மொழிவழி மாநிலங்களை அழிக்க 1951 இல் அறிக்கை வெளியிட்ட ஆர் எஸ் எஸ் – அம்பலப்படுத்தும் பழ.நெடுமாறன்

(தமிழர்களுக்கு என மொழிவழி அடிப்படையில் ஒரே மாநிலம் உருவாக்கப்பட்ட வரலாறு குறித்து 15-12-2006 ‘தென்செய்தி’ இதழில் வெளியிடப்பட்ட கட்டுரை கீழே தரப்படுகிறது)

ஆந்திர மாநிலத்திலிருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்டுத் தனி மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நடைபெற்று வரும் போராட்டத்தின் எதிரொலியாக தமிழகத்தையும் வட தமிழகம், தென் தமிழகம் என இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சிலர் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

1956 ஆம் ஆண்டு வரை இப்போதுள்ள தமிழகம் உருவாக்கப்படவில்லை. மொழிவழியாக மாநிலங்களைப் பிரிப்பதென மத்திய அரசின் முடிவிற்கு 1956 ஆம் ஆண்டு அதற்கான சட்டத்தை நிறைவேற்றிய பிறகே தமிழ்நாடு தனி மாநிலமாக உருவானது.

அதிலும் தமிழர் வாழும் நெய்யாற்றங்கரை, நெடுமங்காடு, தேவிகுளம், பீர்மேடு, பாலக்காடு வட்டம், கொல்லங்கோடு வனப்பகுதி, கொல்லேகாலம் வட்டத்தின் தென்பகுதி வேங்கடமலையை உள்ளடக்கிய சித்தூர் மாவட்டம் ஆகியவற்றை தமிழ்நாடு இழந்தது.

இவை போக எஞ்சியுள்ள பகுதிதான் இன்றைக்குத் தமிழகமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. நம்மிடமிருந்து பறிக்கப்பட்டப் பகுதிகளை மீண்டும் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்ற போராட்டத்தை நடத்த வேண்டியிருக்க அதற்கு மாறாக இருக்கும் தமிழகத்தைக் கூறுபோடத் திட்டமிடுவதைப் போன்ற துரோகம் வேறு இல்லை.

சங்க காலமான கி.மு. 6 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டை சேர, சோழ, பாண்டிய மன்னர்களும் மற்றும் வேளிர்களும் ஆண்டனர். ஒட்டுமொத்தத் தமிழகமும் ஒரு ஆட்சியின் கீழ் இருக்கவில்லை. இந்த மன்னர்களும் ஒருவருடன் மற்றொருவர் போர் புரிந்த வண்ணமே இருந்தார்கள்.

கி.பி. 250 முதல் கி.பி. 350 வரை பல்லவர்கள் என்ற புதிய மன்னர் குலத்தினர் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் சிலவற்றை ஆண்டனர். கி.பி. 350 இல் களப்பிரர் என்ற புதிய குலத்தினர் தோன்றி மூவேந்தர்களையும் முறியடித்துத் சில காலம் ஆண்டனர்.

கி.பி. 900 ஆண்டில் பிற்கால சோழர் விசயாலயன் தலைமையில் தலையெடுத்தனர். இராசராசன் இராசேந்திரன் போன்ற மாமன்னர்கள் பெரும் பேரரசைக் கட்டியெழுப்பினர். ஆனால், கி.பி. 1190 இல் பாண்டியர்கள் மீண்டும் தலை தூக்கி சோழப் பேரரசைச் சிதைத்தனர். சோழர்களும், பாண்டியர்களும், தொடர்ந்து தங்களுக்குள் இடைவிடாது போராடியதன் விளைவாக இரு அரசுகளுமே பலவீனம் அடைந்தன.

இதன் விளைவாக விசயநகர நாயக்கர் குலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தின் மீது படையெடுத்து மதுரையிலும், தஞ்சையிலும் தங்கள் ஆட்சியை நிறுவினர். நாயக்கர் மன்னர்களுக்குள் மோதல் ஏற்பட்டபோது. அதைச் சாக்காகப் பயன்படுத்தி கி.பி. 14ஆம் நூற்றாண்டில் டெல்லி சுல்தான் அலாவுதின் கில்ஜி, மாலிக்காபூர் என்னும் தளபதி தலைமையில் ஒரு படையை அனுப்பித் தமிழ்நாட்டைச் சூறையாடினான். தமிழகத்தின் சில பகுதிகளில் நவாப்களின் ஆட்சி நிறுவப்பட்டது. கி.பி. 1676இல் மராட்டியர்கள் தஞ்சை மீது படையெடுத்து வந்து அதைக் கைப்பற்றி ஆளத் தொடங்கினர்.

சங்க காலத்திலிருந்து நாயக்கர்கள், மராட்டியர்கள் ஆட்சி காலம் வரை தமிழ்நாடு ஒன்றாக ஒரே ஆட்சியின் கீழ் இருந்ததே இல்லை. பல நாடுகளாகப் பிரிந்து கிடந்தது.

இந்த நிலையில் கி.பி. 1800 இல் ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர், டச்சுக்காரர் போன்ற ஐரோப்பியர்கள் வணிகம் நடத்துவதற்காக தமிழ்நாட்டில் புகுந்தனர். தமிழக அரசியல் நிலைமை கண்டு அவர்களுக்கும் ஆட்சி புரிவதற்கான வேட்கை வந்தது. படை வலிமையினால் தமிழகத்தின் பல்வேறு பாளையக்காரர்களை அடக்கித் தமிழகத்தில் தங்கள் ஆட்சியை நிறுவினர்.

பிரெஞ்சுக்காரர்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதியிலும், டச்சுக்காரர்கள் தரங்கம்பாடிப் பகுதியிலும் எஞ்சிய தமிழ்நாட்டின் பெரும்பகுதியை ஆங்கிலேயர்களும் கைப்பற்றிக் கொண்டார்கள்.

1857ஆம் ஆண்டு இந்திய வீரர்களின் புரட்சிக்குப் பிறகு டில்லியில் முகலாயர் ஆட்சியும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து மன்னர்களின் ஆட்சியும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, இந்தியா முழுவதும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்டது.

பல்வேறு மொழி பேசும் தேசிய இனங்களைக் கொண்ட ஒரு துணைக்கண்டம் இந்தியா என்பதை ஆங்கிலேயர் உணர்ந்திருக்கவில்லை. எனவே இந்தியாவைப் பல மாகாணங்களாகப் பிரித்து நிர்வாகம் செய்யத் தொடங்கினர்.

சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆகிய மூன்று முக்கியத் துறைமுக நகரங்களை தங்களின் வணிக வசதிக்காக ஆங்கிலேயர்கள் உருவாக்கி இருந்தனர். இந்த நகரங்களை மையமாகக் கொண்டு புதிய மாகாணங்களை அவர்கள் உருவாக்கினார்கள்.

கொல்கத்தாவைத் தலைநகரமாகக் கொண்ட மாகாணத்தில் வங்காளம், பீகார், ஒரிசா, அசாம் ஐக்கிய மாகாணம் (உ.பி.) ஆகிய பிரதேசங்கள் இணைக்கப்பட்டன.

மும்பையை தலைநகரமாகக் கொண்ட மாநிலத்தில் சிந்து, பஞ்சாப், மகாராட்டிரா, குசராத் ஆகிய மாநிலங்கள் இணைக்கப்பட்டன.

தென்னாட்டில் திருவாங்கூர், கொச்சி, ஐதாராபாத், மைசூர், புதுக்கோட்டை ஆகிய சமத்தானங்கள் நீங்கலாக எஞ்சி இருந்த பகுதிகள் இணைக்கப்பட்டு சென்னை மாகாணமாக உருவாக்கப்பட்டது.

அம்மாகாணத்தில், ஆந்திரம், கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய இன்றைய மாநிலங்களின் பகுதிகள் ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தன. பிற்காலத்தில் ஆங்கிலேயர்கள் நிர்வாக வசதிக்காக அசாம், ஒரிசா, பீகார், ஐக்கிய மாகாணம் எல்லைப் புற மாகாணம், சிந்து மாகாணம் ஆகியவற்றைப் பிரித்து உருவாக்கினார்கள்.

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தைக் காங்கிரசுக் கட்சி தொடக்கியபோது இந்தியாவை மொழி வழி மாநிலங்களாகப் பிரிக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது. 1920 ஆம் ஆண்டு நாகபுரியில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில் மொழி அடிப்படையில் மாநிலங்களைத் திருத்தி அமைக்கவேண்டும் என்ற தீர்மானத்தினை திலகர் முன்மொழிந்தார். காந்தியடிகள் வழிமொழிந்தார். இதற்கு முதற்படியாக காங்கிரசுக் கட்சி மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக சென்னை மாகாணத்தில் இருந்த தமிழர் பகுதிகளுக்கு தமிழ்நாடு காங்கிரசுக் குழுவும், தெலுங்குப் பகுதிகளுக்கு ஆந்திர மாநில காங்கிரசுக் குழுவும் உருவாக்கப்பட்டன. இப்படியே இந்தியா முழுவதிலும் மொழி வழியாக காங்கிரசு அமைப்புகள் திருத்தி அமைக்கப்பட்டன.

1946 ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் அரசியல் சட்டத்தை வகுப்பதற்காக உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பு அவையில் மொழி வழி மாநிலக் கோரிக்கை எழுப்பப்பட்டது. ஆனால் இந்தப் பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்க தலைமையமைச்சர் நேரு விரும்பவில்லை. மொழிவழி மாநிலப் பிரச்சினையை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட எசு.கே. தார் குழுவும் பட்டாபி சீத்தாராமையா, வல்லபாய் படேல், சவகர்லால் நேரு ஆகியோரைக் கொண்ட குழுவும் இதற்கு எதிரான பரிந்துரைகளை வழங்கின.

ஆனால் 1953 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தை உடனடியாக அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து சுதந்திரப் போராட்ட வீரரான பொட்டி சிறீராமுலு 56 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்த் தியாகம் செய்ததையொட்டி ஆந்திராவெங்கும் பெரும் கலவரங்கள் மூண்டன. இதன் விளைவாக ஆந்திர மாநிலத்தை அமைப்பதற்கு 1952 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி நேரு ஒப்புக்கொண்டார். ஆந்திர மாநிலம் அமைக்கப்பட்டவுடன் நாடெங்கும் மொழி வழி மாநிலக் கோரிக்கைகளும் அவற்றுக்கான போராட்டங்களும் வெடித்துக் கிளம்பின.

மக்களின் உணர்வுகளைச் சற்று அடக்கி வைப்பதற்காக 23-12-1953ஆம் ஆண்டு பசல் அலி, கே.எம். பணிக்கர், எச்.என். குசுரு ஆகியோரைக் கொண்ட ஆணையம் ஒன்றினை நேரு நியமித்தார். 1955 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த ஆணையத்தின் அறிக்கை வெளியிடப்பட்டது.

கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களை அமைப்பதற்கு அது பரிந்துரை செய்தது. ஆனால் மும்பை மாநிலம் இரு மொழி மாநிலமாக விளங்கும் என்று கூறியது. வேறு சில மாநிலங்களை உருவாக்குவதற்கும் அது எதிரான கருத்தைத் தெரிவித்தது. இந்த ஆணையத்தின் அறிக்கை நாடெங்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திற்று.

இந்தக் கொந்தளிப்பை திசைத் திருப்புவதற்காக தலைமையமைச்சர் நேரு இந்தியாவை ஐந்து மண்டலங்களாக பிரிக்க வேண்டும் என்று யோசனை தெரிவித்தார். பல மொழிப் பேசும் மக்களை ஒன்றாக இணைத்து இத்தகைய மண்டலங்களை உருவாக்குவது என நேரு வெளியிட்ட திட்டத்திற்கு மிகக்கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

பாரதிய சனதா கட்சியின் முன்னோடியான ஜனசங்கமும், ஆர்.எசு.எசு. அமைப்பும் இதைப் போன்ற வேறு ஒரு திட்டத்தைத் தெரிவித்தன. இந்தியாவில் உள்ள மாநில எல்லைகளை அழித்துவிட்டு, நிர்வாக வசதியை மட்டுமே முன்னிறுத்தி ஒன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களை இணைத்து ஒரு சனபாத அமைப்பை உருவாக்க வேண்டும், இந்தியா முழுவதும் 100 சனபாத அமைப்புகள் உருவாக்கப்படும். மத்திய அரசின் நேரடி ஆட்சியின் கீழ் இந்த சனபாத அமைப்புகள் இயங்கும். மொழிவழி மாநிலங்களும் அரசுகளும் அடியோடு ஒழிக்கப்பட்டுவிடும். 1951, 54 ஆம் ஆண்டுகளில் சனசங்கம் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளில் இத்திட்டம் வலியுறுத்தப்பட்டது.

மொழி அடிப்படையிலான மாநிலங்கள் அமைப்பதற்கு இந்தியப் பெருமுதலாளிகளும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்தியா முழுவதும் ஒரே ஆட்சியின் கீழ் இருப்பதுதான் தங்களின் தொழில் வணிக வளர்ச்சிக்கு சாதகமானது என அவர்கள் கருதி அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர்.

தலைமையமைச்சர் நேரு போன்ற மிகப்பெரிய தலைவர்களின் எதிர்ப்பையும் கடும் அடக்குமுறையையும் ஆர்.எசு.எசு. போன்ற அமைப்புகளின் எதிர்ப்பையும் பெருமுதலாளிகளின் எதிர்ப்பையும் மீறி நாடெங்கும் மொழி வழி மாநிலத்திற்கான கிளர்ச்சிகள் வெடித்துக் கிளம்பின. எனவே வேறுவழியில்லாமல் நேரு அரசு அதற்குப் பணிய வேண்டிய நிலை உருவானது.

ஆந்திர மாநிலம் பிரிந்தவுடன் எஞ்சி இருந்த சென்னை மாகாணத்தோடு சேர்ந்து இருந்த மலபார் மாவட்டமும், காசர்கோடு வட்டமும் பிரிக்கப்பட்டு திருவாங்கூர்-கொச்சியுடன் இணைக்கப்பட்டு கேரள மாநிலம் 1956 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நாள் உருவானது. கேரளம் மாநிலத்துடன் இருந்த குமரி மாவட்டம் பிரிக்கப்பட்டு தமிழ் மாவட்டங்களுடன் இணைக்கப்பட்டு அதே நாளில் தமிழ் நாடு பிறந்தது. மைசூர் சமத்தானத்துடன் மும்பை, சென்னை, மாகாணங்களில் இருந்த கன்னடப் பகுதிகளும் ஐதராபாத்தைச் சேர்ந்த கன்னடபகுதிகளும், குடகு சமத்தானமும் இணைக்கப்பட்டு அதே நாளில் கர்நாடக மாநிலம் உருவாக்கப்பட்டது.

1948 ஆம் ஆண்டு அசாமிலிருந்து வடகிழக்கு எல்லைப் பகுதி பிரிக்கப்பட்டது. 1962 ஆம் ஆண்டு நாகாலாந்து, 72 ஆம் ஆண்டு மேகாலயா, மிசோராம், 1987 ஆம் ஆண்டு அருணாசலப் பிரதேசம் ஆகியவை பிரிக்கப்பட்டு தனி மொழிவழி மாநிலங்களாக ஆக்கப்பட்டன. 1966 ஆம் ஆண்டு கிழக்கு பஞ்சாப் மாநிலம் பஞ்சாப், அரியானா, இமாச்சாலப் பிரதேசம் என மூன்று மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டன. 2000 ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேசத்திலிருந்து சட்டீசுகர், உத்திரப்பிரதேசத்திலிருந்து, உத்தரகாண்ட், பீகாரிலிருந்து சார்கண்ட் ஆகிய மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இன்னும் பல மாநிலங்களைப் பிரிக்கவேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது.

இந்தியா சுதந்திரம் பெற்றபோது பல மொழி பேசும் மக்களைக் கொண்ட மாநிலங்கள் 10 இருந்தன. இன்று மொழிவழி மாநிலங்கள் 28 உள்ளன.

இந்தியாவின் வரலாற்றில் மொழி வழி மாநிலங்கள் அமைப்பதற்கான போராட்ட வரலாறு என்பது சுதந்திரப் போராட்ட வரலாற்றுக்குச் சமமானதாகும். எத்தனையோ பேர் உயிர்த்தியாகம் செய்துதான் மொழி வழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

3000 ஆண்டுகாலத்திற்கு மேற்பட்ட தமிழர் வரலாற்றில் தமிழ்நாடு கடந்த 63 ஆண்டு காலமாகத்தான் ஒரே மாநிலமாக, ஒரே ஆட்சியின் கீழ் இருந்து வருகிறது. தமிழகத்துக்குரிய பல பகுதிகள் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டன. அவற்றையெல்லாம் மீண்டும் பெறுவதற்கும் டெல்லி ஆட்சியின் கீழ் தமிழகம் இழந்துவிட்ட பல உரிமைகளை மீண்டும் அடைவதற்கும் ஏழரைக் கோடி தமிழ் மக்களும் ஒன்றுபட்டுப் போராட வேண்டியுள்ளது.

தமிழ் மொழி தமிழ்நாட்டில் ஆட்சி மொழியாக, பயிற்று மொழியாக, வழிபாட்டு மொழியாக, இசை மொழியாக, உயர்நீதிமன்ற மொழியாக இன்னும் ஆக்கப்படவில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக இந்தியாவின் பிற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும், குடியேறிய தமிழர்கள் கொத்தடிமைகளைவிட கேவலமாக நடத்தப்படுகிறார்கள்.

அண்டை நாடான இலங்கையில் நமது சகோதர ஈழத்தமிழர்கன் கொன்று குவிக்கப்படுகிறார்கள். தமிழ்நாடு ஒன்றுபட்டு நின்று இவற்றுக்கெல்லாம் எதிராக போராடி நமது உரிமைகளை நிலைநிறுத்த வேண்டியுள்ளது. நம்மை நம்பியுள்ள உலகத் தமிழர்களையும் காப்பாற்ற வேண்டியுள்ளது. இந்த உண்மைகளை எல்லாம் எண்ணிப் பாராமல் தமிழ்நாட்டைக் கூறுபோட வேண்டும் என்று சொல்வது நம்மை நாமே அழித்துக் கொள்வதற்கு சமமாகும்.

சிறு சிறு மாநிலங்களாகப் பிரிப்பதின் மூலம் மொழி வழித் தேசிய உணர்வைத் சிதைத்துவிடலாம் என தில்லி கருதுகிறது. அந்த நோக்குடன் ஒன்றிய ஆட்சியும், இந்தியப் பெருமுதலாளிகளும் விரிக்கும் வலையில் விழவேண்டாம் என்று வேண்டிக்கொள்கிறேன்.

-டிசம்பர் -2006- தென்செய்தி.

Leave a Response