2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டு தனி அணியாகப் போட்டியிட்டது எடப்பாடி அதிமுக. கூட்டணி முறிவுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தான் காரணம் என பாஜவினரும் அதிமுகவினரும் கூறி வந்தனர். ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாகவும் எடப்பாடி பழனிசாமிக்கு எதுவுமே தெரியாது என தரம் தாழ்ந்து பேசிய காரணத்தினால் கூட்டணி உடைந்ததாகவும் அதிமுகவினர் கூறிவந்தனர்.
தேர்தல் முடிவுக்குப் பின்,அதிமுகவும் பாஜகவும் சேர்ந்து போட்டியிட்டிருந்தால் தமிழ்நாட்டில் குறைந்தது 10 இடங்களிலாவது வெற்றி பெற்றிருக்கலாம். இதற்கு அண்ணாமலையே காரணம் என பாஜக தமிழக தலைவர்கள் டெல்லி தலைமையிடம் கூறினர். இதனை அவர்கள் உண்மை என நம்பிய நிலையில் தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையைத் தூக்கிவிட்டு வேறு ஒரு நபரை தலைவராக நியமித்துவிடலாம் என முடிவு செய்தது.
தமிழ்நாடு தலைவர் பதவியைப் பிடிக்க பாஜகவில் கடும் போட்டி ஏற்பட்டது. நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்திரராஜன், பேராசிரியர் இராமசீனிவாசன் உள்ளிட்டோர் களத்தில் குதித்தனர்.
இதற்கிடையில் பாஜகவும் அதிமுகவும் இரகசிய உடன்படிக்கை செய்துகொண்டதாக புதுத்தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை எல்லா வழிகளிலும் முயற்சி செய்தும் கூட டெல்லி தலைமை கண்டுகொள்ளவில்லை. தனக்குத் தானே சவுக்கால் அடித்தும் செருப்பை இனி அணியப்போவதில்லை என சபதம் எடுத்தார் என்றாலும் கூட பாஜக தலைமை அவரை மாற்றியே தீரும் என தீவிர முயற்சியில் இறங்கியது. இந்தநிலையில் சாட்சியின் காலில் விழுவதை விட சண்டைக்காரரின் காலில் விழுவதே மேல் என எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுனை சந்தித்து இரகசிய பேச்சுவார்த்தையில் அண்ணாமலை ஈடுபட்டார்.
அப்போது, சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த எடப்பாடியார் உச்ச பதவிக்கு வந்துவிட்டார். அவருடன் என்னை ஒப்பிட முடியாது. நமது சமுதாயத்தில் எடப்பாடியார் உயர்ந்த பதவியில் இருப்பதால் நமது சமுதாயத்திற்கே பெருமை ஏற்பட்டுள்ளது. இடையில் நடந்த கசப்பான அனுபவத்தை மறந்துவிட்டு மீண்டும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம். வருமான வரித்துறை நடத்தும் சோதனைகளை எல்லாம் நிறுத்திவிடலாம் என அண்ணாமலை மிதுனிடம் பேசியதாக கட்சி வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.
இதையடுத்து மிதுனை 3 முறை டெல்லிக்கு அழைத்துச் சென்று அமித்ஷாவிடம் பேச வைத்துள்ளார் அண்ணாமலை. இதில் இரகசிய உடன்பாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. என்னால் தான் அதிமுக கூட்டணி உடைந்தது. இனிமேல் அதிமுக நம்முடன் சேராது என அனைவரும் கூறிவரும் நிலையில் அவரது மகனையே நான் அழைத்து வந்துவிட்டேன் என டெல்லி மேலிடத்தில் அண்ணாமலை கூறியதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் இனிமேல் அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேச மாட்டேன் என டெல்லியிடமும் எடப்பாடி பழனிசாமியிடமும் அண்ணாமலை உறுதி கூறியதாகத் தெரிகிறது.
இதனை அமித்ஷா கேட்டுக்கொண்டு, இதற்கு சம்மதம் தெரிவித்ததாகவும் தெரிகிறது. இதனைத் தெரிந்துகொண்ட வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் தலைவர் பதவி போட்டியில் இருந்து விலகிக் கொண்டனர். நயினார் நாகேந்திரனும் போட்டியில் இருந்து விலகிவிடுவார் என்று கூறப்படுகிறது.
வரும் சனவரி 31 ஆம் தேதி அமித்ஷா சென்னை வருகிறார். அப்போது தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடருவார் என அவர் அறிவிப்பார் என பாஜக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் எடப்பாடி மகன் மிதுனும் சந்தித்துப் பேசியது உண்மை தான். இதில் கூட்டணி சேருவது என்பதும் 90 சதவீதம் உறுதியாகிவிட்டது. மிதுனுடைய மிகவும் நெருங்கிய உறவினர் வீட்டில் நடந்த வருமானவரிச் சோதனைக்குப் பின்னரே இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.இதனால், விரைவில் பாஜகவும் அதிமுகவும் கூட்டு சேரும். அண்ணாமலையும் தொடர்ந்து தலைவர் பதவியில் இருப்பார் என எடப்பாடி அதிமுக தரப்பில் சொல்லப்படுகிறது.