சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 471 நாட்களுக்குப் பிறகு செப்டம்பர் 26,2024 அன்று பிணையில் வந்துள்ளார்.
அமலாக்கத் துறை அலுவலகத்தில் திங்கள், வெள்ளி ஆகிய 2 நாட்களும் அவர் கையெழுத்திட வேண்டும் என உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. அதன்படி,பிணையில் 26 ஆம் தேதி வெளியே வந்த செந்தில் பாலாஜி, மறுநாள் வெள்ளிக்கிழமை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் கையெழுத்திட்டார்.
29 ஆம் தேதி மீண்டும் அமைச்சராகப் பொறுப்பேற்றார்.அதன்பின்னர், அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேற்று (திங்கள்) 2 ஆவது நாளாகக் கையெழுத்திட்டார். வாக்குவாதத்துக்குப் பிறகு அவரது வழக்கறிஞரையும் அதிகாரிகள் உள்ளே அனுமதித்தனர்.
அதோடு,அமலாக்கத் துறை வழக்கு விசாரணைக்காக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திலும் செந்தில் பாலாஜி நேற்று ஆஜரானார்.
அப்போது, அரசுத் தரப்பு சாட்சியான கணினி தடயவியல் துறை உதவி இயக்குநர் மணிவண்ணன், உடல்நிலை காரணமாக விசாரணைக்கு ஆஜராகவில்லை.உடனே அவருக்கு பிடியாணை பிறப்பித்தார் நீதிபதி எஸ்.கார்த்திகேயன். மேலும்,வழக்கு விசாரணையை அக்டோபர் 4 ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.
வங்கி அதிகாரிகளின் விவரங்களை வழங்குமாறு செந்தில் பாலாஜி கோரிய மனு மீது அன்றே உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
பிணையில் வந்த செந்தில்பாலாஜியை மீண்டும் அமைச்சராக்கியது பாஜகவுக்கு உடன்பாடில்லை என்றாலும் அது முதலமைச்சரின் முடிவு என்று ஏற்கெனவே பலமுறை நீதிமன்றங்கள் சொல்லிவிட்டதால் அவர்களால் பதவியேற்பைத் தடுக்க முடியவில்லை.
அதேநேரம், அவர் மீதான அமலாக்கத்துறை வழக்கு விசாரணையை விரைவாக நடத்தி அவருக்குத் தண்டனை பெற்றுத் தரவேண்டும் என பாஜக துடித்துக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அதனால், சிறையிலிருந்து வந்தவுடனேயே அமைச்சராகிவிட்டாலும் அவர் பதவிக்கு ஆபத்து இருக்கிறது என்று பாஜக நினைவுபடுத்திக் கொண்டே இருக்க முடிவு செய்திருப்பதாகவும் அதன் காரணமாகவே எடப்பாடி பழனிச்சாமி மருத்துவர் இராமதாசு மற்றும் பாஜகவினர் அவரை விமர்சித்துப் பேட்டி கொடுத்து வருகிறார்கள் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.