தில்லியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் பற்றிய தகவல்கள்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் அடுத்தடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி, ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக மாணவர்கள் பேரணியாகப் புறப்பட்டனர்.

ஹோலி ஃபேமிலி மருத்துவமனை அருகே அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். மாணவர்களுக்கும்,காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட போது, அந்தப் பகுதிக்கு இளைஞர் ஒருவர் வந்தார். உங்களுக்கு சுதந்திரம் தானே வேண்டும், எடுத்துக் கொள்ளுங்கள் என்று அவர் கூச்சலிட்டார். மேலும், தான் வைத்திருந்த துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார்.

எனினும், அந்த இளைஞர் துப்பாக்கியால் சுட்டதில் சதப் ஃபரூக் என்ற மாணவருக்குக் கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், முதல்கட்ட சிகிச்சைக்குப் பிறகு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நஜ்மா அக்தர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை கைதுசெய்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில், அவர் 11 ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவர் என்றும், பள்ளிக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து வந்ததும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தை அறிந்ததும், பல்கலைக்கழகத்துக்கு வெளியே ஏராளமான மாணவர்கள் கூடினர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால், இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட மாணவர்களை விடுவிப்பதாக காவல்துறையினர் உறுதியளித்தனர். இதன்மூலம், 7 மணிநேரப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

துப்பாக்கிச்சூடு குறித்த வழக்கை குற்றப்பிரிவுக்கு மாற்றியுள்ளனர். இந்நிலையில், டுவிட்டரில் பதிவிட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி காவல் ஆணையரை கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்களை மத்திய அரசு சகித்துக் கொண்டிருக்காது என்றும், சம்பவத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து டெல்லியில் காவல் துறை தலைமையகம் முன்பு ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக, துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், முகநூலில் தொடர்ந்து நேரலையாக கருத்துகளைத் தெரிவித்து வந்துள்ளார். தாக்குதலுக்குத் திட்டமிட்டுள்ளதாக, கடந்த 29 ஆம் தேதி முதலே பதிவிட்டு வந்துள்ளார். அதில், தான் சுதந்திரம் வழங்க உள்ளதாகவும், தனது குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளுமாறும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இறுதிச்சடங்கின்போது, தனது உடலை காவி நிறத் துணியால் போர்த்துங்கள், ராமரை பாடுங்கள் என்றெல்லாம் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, அவற்றை பேஸ்புக் நிர்வாகம் நீக்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் இந்துமத வெறியர் என்பது தெளிவாகியுள்ளது.

Leave a Response