
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்…
தமிழகத்தில் விளையாட்டுப் பிள்ளைகளால் நடத்தப்படும் தவெக கூட்டணி ஆட்சியில்,விவசாயிகளுக்கு ஏற்படும் தொடர் பாதிப்புகள் சொல்லி மாளாத வகையில் உள்ளது.
டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழகத்தில் பல மாவட்டங்களில் விவசாயிகள் பாடுபட்டு விளைவித்த நெல்மணிகளை,இந்த அரசு முறையாக கொள்முதல் செய்வதில்லை என்று புகார்கள் எழுந்தன.அதேநேரம் அரையும்,குறையுமாக கொள்முதல் செய்த நெல்மணிகளை சேமிப்புக் கிடங்குகளில் முறையாகப் பாதுகாக்காததால் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைந்ததாகச் செய்திகள் வருகின்றன.
இவைகளையெல்லாம் மிகுந்த அக்கறையோடு சுட்டிக்காட்டினால்,குறைகளைக் களைய முறையான எந்த நடவடிக்கையும் எடுக்காமல்,பிரச்சினைகளை திசைதிருப்பும் விதத்தில் இந்த தவெக அரசு அலட்சியப்போக்கோடு நடந்துகொள்கிறது.
கடலூர் மாவட்டம் முழுவதும் 120 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்,விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகள் இடப்பற்றாக்குறை காரணமாக வெட்ட வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 5 இலட்சம் நெல்மூட்டைகள் முறையாக தார்பாய் கொண்டு மூடாததால்,கடந்த இரண்டு நாட்கள் பெய்த மழையில் நனைந்து கடுமையாக சேதமடைந்துள்ளது வருந்தத்தக்கதாகும்.
இதுபோன்று மழையில் நனைந்து சேதமடைந்த நெல்மணிகளை அரிசியாக்கி புழுத்துப்போன நிலையில் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் நிலை ஏற்படும்.தவெக ஆட்சியாளர்களின் அலட்சியத்தால்,குறித்த நேரத்தில் கொள்முதல் செய்யாமல் விவசாயிகளின் நெல்மணிகள் சேதமடைகிறது.கொள்முதல் செய்த நெல்மணிகளும் முறையான பராமரிப்பு இல்லாததால் மழையில் நனைந்து விணாகிப் போகிறது.
சொல்புத்தியும் இல்லாமல்,சுயபுத்தியும் இல்லாமல் ஏனோ தானோ என்று செயல்பட்டு தமிழக விவசாயிகளையும், ரேஷன் அரிசியை நம்பியிருக்கும் ஏழை மக்களையும் வாட்டி வதைக்கும் தவெக அரசுக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அத்துடன்,விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து சேமிப்புக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ள நெல்லை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு தவெக அரசை வலியுறுத்துகிறேன்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


