நீட் தேர்வு அறிவிக்கப்பட்டுவிட்டது தமிழக மாணவர்கள் என்ன செய்ய? – அமைச்சர் விளக்கம்

12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேர நீட் எனும் புதிய நுழைவுத்தேர்வை மோடி அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழகம் உட்பட பல மாநிலங்கள் அதை எதிர்த்து வருகின்றன. ஆனாலும் மோடி அரசு நீட் தேர்வை நடத்தி வருகிறது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு நீட் தேர்வு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி நீட் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. தற்போது நடப்பாண்டுக்கான மருத்துவப் படிப்புகளுக்கு மாணவ-மாணவிகளைத் தேர்வு செய்ய ஆகஸ்டு 1 ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் நீட் தேர்வுக்காக விண்ணப்பம் செய்யும் நடவடிக்கைகள் இன்னும் தொடங்கப்படவில்லை. பொதுவாக நீட் தேர்வுக்கு மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்க தேர்வு தேதிகளில் இருந்து 60 நாட்களுக்கு முன்பு அவகாசம் வழங்கப்படும். ஆனால் தற்போது இதுவரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால் நீட் தேர்வு தொடர்பாக நாடு முழுவதும் மாணவர்களிடம் மாறுபட்ட கருத்துகளும், எதிர்பார்ப்புகளும் நிலவுகிறது.

இந்நிலையில் நீட் நுழைவு தேர்வு செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. மேலும், இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து நீட் தேர்வு விண்ணப்பத்தை மாலை 5 மணி முதல் இணையதளத்தில் பதிவிறக்கி விண்ணப்பிக்கலாம் என்றும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த முறை 198 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு இப்படி அறிவித்துவிட்ட நிலையில் நீட் தேர்வுக்கெதிராகப் போராடிவரும் தமிழக அரசின் நிலை என்ன? என்பது குறித்து சென்னை, சைதாப்பேட்டையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது…..

நீட் தேர்வு தற்போது செப்டம்பர் மாதம் தள்ளிப்போய் உள்ளது. மேலும் இன்று உயர் நீதிமன்றத்தில் அது தொடர்பான வழக்குகள் வர உள்ளது. நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் திமுகவின் உறுதியான கொள்கை.அதை, திமுக அதை உறுதியாகக் கையாண்டு நீட் தேர்வுக்கு தமிழகத்தில் முற்றுப்புள்ளி வைப்பதற்கு தேவையான சட்டரீதியான, உறுதியான நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டுள்ளது.

இதைப்போன்று நுழைவுத் தேர்வு 2006 ஆம் ஆண்டு இருந்த போது குழு அமைத்து அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி குழுவின் அறிக்கையைப் பெற்று உச்ச நீதிமன்றத்தில் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழக மாணர்வகளைக் காப்பாற்றினார்கள்.

அதைப்போன்று ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு அந்த குழுவின் அறிக்கையைப் பெற்று மேல் நடவடிக்கைக்கு செல்லலாம் என்ற அடிப்படையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாணவர்களுக்கு தமிழக அரசால் அளிக்கப்படும் பயிற்சி என்பது தொடர்ந்தும் கொண்டு இருக்கிறது. மாணவர்கள் படிக்க வேண்டுமா, வேண்டாமா என்கின்றனர். நிச்சயம் படிக்க வேண்டும் என்பதே விருப்பம், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற எல்லா முயற்சிகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது. முடியாமல் போய் கடைசி நேரத்தில் மாணவர்கள் தவிக்கக் கூடாது.

எனவே, அவர்களைத் தயார் படுத்தும் பணி தொடர்கிறது. நீட் தேர்வில் இருந்து 100 சதவீதம் விலக்கு பெற்றுத்தர வேண்டும் என்பது தான் எண்ணம், அதே நேரத்தில் சிறிய அளவில் இடர்பாடுகள் ஏற்பட்டு தேர்வு வந்து விட்டால் இந்த அரசு கை விட்டு விட்டார்கள் என்று மாணவர்களுக்கு கவலை வந்து விடக்கூடாது என்பதற்காகப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response