பீகார் மாநிலம் பாட்னாவில் நேற்று நடந்த குடியரசு தின விழாவில் மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தேசியக் கொடியை ஏற்றினார். அந்த விழாவில் பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமார் கலந்து கொண்டார்.
ஆனால், நேற்று மாலை அம்மாநில ஆளுநர் மாளிகையில் நடந்த தேநீர் விருந்தில் முதல்வர் நிதிஷ் குமார் கலந்து கொள்ளவில்லை. முதல்வர் வீட்டிற்கு முன்பு தான் ஆளுநர் மாளிகை இருக்கும் நிலையில், ஆளுநரின் அளித்த விருந்தில் முதல்வர் நிதிஷ் குமார் கலந்து கொள்ளாதது மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து ஐக்கிய ஜனதா தளம் தலைவர்களிடம் கேட்ட போது, ‘குடியரசு தின அணிவகுப்பின் போது முதல்வர் நிதிஷ் குமார் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்.அவருக்கு அப்போது இலேசான காய்ச்சல் இருந்தது. அதனால் அவரால் ஆளுநர் அளித்த விருந்தில் கலந்து கொள்ள முடியவில்லை. மேலும் நாளை (இன்று) பூர்ணியாவில் நடத்தவிருந்த பிரகதி யாத்திரையையும் ஒத்திவைத்துள்ளார். அதேநேரம் பிரகதி யாத்திரை நாளை மறுநாள் (நாளை) தொடங்கும். மூன்றாம் கட்டமாக நடக்கும் இந்த யாத்திரையானது கதிஹார் தொடங்கி வரும் 30 ஆம் தேதி மாதேபுராவுக்கு சென்றடையும்’ என்றனர்.
பீகாரில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.இந் நிலையில், ஒன்றிய மற்றும் மாநில பாஜக கூட்டணியில் இருக்கும் நிதிஷ் குமார் அந்தக் கூட்டணியில் இருந்து வெளியே வருவார் என்று அவ்வப்போது செய்திகள் வருகின்றன. அதற்கேற்ப ஏதாவதொரு நிகழ்வும் நடக்கும்.
இப்போது ஆளுநர் அளித்த விருந்தில் முதல்வர் நிதிஷ்குமார் கலந்து கொள்ளாததால் மீண்டும் கூட்டணி முறிவு என்கிற பேச்சு பெரிதாகியிருக்கிறது.
இதனால் பீகார் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதற்கு முற்றுப்புள்ளி வைப்பார்களா அல்லது அப்ப்டியே தொடருமா எனப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.