மோடியைப் புறக்கணித்த அண்ணாமலை – என்ன நடந்தது?

பிரதமர் மோடி கேரள மாநிலம் பாலக்காட்டில் நடைபெறும் தேர்தல் பரப்புரையில் பங்கேற்பதற்காக தனி விமானம் மூலம், நேற்று மதியம் 2 மணிக்கு கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் பாஜக கட்சியின் தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன், ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன், தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன், இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் பாரிவேந்தர், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பிரதமரை வரவேற்றனர்.
பின்னர், பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில், பாஜகவின் முன்னாள் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

அவர் கோவையில் உள்ள வீட்டில் இருந்து கொண்டே பிரதமர் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணித்தாகக் கூறப்படுகிறது.பிரதமரை வரவேற்கும் நிகழ்ச்சியில் அண்ணாமலையின் பெயர் இருந்தும் அவர் கோவை விமான நிலையம் செல்லாமல் இருந்துள்ளார்.

இதற்கு முக்கிய காரணம் அண்ணாமலை கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர், கோவை வடக்கு ஆகிய தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதி தனக்கு ஒதுக்கப்படும் என்று காத்திருந்தார்.ஆனால், அதிமுக கூட்டணியில் கோவை வடக்கு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.இதனால் அவர் கடும் அதிருப்தியில் இருக்கிறார்.அதனாலேயே மோடியைப் புறக்கணித்தார் என்று ஒருபக்கம் சொல்லப்படுகிறது.

இன்னொருபக்கம், கோவை வந்த பிரதமரை வரவேற்​கும் நபர்​களின் பெயர் பட்​டியலில் அண்ணாமலையின் பெயர் இல்லை.பெயர் இருந்​தவர்​கள் மட்​டுமே விமான நிலை​யத்​துக்​குள் அனு​ம​திக்​கப்​பட்​டனர் என்பதாலும், நேற்று அவர் கோவை​யிலும் இல்லை என்​ப​தா​லும் அவர் இந்​நிகழ்​வில் பங்​கேற்க முடி​யாமல் போன​தாகவும் சொல்லப்படுகிறது.

அந்தப் பட்​டியலில் அண்​ணா​மலை பெயர் இல்லை என்​றாலும் அதற்குக் காரணம் பாஜகவினர்தான்.ஏனெனில் அந்தப்பட்டியலைத் தயாரித்துக் கொடுத்ததே பாஜகவினர்தான்.அப்படியானால் அண்ணாமலை வருவதை பாஜகவினரே விரும்பவில்லை என்று பொருள்.

பெயர் இருந்தும் பங்கேற்கவில்லை என்றால்,அங்கு செல்ல அண்ணாமலையே விரும்பவில்லை என்று பொருள்.

இரண்டில் எது நடந்திருந்தாலும்,பாஜகவுக்கும் அண்ணாமலைக்கும் பெரிய இடைவெளி ஏற்பட்டுவிட்டது என்பது மட்டும் ஒரே உண்மை என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Leave a Response