாக அறிவிக்கப்பட்ட தாராபுரம் தொகுதிக்கு அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில்,ஆளும்கட்சி வேட்பாளராக சத்தியபாமா போட்டியிடுகிறார்.
தற்போது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள சத்தியபாமாவுக்கு அவர் செல்லும் இடம் எல்லாம் மக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டி வருகிறார்கள். இதனால் சத்தியபாமா காவல்துறை பாதுகாப்புடன் கிராமங்களுக்குச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.
நேற்று குண்டடம் ஊராட்சி ஒன்றியம் பெரிய குமாரபாளையம்,நல்லிபாளையம் பகுதியில் ப்ரப்புரை வாகனத்தில் சென்று வாக்கு சேகரிக்க முயன்றார்.அப்போது,அங்கு திரண்டுவந்த கிராம மக்கள் சத்தியபாமாவை பேசவிடாமல் பல கேள்விகளைக் கேட்டு துளைத்தெடுத்தனர்.
உங்கள் ஆட்சியில் விலைவாசி, மின்சார கட்டணம் அனைத்தையும் உயர்த்தி விட்டீர்கள்.விவசாயிகளின் கடனை இரத்து செய்வதாகக் கூறிவிட்டு அதற்கு சில கட்டுப்பாடுகளை விதித்து யாருக்கும் பயன்படுத்த முடியாமல் செய்து விட்டீர்கள் என்று கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.
அப்போது அந்த மக்களுடன் நின்ற ஒரு நபர், நீங்க ரூ.50 கோடி வாங்கிட்டுதானே தவெவுக்குப் போனீங்க என சரமாரியாக கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களுடைய உரையாடல் விவரம்…
சத்தியபாமா: திமுகவுடன் ஒன்றாக சேர்ந்து எப்படி பயணிக்க முடியும்? ஒரு தொண்டராக அதை ஏற்றுக்கொள்ள முடியுமா?
நபர்: நாங்க உங்களுக்குதான் ஓட்டுபோட்டோம்.ஓட்டுபோட்டவங்களுக்கு என்ன பதில்? அதற்கு பதில் சொல்லுங்க. நீங்க பணம் வாங்கிக்கொண்டுதான் போனீங்க.50 கோடி பணம் வாங்குனீங்க.நான் சத்தியமா சொல்றேன்.
சத்தியபாமா: நான் பணம் வாங்கவில்லை.என் பிள்ளை மேல சத்தியமா சொல்றேன்.
நபர்:நான் என் பிள்ளை மேல சத்தியமா சொல்றேன்.நீங்க 50 கோடி ரூபாய் பணம் வாங்கிக்கொண்டுதான் போனீங்க
சத்தியபாமா: நன்றி விசுவாசம் எல்லாம் இருக்கிறது.
நபர்:நன்றி விசுவாசம் இருந்தால் இங்கு வந்திருக்க மாட்டீர்கள்.எங்களுக்கு ஆதங்கம் இருக்கிறது மேடம்.ஓட்டு போட்ட தொண்டன்.விடிய விடிய கால் வலிக்க நடந்து,பசி,சோறு இல்லாம போனது எனக்குதான் தெரியும்.
சத்தியபாமா: நானும் செலவு செய்தேன்.
நபர்: எவ்வளவு செலவு பண்ணீங்க… (தொடர்ச்சியாக கேட்டு நச்சரித்தார். அவரை மற்றவர்கள் தடுத்தும் தொடர்ந்து அவர் எவ்வளவு செலவு செய்தீர்கள்? என கேட்டார்.) நான் ஓட்டுபோட்ட தொண்டன் கேட்பேன்.
சத்தியபாமா: நான் பணம் வாங்கியதற்கு ஆதாரம் இருக்கா? கொடுங்க.
நபர்: ஸ்டாலினும்,எடப்பாடியும் பேசிய ஆதாரம் இருக்கா,அத நீங்க கொடுங்க.
சத்தியபாமா: பாண்டிச்சேரியில் வச்சி பேசியத நான் தரேன்.நீ நான் பணம் வாங்கியத கொடு.நான் தரேன்.இப்படி பேசவேண்டாம்.
நபர்: நீ கொடு.நான் தரேன்.ஓட்டு போட்டவன் கேட்பேன்.அந்த சர்டிபிகேட்ட கொடுங்க.நீங்க கையெழுத்து போட்டத கொடுங்க.
சத்தியபாமா:காசு வாங்குனா இங்க வந்து தைரியமா நிற்கமுடியாது.நான் தைரியமா நிற்கிறேன்னா நான் யாருகிட்டேயும் பணம் வாங்கல.
இருப்பினும் அந்த நபர் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால், அங்கிருந்து சத்தியபாமா வாக்கு கேட்காமல் ஓட்டம் பிடித்தார். செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் கூடி நின்று விரட்டி அடிப்பதால் சத்தியபாமா அதிர்ச்சியில் உள்ளார்.
தாராபுரம் தொகுதியில் மடத்துபாளையம்,சின்னையகவுண்டம்பாளையம்,பனமரத்துபாளையம்,உப்பாறு அணை, பூளவாடி செல்லும் சாலையின் அனைத்துப் பகுதிகளிலும் தவெக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு எதிராக பரபரப்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில்,தாராபுரம் மக்களின் கேள்வி.ஏன் இந்த ராஜினாமா? யார் சொல்லி இந்த துரோகம்? வெற்றி பெற்ற பிறகு தாராபுரம் மக்களை ஏன் கைவிட்டீர்கள் சத்தியபாமா’ என அச்சிடப்பட்டுள்ளது.
தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா குண்டடம் அருகே நல்லிபாளையம் கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க சென்றபோது,தவெக ஆட்சி வந்த பிறகு விலைவாசி எல்லாம் உயர்ந்துவிட்டது. ஏன் அதை கட்டுப்படுத்தவில்லை. மின்சார கட்டணத்தை ஏற்றி விட்டீர்கள்.எங்கள் ஊருக்கு ஓட்டு கேட்க வராதீர்கள்.பருப்பு விலை, அரிசி விலை, சர்க்கரை விலை என அடிப்படை உணவுப்பொருள் விலை அத்தனையும் ஏறிப்போச்சு.காவிரி தண்ணிக்கு என்ன ஸ்டெப் எடுத்தீங்க? கிராமசபை கூட்டத்தில் என்ன சொன்னீங்க.காவிரி தண்ணி வரும்னு சொன்னீங்க’ என கிராம மக்கள் கேட்டு கூச்சலிட்டதால் அங்கும் வாக்கு சேகரிக்காமல் கிராமத்தை விட்டு வெளியேறினர்.
கிராமமக்களின் எதிர் கேள்விக்கு பதில்கூற முடியாமல்,உங்க இஷ்டத்திற்கு நீங்கள் வாக்களித்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு வேட்பாளருடன் பரப்புரைக்கு வந்த முன்னாள் அதிமுக மாவட்ட அவைத்தலைவர் பி.கே.ராஜ் கூறிவிட்டு வெளியேறினார்.


