கடலூரில் டீசல் விலை 100.29 – தொடர் உயர்வால் கடும் அதிர்ச்சி

சென்னையில் பெட்ரோல் விலை 102 ஐக் கடந்த நிலையில், டீசல் விலையும் லிட்டர் 100 ஐ நெருங்கி வருகிறது. இந்நிலையில் கடலூரில் டீசல் விலை 100 ஐத் தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது, இதனால் ஏழை எளிய நடுத்தர மக்கள், கனரக வாகன உரிமையாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு மாற்றியமைத்து வருகிறது.

நடப்பாண்டில் கடந்த சனவரி மாதம் முதல் பெட்ரோல், டீசலின் விலை மள, மளவென உயர்ந்து வருகிறது. நாள்தோறும் விலை உயர்த்தப்படுவதால் பெட்ரோல் விலை வரலாற்றில் முதன்முறையாக லிட்டருக்கு 100 க்கு மேல் சென்றது. இதேபோல், தமிழகத்தில் டீசல் விலையும் 100 ஐக் கடந்துள்ளது.

தொடர்ந்து உயரும் பெட்ரோல் விலையால், அன்றாடம் இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் கடும் தவிப்பிற்கு ஆளாகியுள்ளனர். இதேபோல், டீசல் விலை அதிகரிப்பால், பல்வேறு பொருட்களின் விலைவாசி உயர்ந்து, ஏழை, நடுத்தர குடும்பத்தினர் வெகுவாகப் பாதித்து வருகின்றனர்.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை பெட்ரோல் லிட்டருக்கு 31 காசும், டீசல் லிட்டருக்கு 34 காசும் உயர்ந்துள்ளது. அதன்படி நேற்று 101.79-க்கு விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல், இன்று 102.10 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல், 97.59-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் டீசல், இன்று 97.59 ஆக உயர்ந்துள்ளது.

கடலூரைப் பொறுத்தவரை டீசல் ஒரு லிட்டர் 33 காசு உயர்ந்து, 100.29-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில்முதன்முறையாக டீசல் விலை 100-ஐக் கடந்து விட்டது. இது தவிர, 25 மாவட்டங்களில் டீசல் விலை 97 க்கும் அதிகமாக உள்ளது. மாநிலத்தில் குறைந்தபட்சமாக சென்னையில் 97.93-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்ந்து அதிகரித்து வரும் டீசல் விலை உயர்வால், கனரக வாகன உரிமையாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏற்கனவே, புதுப்பித்தல் கட்டணம் அதிகரிப்பு, சுங்க கட்டண வசூல் உயர்வு என லாரி தொழில் தடுமாற்றங்களை சந்தித்து வரும் நிலையில், தற்போது டீசல் விலை உயர்வும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வாடகை உயர்த்தப்பட்டால், விலைவாசியும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Leave a Response