
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்…
எம்ஜிஆரால் தோற்றுவிக்கப்பட்ட அதிமுக என்ற மாபெரும் இயக்கம் வருகிற 17 ஆம் தேதி (சனிக்கிழமை) 55 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.இதை முன்னிட்டு, 17.10.2026, 22.10.2026, 23.10.2026 ஆகிய மூன்று நாட்கள் ‘அதிமுக 55 ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள்’ கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 85 மாவட்டங்களிலும், புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.
பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள்,அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இந்தக் கூட்டங்களில் எம்எல்ஏக்கள், கட்சியின் சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள் அனைவரும் தாங்கள் சார்ந்த மாவட்டங்களில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும்.
மாவட்டச் செயலாளர்கள், தங்கள் மாவட்டத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திற்கான நிகழ்ச்சிகளை எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்ஜிஆர் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு என பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் இணைந்து பொதுக்கூட்டங்களை சிறப்பாக நடத்திட வேண்டும். 17 ஆம் தேதி அன்று ஆங்காங்கே எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கும், படங்களுக்கும் மாலை அணிவித்து இனிப்பு வழங்கியும்,ஏழை, எளியோருக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கியும் சிறப்பிக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
17 ஆம் தேதி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். எஸ்.பி.வேலுமணி கோவை புறநகர் மத்திய மாவட்டம், பி.தங்கமணி நாமக்கல் மாவட்டம் என அனைத்து கட்சி நிர்வாகிகளும் தனித்தனி மாவட்டங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பேசுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் 3 நாள் நடைபெறும் எந்த பொதுக்கூட்டங்களிலும் கலந்துகொள்ள அனுமதிக்கப்படாமல் ஓரங்கப்பட்டுள்ளார்.அதேநேரம் விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, துரை.திருஞானம், வடமதுரை பாலு, ஏ.ரூபன்ராஜ் உள்ளிட்டோர் பேசுவார்கள் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது அக்கட்சி வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி சொல்வதை ஏற்காமல் போர்க்கொடி தூக்கிவரும் எஸ்.பி.வேலுமணியைப் புறக்கணிக்கவில்லை.சி.வி.சண்முகத்தை மட்டும் புறக்கணிக்கிறார் எடப்பாடி.இதன்மூலம்,அவரைத் தனிமைப்படுத்தப் பார்க்கிறார் எடப்பாடி என சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகிறார்களாம்.


