செந்தில்பாலாஜியை கைது செய்ய முடியலியே – துடிப்போர் தவிப்பு

2021 முதல் 2025 வரை டாஸ்மாக் நிறுவனத்தில் மதுபானங்கள் கொள்முதல்,பார்களுக்கு உரிமம் வழங்குதல், ஊழியர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி,டாஸ்மாக் முன்னாள் நிர்வாக இயக்குநர் விசாகன் உள்ளிட்டோர் மீது இலஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்தவழக்கின் ஒருபகுதியாக தமிழகம் முழுவதும் 41 இடங்களில் இலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.மேற்கண்ட வழக்கில் கைது நடவடிக்கையைத் தவிர்க்க முன்பிணை கோரி செந்தில்பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இதை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி
ஜி.கே.இளந்திரையன்,செந்தில்பாலாஜியின் முன்பிணை மனுவை தள்ளுபடி செய்து நேற்றுமுன்தினம் உத்தரவிட்டிருந்தார்.

மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும்,தனக்கு முன்பிணை வழங்கவேண்டும் என்றும் செந்தில்பாலாஜி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்ஷி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது செந்தில்பாலாஜி தரப்பில் வாதிட்ட மூத்தவழக்கறிஞர் கபில்சிபல்…

டாஸ்மாக் தொடர்பான விவகாரத்தில் கடந்த 2021 முதல் 2025 ஆம் ஆண்டு வரையில் முதற்கட்டமான விசாரணைகள் அனைத்தும் முன்னதாக முடிவடைந்துவிட்டன.தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளதால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முடிந்துபோன ஒன்றை தற்போது கையில் எடுத்துள்ளனர்.அதாவது அமலாக்கத்துறை தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இலஞ்ச ஒழிப்புத்துறை இப்போது புதியவழக்கை பதிவு செய்துள்ளது.செந்தில்பாலாஜி எங்கும் தப்பித்து ஓடிவிடமாட்டார்.அவர் விசாரணைக்கு முழுஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருக்கிறார் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து தமிழக அரசு தரப்பில் வாதிட்ட மூத்தவழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார்…

முந்தைய ஆட்சிக் காலத்தில் நடந்த தவறுகள் குறித்து நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று சட்டத்தில் எந்தத் தடைகளும் கிடையாது.செந்தில்பாலாஜியைப் பொருத்தமட்டில் அவர் வகித்து வந்த அனைத்துத் துறைகளிலும் முறைகேட்டில் ஈடுப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.எனவே அவருக்கு முன்ஜாமீன் கொடுத்தால் சாட்சியங்களை கெடுப்பது மட்டுமில்லாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டார்.எனவே, செந்தில்பாலாஜிக்கு இந்த விவகாரத்தில் எந்தவித நிவாரணமும் கொடுக்கக் கூடாது என்று தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்…

இந்த விவகாரத்தில் செந்தில்பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் முன்ஜாமீன் வழங்குகிறது.அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் தமிழகஅரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடலாம்.செந்தில்பாலாஜி தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவேண்டும்.
நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் முன்ஜாமீனை நாங்கள் இரத்து செய்து விடுவோம்.சாட்சிகளைக் கலைக்கும் விதமாக எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது.மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு இரண்டு வாரத்தில் பதில்மனு தாக்கல் செய்யவேண்டும்.இந்த இடைப்பட்ட காலத்தில் செந்தில்பாலாஜிக்கு எதிராக கைது நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளக்கூடாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

இதனால்,எப்படியாவது செந்தில்பாலாஜியை கைது செய்யவேண்டும் என்று நினைத்த முதல்வர் விஜய்யின் முதலாளிகள் எண்ணத்தில் இரண்டு வாரம் இடைவெளி விழுந்துவிட்டது என்கிற கருத்துகள் சொல்லப்படுகின்றன.

Leave a Response