விஜய் அரசு குறித்து சீமான் சொன்ன குட்டிக்கதை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு நடக்கும் இடைத்தேர்தலில்,நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா போட்டியிடுகிறார்.அவரை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாராபுரத்தில் நேற்று முன்தினம் இரவு பரப்புரை செய்தார்.அப்போது அவர் பேசியதாவது….

இந்த இடைத்தேர்தல் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டதாகும்.பதவி ஏற்ற 12 நாளில் எம்எல்ஏக்கள் வேறு கட்சிக்கு போகக்காரணம் என்ன?.ஆளுங்கட்சியில் இருந்தால் மட்டுமே திட்டங்களைக் கொண்டு வரமுடியும் என்று மக்களை ஏமாற்றவா?.

சட்டசபையில் எதிர்க்கட்சியே இருக்கக்கூடாது என்றால் ஒரு கட்சி ஆட்சிமுறையான அதிபர் ஆட்சியைக் கொண்டு வரலாமே.இங்கே நோ ரூல்ஸ் ஒன்லி ரீல்ஸ் தான்.விஜய் மெட்ரோ ரயில்ல போனாரு,அப்புறம் ஜெயிலுக்கு எதுக்கு போனாரு? ஜோசியக்காரன் ஒருத்தர் சொல்லி இருக்கான் ஜெயில்ல உங்களுக்கு ஒரு கண்டம் இருக்குது. அங்க போய் கை நனச்சிட்டு வாங்கன்னு.

பைத்தியக்காரன் அவன் சொல்றான்,உங்களுக்கு திருஷ்டி அதிகமா இருக்கு கருப்பு கோட்டு போட்டுக்கோங்க, நெத்தியில கருப்பு பொட்டு வச்சுக்கோங்கன்னு,அதுக்கு அந்த ஜோசியக்காரனையே முதலமைச்சராக்கிட்டு போயிருக்கலாம்.

ஜோசியக்காரன் உங்க ராசிக்கு கடற்கரையை பார்த்த மாதிரி இருக்கணும் அப்படின்னு சொன்ன உடனேயே அலுவலகத்தை அங்க மாத்தணும்.அரிசி,பருப்பு விலை ஏறிப்போச்சு,பால் விலை ஏறிவிட்டது.ஆவின் பால் நிறுவனம் என்று ஒரு அரசு நிறுவனம் இருந்தது.பால்வளத் துறைக்கு ஒரு அமைச்சர் இருக்கிறார்.ஆனால் அவருக்கு என்ன வேலை என்று அவருக்கே தெரியாது.

கோட்டு போட்ட வெள்ளைக்காரனிடம் இருந்து சுதந்திரம் கேட்டு வேட்டி அணிந்து போராடினோம்.தமிழ்நாட்டில் தற்போது கோட்டு போட்டு கொண்டு சுதந்திர தினத்துக்கு தேசியக்கொடியை ஏற்றுகிறார்கள்.என்ன மாறுதல் வந்தது. இலவசம் இல்லை என்றால்,பன்னாட்டு நிறுனங்களிடம் தமிழகஅரசு கடன் பெற வேண்டியதில்லை.கடன் கொடுத்தவன் நிபந்தனைகளை போட்டு இயற்கை வளங்களை கொள்ளையடிக்கிறான்.

மின்தடை என்று சொல்லக்கூடாது எனச்சொல்கிறார் மின்துறை அமைச்சர் நிர்மல் குமார்,மின் பற்றாக்குறை என்று சொல்லவேண்டும்.இவர் பெரிய இலக்கியவாதி திருத்திச் சொல்கிறார்.மின்தடை மின்தடைதான்.கரண்ட் கட்டுதான். இதைச் சொன்னா பஞ்சாப்பை பாருங்கள் பதினாறு மணி நேரம் மின்சாரம் இல்லாமல் இருக்கிறது…பஞ்சாப்காரனுக்கு நாங்கள் ஓட்டு போடவில்லையே,தாராபுரத்தில் தானே ஓட்டு போட்டோம்.

ஒரு கதை சொல்கிறேன்.ஒரு நரி காட்டை ஆட்சி செய்ய,ஆடுகளிடம் ஓட்டு கேட்டதாம்.நான் ஆட்சிக்கு வந்தால் ஆடுகளுக்கு குளிர்காலத்தில் கம்பளி அளிப்பேன் என்றதாம்.ஆடுகளும் நம்பி நரிக்கு ஓட்டுபோட்டதாம்.வெற்றி பெற்ற நரி ஆடுகளின் தோலை உரித்ததாம்.ஏனென்று ஆடுகள் கேட்க உங்களுக்கு கம்பளி தைக்கத்தான் உங்கள் தோலை உரிக்கிறேன் என்றதாம். உங்கள் வீட்டுக் குழந்தைகள் சொல்லி விசிலுக்கு ஓட்டு போட்டீர்கள்.
விஜய் அரசு,நரி போல வீட்டுவரி உள்பட பல்வேறு வரிகளை உயர்த்தி மக்களின் தோலை உரிக்கிறது.

பொங்கலின் போது தாலிக்கு தங்கம்,3 சிலிண்டர்கள் இலவசம் என்று விளம்பரப்படுத்துகின்றனர்.ஆனால் அரசுப்பணத்தை விரயமாக்காமல் திட்டங்களைக் கொடுத்து ஆட்சி நடத்தியவர்,சேவை அரசை நடத்தியவர் காமராஜர்தான்.நமக்குத் தேவை சேவை அரசுதான்

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response