
அக்டோபர் 6 ஆம் தேதி மதுராந்தகம்,தாராபுரம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. மதுராந்தகத்தில் ஆளுங்கட்சியான தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக வேட்பாளராக பரந்தாமன், அதிமுக வேட்பாளராக கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சுகந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஜானகிராமன் மற்றும் சுயேட்சைகள் என 27 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
தாராபுரத்தில் தவெக சார்பில் சத்யபாமா,திமுக வேட்பாளராக சுகன்யா,அதிமுக வேட்பாளராக பானுமதி,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக லட்சுமணன்,நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கார்த்திகா மற்றும் சுயேச்சைகள் என 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இரண்டு தொகுதிகளிலும் 5 முனை போட்டி நிலவியது.
மதுராந்தகம் தொகுதியில் 1,84,422 வாக்குகள் மற்றும் 864 தபால் வாக்குகள் என மொத்தம் 1,85,292 வாக்குகள் பதிவாகின. தாராபுரம் தொகுதியில் 1,79,216 வாக்குகள், 1,316 தபால் வாக்குகள் என மொத்தம் 1,80,532 வாக்குகள் பதிவாகின.
மதுராந்தகத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ஆத்தூர் பகுதியில் உள்ள பல்நோக்கு பயிற்சி மையத்தில் அக்டோபர் 9 காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் தொடர்ந்து முன்னிலையில் இருந்தார். 21 சுற்றுகளாக வாக்குகள் எண்னப்பட்டன.
வாக்குப்பதிவான இயந்திரங்களில் 4 இயந்திரங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், விவிபாட் இயந்திரத்தில் பதிவான வாக்குகளை சரிபார்த்ததால், வெற்றியை அறிவிப்பதில் சிறிது தாமதம் ஏற்பட்டது. இறுதியாக, 137 தபால் வாக்குகள் உட்பட 74,048 வாக்குகள் (39.96 விழுக்காடு) பெற்று மரகதம் குமரவேல் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர் நரேந்திரன், தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுவிடம் வழங்கினார்.
திமுக வேட்பாளர் பரந்தாமன் 358 தபால் வாக்குகள் உட்பட 54,008 வாக்குகள் (29.15 விழுக்காடு) பெற்று 2 ஆவது இடமும், அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் 322 தபால் வாக்குகள் உட்பட 47,450 (25.61 விழுக்காடு) வாக்குகள் பெற்று 3 ஆவது இடமும் பெற்றனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமன் 2,709 வாக்குகள் (1.46 விழுக்காடு) பெற்று 4 ஆவது இடமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுகந்தி 9 தபால் வாக்குகள் உட்பட 1,986 வாக்குகள் (1.07 விழுக்காடு) பெற்று 5 ஆவது இடமும் பிடித்தனர். நோட்டாவுக்கு 652 வாக்குகள் (0.35 விழுக்காடு) கிடைத்தது. தவெக, திமுக, அதிமுக வேட்பாளர்களை தவிர, நாம் தமிழர் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட 24 வேட்பாளர்கள் கட்டுத்தொகை இழந்தனர்.
தாராபுரத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லூரியில் அக்டோபர் 9 காலை 8 மணிக்குத் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகளை 2 மேசைகளில் எண்ணும் பணி தொடங்கியது. 8.30 மணி அளவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 14 மேசைகளில் 23 சுற்றுகளாக எண்ணப்பட்டன.
முதல் சுற்றில் தவெக வேட்பாளர் சத்யபாமாவை விட அதிமுக வேட்பாளர் பானுமதி 5 வாக்குகளும், 2 ஆவது சுற்றில் 592 வாக்குகளும், 3 ஆவது சுற்றில் 810 வாக்குகளும், 4 ஆவது சுற்றில் 958 வாக்குகளும் கூடுதலாகப் பெற்று முன்னிலையில் இருந்தார்.5 ஆவது சுற்றில் தவெக வேட்பாளர் சத்யபாமா 724 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகிக்கத் தொடங்கினார். இதையடுத்து, நடைபெற்ற 18 சுற்றுகளிலும் தவெக வேட்பாளர் சத்யபாமா தொடர்ந்து முன்னிலை வகித்தார். 23 ஆவது சுற்று முடிவில் தவெக வேட்பாளர் சத்யபாமா 255 தபால் வாக்குகள் உட்பட 66,841 வாக்குகள் (37.02 விழுக்காடு) பெற்று வெற்றி பெற்றார். வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரும், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியருமான ஃபெலிக்ஸ் ராஜா, தவெக வேட்பாளர் சத்யபாமாவிடம் வழங்கினார்.
திமுக வேட்பாளர் சுகன்யா 613 தபால் வாக்குகள் உட்பட 57,370 வாக்குகள் (31.78 விழுக்காடு) பெற்று 2 ஆவது இடமும், அதிமுக வேட்பாளர் பானுமதி 406 தபால் வாக்குகள் உட்பட 45,280 வாக்குகள் (25.08 விழுக்காடு) பெற்று 3 ஆவது இடமும் பெற்றனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா 19 தபால் வாக்குகள் உட்பட 5,268 வாக்குகள் (2.92 விழுக்காடு) பெற்று 4 ஆவது இடமும், இந்திய கம்யூனிஸ் கட்சி வேட்பாளர் லட்சுமணன் 7 தபால் வாக்குகள் உட்பட 1,157 வாக்குகள் (0.64 விழுக்காடு) பெற்று 5 ஆவது இடமும் பிடித்தனர். நோட்டாவுக்கு 677 வாக்குகள் (0.38 விழுக்காடு) கிடைத்தன. தவெக, திமுக, அதிமுக வேட்பாளர்களை தவிர, நாம் தமிழர் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட 19 வேட்பாளர்கள் கட்டுத்தொகை இழந்தனர்.


