
நேற்று திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையில் பங்கேற்ற இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது….
சட்டமன்றத்தில் எங்கள் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும்,அவர்களின் செயல்பாடுகளும் மக்கள் நலன் சார்ந்த குரலும் எப்போதுமே மிகச்சிறப்பாக இருக்கும்.வெறும் 4 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தாலும்,மக்கள் நலன்காக்க நாங்கள் மட்டுமே குரல் கொடுத்து வருகிறோம்.இந்தத்தேர்தல் வெற்றி, தோல்விக்கான பிரசாரம் மட்டுமல்ல.உழைக்கும் பாட்டாளி மக்களை ஒன்றுபடுத்துவதற்கான களம்.இன்று கல்வி மற்றும் சுகாதாரத்துறைகளில் நாம் பின்தங்கிய நிலையில் இருக்கிறோம்.எங்கு பார்த்தாலும் தனியார் மயமாகிவிட்டது.
கல்வி மற்றும் மருத்துவத்துறைகள் முழுமையாக அரசுடைமையாக்கப்பட வேண்டும் என்பதே இடதுசாரிகளின் உறுதியான நிலைப்பாடு.மதச்சார்பின்மை என்பதே எங்களின் முதன்மை நிபந்தனை.அதில் உறுதியாக இருக்கும் அமைப்புகளுக்கே எங்களது ஆதரவு.ஆட்சியாளர்கள் தவறு செய்தால் கண்டிப்போம்.நல்லது செய்தால் ஆதரிப்போம். அடக்குமுறைகளும் சீண்டல்களும் கம்யூனிஸ்ட் கட்சிக்குப் புதிதல்ல.
விமர்சனங்களை நாங்கள் எப்போதும் வரவேற்கிறோம்.ஒரு கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு,அந்தப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறொரு கட்சியில் இணைந்து,மீண்டும் அதேதொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை (தவெக) நோக்கி மக்கள் கேள்வி எழுப்புவது மிகவும் அவசியமான ஒன்று.மக்களின் இந்த அரசியல் விழிப்புணர்வை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.


