தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய குழுவை தமிழக அரசு ஜூன் 10 ஆம் தேதி நியமித்து அரசாணை பிறப்பித்திருந்தது.
நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால், மாற்று வழி குறித்தும், அதை அமல்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அரசாணைக்குத் தடை விதிக்கக் கோரியும், அதை இரத்து செய்யக் கோரியும் தமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் தனிப்பட்ட முறையில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.
அவரது மனுவில், “நாடாளுமன்றம் நிறைவேற்றும் சட்டம் நாடு முழுவதற்கும் பொதுவானது. மருத்துவக் கல்வியை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை மருத்துவ ஆணையத்திடமும், ஆலோசனைக் குழுமத்திடமும் மட்டுமே தெரிவிக்க வேண்டும். அதை மீறும் வகையில் தற்போது தமிழக அரசு குழு அமைத்துள்ளது. இது அனுமதிக்கத்தக்கதல்ல” என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், “இந்த வழக்கு ஜனநாயகத்தை ஒடுக்கும் முயற்சி. பெற்றோர் அல்லது மாணவர் அல்லாத ஒருவர் அரசியல் கட்சி நிர்வாகி என்ற அடிப்படையில் விளம்பர நோக்கத்திற்காக வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
மக்கள் நலன் சார்ந்த அரசாக இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு நியமனத்தை எதிர்த்த வழக்கு என்ற போர்வையில் நல்லாட்சி வழங்கும் அதிகாரத்திலும், அரசியல் சாசன அடிப்படைப் பணிகளிலும் தலையிடும் வகையில் மனுதாரர் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருக்கிறார்.
நீட் தேர்வு அரசுப்பள்ளி மற்றும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பதை ஆராய்வதற்கு மட்டுமே இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதை உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரானது எனக் கூற முடியாது” எனத் தெரிவிக்கப்பட்டது.
ஒன்றிய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், “நீட் தேர்வு முறையாகக் கண்காணிக்கப்படும் நிலையில், தமிழக அரசு குழு அமைக்க வேண்டிய அவசியமில்லை. மாநில விவகாரங்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டும் விசாரணை ஆணையம் அமைத்துக்கொள்ள மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு. நீட் தேர்வு சமூக ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து விசாரிக்க தேசிய மருத்துவ ஆணையத்திற்கு மட்டுமே அதிகாரம் உண்டு” என்று விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
அந்த வழக்கில் தங்களை இணைக்கக் கோரியும், கரு.நாகராஜன் மனுவை நிராகரிக்கக் கோரியும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினரும், பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, மாணவி நந்தினி, தமிழ்நாடு மாணவர்கள் பெற்றோர் நலச் சங்கம், டாக்டர் அம்பேத்கர் பொறியாளர்கள் சங்கம் உள்ளிட்ட 26க்கும் மேற்பட்ட இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அவர்களின் மனுக்களில், ”மக்கள் நலன் சார்ந்த அரசுக்கும் மக்களுக்கும் இடையே தூதுவர் என்ற அடிப்படையிலேயே இந்தக் குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும், அந்தக் குழுவிடம் நீட் தேர்வின் சாதக பாதகங்கள் குறித்து அனைத்துத் தரப்பிலும் மனுக்கள் வருவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் கூட நீட் தேர்வினால் மருத்துவப் படிப்பை இழந்து தற்கொலைக்கு ஆளாகியுள்ள சம்பவங்களை நீதிமன்ற கவனத்திற்குக் கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மாணவர்கள் பிரச்சினைகளில் அரசியல்வாதிகளுக்கு இடமில்லை. அரசுக்கு குழு அறிக்கை அளிக்காத நிலையில் கரு.நாகராஜன் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவை எதிர்த்த கரு.நாகராஜன் வழக்குடன் இந்த மனுக்கள் அனைத்தும் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன.
அப்போது, கரு.நாகராஜன் தரப்பில் வழக்கறிஞர் ராகவாச்சாரி ஆஜராகி, ”நீட் தேர்வில் இருந்து தமிழக அரசு எந்த விதிவிலக்கும் கோர முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வில் எந்த மாநிலமும் மாற்றங்களை மேற்கொள்ள முடியாது. நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கை நீட் மூலம் மட்டுமே நடத்தப்படுகிறது. தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தின்படிதான் நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மருத்துவ ஆலோசனைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது” எனக் கூறி, அரசாணையை இரத்து செய்யக் கோரிக்கை வைத்தார்.
அப்போது நீதிபதிகள், நீட் தேர்வு குறிப்பிட்ட பிரிவினருக்கு பாதிப்பாக உள்ளதா என ஆய்வு செய்ய மாநில அரசு குழு நியமித்தது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணானதல்ல எனத் தெரிவித்தனர். அந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் நீட் தேர்வைத் தொடர வேண்டுமா? வேண்டாமா? என உச்ச நீதிமன்றத்தில் அரசு வலியுறுத்தும் எனவும், பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தால் மட்டுமே அதனை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவிக்க முடியும் என்றும் விளக்கம் அளித்தனர்.
எனவே கருத்துகளைக் கேட்பதற்காக அரசு கொள்கை முடிவெடுத்து குழு அமைத்ததில் என்ன தவறு உள்ளது என கரு.நாகராஜன் தரப்பிற்கு கேள்வி எழுப்பியதுடன், நீட் தேர்வு எழுதாதவர்களையும் மருத்துவப் படிப்பில் சேர அரசு அனுமதிக்குமோ என்ற அச்சத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டனர். வழக்கு தொடுத்ததன் மூலமும், இடையீட்டு மனுக்கள் மூலமும் நல்ல விளம்பரம் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
நீட் தேர்வு பாதிப்புகள் தொடர்பான மக்களின் கருத்துகளையோ, அல்லது பாதிப்புகள் தொடர்பாகவோ மத்திய அரசிடம் சமர்ப்பிப்பதற்காக மாநில அரசு, நீதிபதி குழுவை அமைத்திருக்கலாம் என்றும், அதை அமைக்கக் கூடாது என்று சொல்ல நாம் யார் என்றும் கேள்வி எழுப்பினர்.
பின்னர் ஒன்றிய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன் ஆஜராகி, அரசியல் சாசனம் 162-வது பிரிவின் படி சட்டமன்றத்துக்கு அதிகாரம் உள்ள விஷயங்களில் மாநில அரசு சட்டம் இயற்றலாம் என்றும், மத்திய – மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மாநில அரசு, மத்திய அரசின் சட்டத்தை மீறி, சட்டம் இயற்ற முடியாது என்றும் தெரிவித்தார்.
பின்னர் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த தலைமை நீதிபதி அமர்வு, நீட் தேர்வின் பாதிப்புகளை ஆராயும் நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அமைத்தது செல்லும் எனக் கூறி, கரு.நாகராஜன் வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அந்த உத்தரவில், ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க அறிவுறுத்தப்பட்டும், அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதா எனத் தெரியவில்லை எனக் குறிப்பிட்டதுடன், இந்தக் குழுவும் மற்ற குழுக்கள் அல்லது ஆணையங்கள் போல பல ஆண்டுகளாக நீடிக்குமா எனத் தெரியவில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அரசுப் பள்ளி மாணவர்கள் மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்கு நீட் தேர்வு காரணமாகத் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய மட்டுமே குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதே தவிர, வேறு ஏதும் கூறப்படவில்லை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாகவோ, மத்திய அரசு சட்டங்களுக்கு எதிராகவோ குழு அமைக்கப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தி உள்ளனர்.
குழு ஏதேனும் ஆலோசனைகள் கொடுத்தால், அதைப் பயன்படுத்தி, பின்தங்கிய மாணவர்களும் மருத்துவ மாணவர் சேர்க்கை பெறும் வகையில் மாணவர் சேர்க்கை நடைமுறையை மாற்றியமைக்கும்படி மத்திய அரசிடம் மாநில அரசு கோரிக்கை வைப்பதற்காகக் கூட குழு அமைத்திருக்கலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
நீட் தேர்வில் பங்கேற்கும் வகையில் மாநிலப் பாடத்திட்டத்தின் தரம் உயர்த்தப்படலாம் என்றும், குழு நியமனம் என்பது வீண் செலவு என மனுதாரர் கூறவதை ஏற்க முடியாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து கேட்பது தொடர்பான கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், மாணவர் சேர்க்கைக்கான நடைமுறையைத் தடுக்கும் வகையில், மாநில அரசு தனது அதிகார வரம்பை மீறவில்லை என்பதையும் தீர்ப்பில் சுட்டிக்காட்டி உள்ளனர்.
இவ்வழக்கை தனிநபரான கரு.நாகராஜன் தொடர்ந்திருந்தாலும் இதில் கருத்துச் சொன்ன ஒன்றிய அரசு, மாநில அரசுக்கு இப்படி ஒரு குழு அமைக்க அதிகாரமில்லை இது வரம்பு மீறிய செயல் என்று சொல்லியிருந்தது. ஆனால் அதையும் மீறி சென்னை உயர்நீதிமன்றம் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்திருப்பது ஒன்றிய அரசுக்குப் பின்னடைவாகவும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு வெற்றி என்றும் சொல்லப்படுகிறது.