ஏமாற்றப்பட்ட தமிழிசை – ஆதரவாளர்கள் வருத்தம்

தமிழ்நாடு பாஜகவில் உள்ள 67 மாவட்டங்களில் 33 மாவட்டங்களுக்கு முதல்கட்டமாக தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான பட்டியல் சனவரி 19 ஆம் தேதி வெளியிடப்பட்டது.அதைத் தொடர்ந்து சனவரி 25 ஆம் தேதி இரண்டாவது பட்டியல் வெளியானது. இதில் 16 மாவட்ட தலைவர்கள் அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில் 14 பேர் கொண்ட 3 ஆவது மாவட்ட தலைவர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

இதுகுறித்து பாஜக மாநில துணைத் தலைவரும், மாநில தேர்தல் அதிகாரியுமான எம்.சக்ரவர்த்தி வெளியிட்ட அறிவிப்பு….

மூன்றாம் கட்டமாக புதிய மாவட்டத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மதுரை நகர்-சி.எம்.மாரிசக்கரவர்த்தி, இராமநாதபுரம்-கே.முரளீதரன், விழுப்புரம் வடக்கு-கே.ஆர்.விநாயகம், திருவள்ளூர் மேற்கு-எம்.அஸ்வின்குமார், திருவண்ணாமலை தெற்கு-கே.ரமேஷ், தென் சென்னை-இ.சஞ்சீவி, சென்னை கிழக்கு-ஜி.குமார், மத்திய சென்னை கிழக்கு-பி.கிரி, மத்திய சென்னை மேற்கு-எஸ்.லதா, சென்னை மேற்கு- ஜி.பாஸ்கர், வட சென்னை கிழக்கு-என்.எல்.நாகராஜ், வடசென்னை மேற்கு- டி.என்.பாலாஜி, தஞ்சாவூர் தெற்கு- பி.ஜெய்சதீஷ், கோயம்புத்தூர் வடக்கு- கருமாரிமுத்து ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.

மாவட்டத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்ட பின்னர் தமிழ்நாடு தலைவர் அறிவிக்கப்படுவார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இம்முறை தமிழ்நாடு தலைவராக தமிழிசை செளந்தரராஜன் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஏனெனில் ஆளுநராக இருந்த அவரை 2024 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பதவி விலகச் சொல்லியது பாஜக தலைமை.அப்போதே மீண்டும் அவருக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் பதவி கொடுக்கிறோம் என்கிற உறுதியும் கொடுத்திருந்தார்களாம்.

இதனால் தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியை எதிர்பார்த்திருந்த தமிழிசைக்கு ஒரு நாடு, ஒரு தேர்தல் விழிப்புணர்வுக் குழுவில் இடம் வழங்கியது தலைமை. இதனால் கடும் அதிருப்தியில் இருந்தார்.

இந்நிலையில் அவருக்கு மேலும் அதிர்ச்சியூட்டும் விதமாக மாவட்டத் தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனராம்.

கடந்த ஆண்டு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென்சென்னை தொகுதியில் பா.ஜ.க குறிப்பிடத்தகுந்த வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்திருந்தது. இதற்குக் காரணம், ஆளுநர் பதவியிலிருந்து விலகி மீண்டும் தேர்தல் அரசியலுக்கு தமிழிசை வந்ததால்,அத்தொகுதி நட்சத்திர தொகுதியாகப் பார்க்கப்பட்டதே காரணம்.

ஆனால், பாஜகவின் ஒரு தரப்பில், பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, இந்தத் தொகுதியில் கிட்டத்தட்ட நான்காண்டுகளுக்கு மேல் வேலை பார்த்ததே காரணம் என்கிறார்கள்.

அந்தத் தொகுதியை தமிழிசைக்கு ஒதுக்கக்கூடாது, எஸ்.ஜி.சூர்யாதான் அங்கு போட்டியிட வேண்டும் என்று அண்ணாமலை சொன்னார். அண்ணாமலை எதிர்ப்பையும் மீறி தமிழிசை அறிவிக்கப்பட்டார்.

இப்போது, எஸ்.ஜி சூர்யா பரிந்துரைத்த தென் சென்னைக்குட்பட்ட சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு குமார் என்பவரையும், தென்சென்னை மாவட்டத்திற்கு சஞ்சீவி என்பவரையும் நியமித்துள்ளார்கள்.

இம்மாவட்டங்களுக்கு, தமிழிசை சவுந்தரராஜன் பரிந்துரை செய்த சென்னை கிழக்கு மாவட்டம் – சிவகுமார் மற்றும் தென்சென்னை மாவட்டம் – அலங்கார் ஆகியோர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே மாநில தலைமை பதவி கொடுக்கிறோம் என்று சொல்லி ஏமாற்றினர்.இப்போது, தென் சென்னை தொகுதியில் உள்ள 2 மாவட்டங்களையும் போட்டியாளரான சூர்யாவுக்கு வழங்கியுள்ளனர்.

இதனால், தமிழிசையும் அவருடைய ஆதரவாளர்களும் பாஜக தலைமை தங்களைத் தொடர்ந்து ஏமாற்றுகிறதே என்கிற வருத்தத்தில் இருக்கிறார்களாம்.

ஆனாலும்,இன்னும் மாநிலத் தலைவர் பதவி அறிவிக்கப்படவில்லை.அதிரடியாக தமிழிசையைத் தலைவராக அறிவிக்க வாய்ப்பும் இருக்கிறது.அதுவரை பொறுத்திருப்போம் என்று அவர்கள் தரப்பிலேயே பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.

இன்னும் சில நாட்களில் முடிவு தெரிந்துவிடும்.

Leave a Response