எடப்பாடி அரசு தமிழ்நாட்டை உத்தரப்பிரதேசம் போல் வகுப்புவாத வன்முறை மாநிலமாக மாற்றக்கூடாது என்று தமிழ்த்தேசியப்பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…..
சுதந்திர இந்தியாவில் முதல் பயங்கரவாதி ஒரு இந்து; அவர் தான் நாதுராம் கோட்சே என்று மக்கள் நீதி மையத் தலைவர் கமலகாசன் அரவக்குறிச்சி தேர்தல் பரப்புரையில் 12.05.2019 கூறியது மதச்சார்ப்பற்ற அரசியல்படியும் குற்றமில்லை; தேர்தல் சட்ட விதிகளின்படியும் குற்றமில்லை. இந்தியக் குற்றவியல் மற்றும் தண்டனைச் சட்டங்கள் படியும் குற்றமில்லை.
காந்தியடிகளை 1948 ஆம் ஆண்டு சனவரி 30 அன்று வழிபாட்டுக் கூட்டத்தில் தில்லியில் ஆர்.எஸ்.எஸ். காரரும் மராட்டிய சித்பவன பிராமண வகுப்பைச் சேர்ந்தவருமான நாதுராம் கோட்சே சுட்டுக் கொன்றார். கோட்சேயே ஒப்புக் கொண்ட படுகொலை இது!
மதபயங்கரவாதம் இஸ்லாம் மதத்திலும் இருக்கிறது; இந்து மதத்திலும் இருக்கிறது; இந்த இரண்டு மதங்களைச் சேர்ந்த தீவிரவாதிகளும் பலரைக் கொலை செய்துள்ளார்கள்.
கமலகாசனின் மேற்படி விமர்சனத்திற்காக புதுதில்லியிலிருந்து கன்னியாகுமரி வரை நீதிமன்றங்களிலும் காவல் நிலையங்களிலும் வழக்குத் தொடுப்பதும் புகார் கொடுப்பதும் இந்து மதத்தீவிரவாதிகள் தங்கள் திட்டத்தைச் செயல்படுத்த எப்போதும் தயாராக இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
பா.ச.க.வின் இந்து தீவிரவாதத்துக்கு குறைந்ததல்ல அ.இ.அ.தி.மு.க.வின் இந்து தீவிரவாதம் என்பதைக் காட்டும் வகையில் அமைச்சர் இராசேந்திர பாலாஜி கமலகாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். பாலாஜியின் பயங்கரவாதப் பேச்சைப் பலர் கண்டித்த பின்னும் அமைச்சர் திருத்திக் கொள்ளவில்லை.
கமலகாசன் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டால் “நாக்கை அறுக்கும்” எனது கூற்றைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் இராஜேந்திர பாலாஜி. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இராசேந்திர பாலாஜியின் நாக்கையறுக்கும் பேச்சை இரசித்துக் கொண்டிருக்கிறார்.
அ.இ.அ.தி.மு.கவின் இந்துத் தீவிரவாதம் செயலலிதா அம்மையார் மறைந்த பின் பா.ச.க கூட்டணியால் உருவானதல்ல. செயலலிதா அம்மையாரே அதற்குக் காரணமாக இருந்திருக்கிறார்.
குசராத்தில் நரேந்திர மோடி ஆட்சியில் இசுலாமிய மக்களுக்கெதிரான படுகொலைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. 2000 பேருக்குமேல் அப்பாவி முசுலிம்கள் இந்துத்துவா வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலைக்கு பாதுகாவலராக இருந்த நரேந்திர மோடியை உலகமே கண்டித்தது. அமெரிக்கா மோடிக்கு விசா தர மறுத்தது. அப்படுகொலைக்குப் பின் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற மோடி முதலமைச்சர் பதவி ஏற்றபோது அவ்விழாவில் கலந்துகொண்டு மோடியை வாழ்த்தினார் செயலலிதா. அதற்கு முன் அத்வானி தலைமையில் பாபர் மசூதி இடிப்பதற்காக நடந்த “கரசேவைக்கு” ஆட்களை அனுப்பி வைத்தார்.
மிகக்கடுமையான மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டு வந்தது; கிராமக் கோயில்களில் மரபுப்படி நடந்து வந்த ஆடு, கோழி பலி கொடுக்கும் சடங்கைத் தடைசெய்து சட்டம் இயற்றியது உள்ளிட்ட பிராமணத்துவ நோக்கிலான பல இந்துத்தீவிரவாத சட்டங்களை இயற்றினார் செயலலிதா. மக்கள் எதிர்ப்பால் அவற்றிலிருந்து பின்வாங்கினார். ஓசை எழுப்பாமல் இந்தத் திசையில் பல செயல்கள் செய்தார். குழந்தைகளுக்கு அவர் சூட்டிய பெயர்கள் அனைத்தும் சமற்கிருதப் பெயர்களே.
அவர் வளர்ப்பில் உருவான டிடி.வி தினகரன் கமலகாசனைக் கண்டித்தததுடன் கோட்சே எந்த மதம் என்றே தெரியவில்லை; அந்த பெயர் ரசியப் பெயர் போல் உள்ளது. அவர் எப்படி இந்து தீவிரவாதி ஆவார் என்று கேட்டு உள்ளார். டி.டி.வி. தினகரன் இப்படிப் பேசியிருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு தமிழ்நாட்டை உத்திரப்பிரதேசம் போன்று வகுப்புவாதக் கலவர மாநிலமாக்கி விடக் கூடாது.
இராசேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் அவர்களைத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு பெ.மணியரசன் கூறியுள்ளார்.