
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு,அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் தலைமையிலான சமஉக்கள், தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.இதனால் அதிமுக மீண்டும் உடையும் நிலை ஏற்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சி.வி.சண்முகம் கடுமையாகப் பேசிவந்த நிலையில், கடந்த ஜூலையில் அவரது ஆதரவாளர்கள் 11 நிர்வாகிகளின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டது.தொடர்ந்து அவ்வப்போது சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் பதவி பறிக்கப்பட்டது.
தற்போது,தாராபுரம்,மதுராந்தகம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததையடுத்து,பொதுக்குழுவைக் கூட்ட சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில்,நேற்று திடீரென சி.வி.சண்முகத்தின் ஆதரவு கிளைச் செயலாளர்களை அதிமுகவில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் சூழலில் சி.வி.சண்முகம் செய்தியார்களிடம் கூறுகையில்,நான் அதிமுகவில் எந்தப் பதவியிலும் இல்லை. ஒருங்கிணைப்புக்கான நடவடிக்கையை எடுத்தால் அதற்கு நான் ஒத்துழைக்கத் தயார் என்று தெரிவித்திருந்தார்.
அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தியும்,கட்சியைக் காக்க எந்த தியாகத்தையும் செய்ய எடப்பாடி தயாராக இருக்கிறார்.எடப்பாடியை சந்தித்து சி.வி.சண்முகம் பேசவேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட சி.வி.சண்முகம் ஆதரவாளரான பண்ருட்டி தொகுதி அதிமுக சமஉ மோகன்,நேற்று சேலத்தில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துப் பேசினார். அவருடன் ஆதரவாளர்களும் சென்றிருந்தனர்.
சந்திப்புக்குப் பின்னர் சமஉ மோகன் செய்தியாளர்களிடம் கூறுகையில்…
பண்ருட்டி தொகுதியில் அதிமுகவில் இருந்து சிலர் சில கட்சிகளுக்குப் போயிருக்கலாம்.தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இளைஞர்களைப் பார்த்து தேர்வு செய்து சார்பு அணி பதவியில் நியமனம் செய்துள்ளார். இதனால் அவரிடம் வாழ்த்துப் பெற வந்தோம்.யாரும் என்னை அழைக்கவில்லை.நானும் எங்கும் போகவில்லை.எடப்பாடி பழனிச்சாமியின் கட்டளையை ஏற்றுச் செயல்படத் தயாராக இருக்கிறோம்.விரைவில் நல்லது நடக்கும் என்றார்.
இந்நிகழ்வைத் தொடர்ந்து,எடப்பாடி மற்றும் சி.வி.சண்முகம் இடையே சமரசம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும்,சி.வி.சண்முகத்தின் தூதுவராகவே மோகன் சென்றிருக்கிறார் என்றும் அதிமுக வட்டாரங்களில் பேச்சு நிலவுகிறது.


