
நினைவில் நிறைந்த தாயகக் கனவு!நீதிக்காகத் தொடரும் தமிழினத்தின் பயணம்!
மாவீரர் நாள் – 27.11.2026
உலகப் பெருநிலமெங்கும் பரந்து வாழ்கின்ற என்னுயிர்த் தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என் அன்பு வணக்கம்!
இன்று மாவீரர் நாள்!
தாய் மண்ணைக் காக்க தன்னுயிர் தந்த குல சாமிகளைப் போற்றுகின்ற புனித நாள்.
மண்ணின் விடுதலைக்காக வீரச்சமர் புரிந்து விண்ணில் ஏறிய வீரர்களின் நினைவு நாள்.
காரிருள் சூழ்ந்த போதும்,கடும்புகை மூண்ட போதும்,மரணம் விழிகளுக்கு முன்னால் நிழலாடிய போதும் ஒருபோதும் அசராமல் களமாடி நின்ற மாவீரர்களின் மகத்தான நாள்.
இந்த கார்த்திகை மாதத்தில் காந்தள்மலர் சூட்டி மக்களைக் காக்க மண்ணை மீட்க இன்முகத்துடன் இன்னுயிர் ஈந்த நம் உடன் பிறந்தாரை உள்ளம் முழுக்க நிறைந்த வலியோடு கண்ணீர்த்திரை மறைக்க நெகிழ்வுடன் நினைவு கூர்கிறோம்.
யார் மாவீரர்கள்..?
நம்மைப் போல இரத்தமும் சதையும் கொண்டு கனவுகளும் ஆசைகளும் நிறைந்து வாழ்வாங்கு வாழவேண்டும் என்ற நோக்கத்தில் பிறந்து மண்ணின் விடுதலை என்று வந்தபோது துளியும் தயங்காமல் உயிரைத் தந்த பெருமக்கள்.
தன்னிகரற்ற தலைவனின் விழி அசைந்த திசையில் பகைமுடிக்க வெடித்துச் சிதறி உடலெங்கும் வெந்தணல் பூசிக்கொண்ட உத்தமர்கள்.
இந்த பூமிப்பந்தில் இறுதித்தமிழன் இருக்கும்வரை காலநதியின் ஓட்டத்தில் சளைக்காமல் தழைத்தோங்கும் தமிழின் இறுதிமூச்சு உள்ளவரை மாவீரர்களின் வீரமும் புகழும் உச்சரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.
மனிதகுல வரலாற்றில் எத்தனையோ இனங்கள் தோன்றியிருக்கின்றன.காலத்தின் ஓட்டத்தில் காணாமல் போயிருக்கின்றன.ஆனாலும் சில தேசிய இனங்கள் மட்டும் இதுநாள்வரை உயிர்ப்புடன் இருப்பதற்கு மிக முக்கிய காரணம் அதன் தனித்துவமான செம்மொழி.அப்படிப்பட்ட செம்மொழி தமிழ்மொழியை தாய்மொழியாகக் கொண்டு ஒரு தேசிய இனமாக மலர்ந்து உலகத்திற்கு நாகரீகம் பண்பாடு கலை இலக்கியம் வீரம் அறம் கொடை அறிவியல் எனப் பல பங்களிப்புகளைச் செய்த தமிழர் என்ற தேசியஇனத்திற்கு இறையாண்மைமிக்க நிலமோ அரசோ இல்லை என்பதுதான் இத்தனை ஆண்டு காலம் வரலாறு செய்த வஞ்சகம்.
தமிழன் வாழாத நாடில்லை ஆனால் அவனுக்கென்று உள்ளங்கை அளவிற்கு நாடில்லை என்பது காலம் காலமாய் தமிழர் மீது எழுதப்பட்ட அநீதி.
இந்தக் களங்கத்திலிருந்து மீண்டு வரவேண்டும்,அடிமைத்தளையில் இருந்து அன்னைத் தமிழினம் விடுதலை அடையவேண்டும் என்கின்ற புனித இலட்சியத்திற்காக தலையே விலை ஆனாலும் தந்துவிட்டுப் பார்ப்போமே என்று களத்தில் புகுந்தான் கரிகாலன் என்ற எங்கள் தலைவர் பிரபாகரன்.
அவர் வழியில் இலட்சக்கணக்கான இளைஞர்களும் இளம்பெண்களும் ஒரு தேசியஇனத்தின் விடுதலைக்காக காலாட் படையாக,கடற்படையாக,வான் படையாக முப்படையாக தொடங்கி ஆறுபடையாக விரிந்து விண்ணையும் வீரத்தால் முத்தமிட்ட வரலாறு இந்தமண் காணாத மகத்துவம்.
அப்படிப்பட்ட தலைவனையும் வீரம் செறிந்த ஒரு தலைமுறையையும் நினைவு கூறுகின்ற இந்த கார்த்திகை மாதம் பிறக்கின்றபோதெல்லாம் உலகத்தமிழர்களின் உள்ளங்களில் சொல்லிவிட முடியாத பெருந்துயரும்,காலத்தால் கரைத்துவிட முடியாத நினைவுகளும் சூழ்ந்துகொள்கின்றன.
கடல் கடந்து வாழ்ந்தாலும்,கண்டங்கள் கடந்து வாழ்ந்தாலும்,தலைமுறைகள் கடந்து வாழ்ந்தாலும் தாய்மண்ணின் நினைவுகளைத் தங்கள் நெஞ்சங்களில் சுமந்து வாழ்கிற தமிழர்களுக்கு இந்தநாள் வெறும் நாட்காட்டியின் ஒருநாள் அல்ல;நம் இனத்தின் வரலாற்றையும்,துயரத்தையும்,தாயகக் கனவையும் நினைவுகூர்கின்ற உணர்வுப்பூர்வமான நாள்.
பிழைப்புக்காக குடியேறிய சிங்களன் நமது வரலாறு மறைத்து தாய்மண் பறித்து மொழியை மறைத்து அதிகாரத்தைக் கொண்டு மக்களை அழித்த காட்சியினை உலகம் மரத்துப்போன மனதோடு வேடிக்கை பார்த்தது. எல்லோராலும் கைவிடப்பட்ட ஒரு தேசியஇனமாக தமிழர் என்ற தேசியஇனம் தலைகுனிந்து நிற்கும்போது முப்பாட்டன் முருகன் தூக்கிய வீரத்தோடு,கடல் கடந்து சோழன் ஆண்ட தீரத்தோடு,தன் சொந்த மக்களையே படையாகக் கட்டி நிமிர்ந்து நின்றார் நம் தலைவர் பிரபாகரன்.
அவர் கனவு கண்ட நாட்டை உலக வல்லாதிக்கங்கள் ஒன்றுசேர சூழ்ந்து வேட்டையாடி அழித்து தடை செய்யப்பட்ட ஆயுதங்களை கொத்துக் குண்டுகளை வீசி இனப்படுகொலையை சிங்கள வல்லாதிக்கம் கருணை இல்லாமல் செய்தபோது,எட்டு கோடி தமிழர்கள் வாக்கு செலுத்தி வரி செலுத்தி வாழவைத்த இந்திய பெருந்தேசமும் துணை நின்றதுதான் கொடுமையிலும் கொடுமை.
தாயகத்தை இழந்த இனமாக ஈழத்தமிழினம் உலகம் முழுக்க அலைந்து ஓடித் திரிகையில் உடன்பிறந்தார் என்ற முறையில் நம்மால் உதவமுடியாமல் அதிகாரம் அற்ற அடிமை இனமாக திரைப்பட மோகத்திலும் மது மயக்கத்திலும் தாயகத் தமிழகத்தில் வீழ்ந்து கிடப்பது இனப்படுகொலைக்கு நிகரான பேரழிவு.
காலம் எத்தனையோ காயங்களை ஆற்றிவிடலாம்.ஆனால்,ஒரு தேசியஇனத்தின் நெஞ்சில் பதிந்துவிட்ட தாயக இழப்பின் வலியை எந்தக்காலத்தாலும் ஆற்றிவிட முடியாது.பெற்ற பிள்ளைகளைப் பறிகொடுத்த தாயின் கண்ணீரையும்,தந்தையைத் தேடி வளர்ந்த பிள்ளையின் ஏக்கத்தையும்,உடன்பிறந்த உறவுகளை இழந்து தவிக்கின்றவர்களின் துயரத்தையும் எந்தச் சொற்களாலும் முழுமையாக விவரித்துவிட முடியாது.
தமிழீழ மண்ணில் போர் முடிவுற்றுப் பதினேழு ஆண்டுகள் கடந்துவிட்டன.ஆனால்,எம் மக்களின் துயரம் முடிவுக்கு வந்துவிட்டதா? பறிக்கப்பட்ட நிலங்கள் முழுமையாகத் திரும்பக் கிடைத்துவிட்டதா? காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகள் குறித்த உண்மை வெளிப்பட்டுவிட்டதா? போர்க்காலக் கொடுமைகளுக்கான நீதி கிடைத்துவிட்டதா? தமிழர்கள் தங்களுக்கான அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிக்கின்ற உரிமையைப் பெற்றுவிட்டார்களா?
இல்லையே ..!
போர் முடியட்டும் !தீர்வுகளை நாங்கள் தருகிறோம் என்று வாக்குறுதி கொடுத்த உலகத்தலைவர்கள் இன்று தங்களது மௌனத்தால் இனப்படுகொலையை அங்கீகரிக்கின்ற அட்டூழியம் இவ்வுலகில்தானே நடக்கிறது..??
போர்ச்சூழலில் காணாமல் அடிக்கப்பட்டவர்களும் வெள்ளை வேனில் வைத்து கடத்தப்பட்டவர்களும் எங்கே எங்கே என இதுவரை எங்களது தாய்மார்களும் சகோதரிகளும் கதறும் கதறல்கள் இதுநாள்வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.தமிழர்களின் தாயகநிலத்தில் சிங்களக் குடியேற்றங்களும் பண்பாடு கலாச்சார ஊடுருவல்களும் நிகழ்ந்து தமிழீழ மண்ணின் தனித்துவம் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகிறது.இந்தநிலையில் இருந்து மீளுவதற்கு தமிழர்கள் இதுவரை கொண்டிருந்த அரசியல் நிலைப்பாடுகளில் மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும்.
மாறிவருகின்ற உலகஅரசியல் சூழலில் நமது சிந்தனைகளும் செயல்திட்டங்களும் காலத்திற்கேற்ப மாற்றியமைக்கப்பட வேண்டிய தேவையிருக்கிறது.கடந்தகால வரலாற்றிலிருந்து படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டு,நிகழ்கால அரசியல் வாய்ப்புகளைப் பயன்படுத்தி,எதிர்காலத் தலைமுறைகளுக்கான பாதுகாப்பான வாழ்வை உருவாக்கிட வேண்டும்.
உலகத்தின் ஒழுங்கு மாறிவிட்டது.அரசியல் போக்குகள் அதன் திசைவழிகள் முற்றிலுமாக திசைதிரும்பி இருக்கின்றன.உலகம் முழுக்க சர்வாதிகாரங்களுக்கு எதிரான சத்தியகுரல்கள் எழும்பத் தொடங்கி இருக்கின்றன. இலங்கையிலேயே வெகுமக்கள் புரட்சி நடந்து மனித கொடுங்கோலன் ராஜபக்சே குடும்பம் கூட்டமாக விரட்டியடிக்கப்பட்ட காட்சிகளை நாம் பார்த்தோம்.
இந்த சூழ்நிலையை தமிழர் தேசிய இனம் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகள் குறித்த உண்மைகள் முழுமையாக வெளிக்கொண்டுவர போராட்ட ஆயத்தங்களுக்கு முன் வரவேண்டும்.மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருப்பது வெறும் மனித எலும்புக்கூடுகள் அல்ல;விடை தெரியாத ஆயிரக்கணக்கான கேள்விகள்!நீதி மறுக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வியல் சாட்சியங்கள்!
அவற்றை முறையாக ஆராய்ந்து உண்மைகளை வெளிக்கொண்டுவரவும்,போர்க்கால மனித உரிமை மீறல்களுக்கும் இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளுக்கும் பன்னாட்டு நீதிப் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யவும் உலகநாடுகளும் ஐக்கியநாடுகள் மன்றமும் முன்வர தமிழர் தங்கள் ஓர்மையை,தமிழ்த் தேசிய அரசியலின் வலிமையை உறுதிப்படுத்த வேண்டும்.
தமிழீழத் தாயகம் என்பது தமிழர்களுக்கு வெறும் நிலப்பரப்பு அல்ல.அது எம் முன்னோர்களின் வாழ்விடம்;எம் மொழியின் வேர்கள் பதிந்திருக்கும் மண்;எம் பண்பாட்டின் தொடர்ச்சி;எம் எதிர்காலத் தலைமுறைகளின் வாழ்வுரிமையோடு பின்னிப்பிணைந்த நிலம்.
ஈழத்தமிழர்களின் பூர்வீக நிலங்கள் பாதுகாக்கப்படுவதற்கும்,இராணுவமயமாக்கல் முடிவுக்குக் கொண்டுவரப்படுவதற்கும்,பண்பாட்டு அடையாளங்கள் சிதைக்கப்படாமல் இருப்பதற்கும்,தமிழர்கள் சமத்துவத்தோடும் கண்ணியத்தோடும் வாழ்வதற்குமான அரசியல் சூழல் உருவாக்கப்பட வேண்டும்.
தாயகத் தமிழகத்திலும் ஏற்பட்டிருக்கிற இந்த அரசியல் பேரிடரில் இருந்து மீண்டெழுவதற்கான பாய்ச்சலில் தமிழ்த் தேசிய இளையோர் அணியமாகி வருகின்றனர்.தளராத நம்பிக்கையோடு ஓயாதஅலைகளாய் சத்தியதலைவனின் பிள்ளைகள் மீண்டு வருவார்கள்.
தமிழீழ சோசலிச குடியரசு மலர்வதற்கான ஏதுவான அரசியல் மாற்றங்கள் தெற்காசிய பிராந்தியத்தில் நிகழ வேண்டுமானால் இந்திய பேரரசின் வெளியுறவுக் கொள்கைகள் மாறவேண்டும்.அதற்கு தமிழகத்தில் இருந்து தமிழ்த் தேசிய அரசு ஒன்று உருவாகி அழுத்தங்களை தரவேண்டும்.அதற்கான காலத்தை உருவாக்கத்தான் தளராமல் களத்திலே தமிழின இளையோர் நாம் தமிழர் என அணிவகுத்து நிற்கிறோம்.
உலகெங்கும் பரவி வாழ்கின்ற தமிழர்களிடம் அறிவாற்றல் இருக்கிறது;பொருளாதார வலிமை இருக்கிறது; தொழில்நுட்பத் திறன் இருக்கிறது;பன்னாட்டு அரசியல் தளங்களில் செயலாற்றக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து,அறவழியிலும் சனநாயக வழியிலும் தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்காகச் செயலாற்ற வேண்டிய காலமிது.
தனித்தனி அமைப்புகளாகப் பிரிந்து நிற்பதும்,தன்முனைப்புகளுக்கு முதன்மையளிப்பதும்,ஒருவரையொருவர் குறைகூறிக் கொள்வதும் நம் இனத்தின் அரசியல் வலிமையைச் சிதைத்துவிடும்.
எட்டுகோடிக்கும் அதிகமான தமிழர்கள் வாழ்கின்ற இந்திய ஒன்றியத்திற்கும் ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பிருக்கிறது.இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையில் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பும்,அவர்களது அரசியல் எதிர்காலமும் உரிய முதன்மையைப் பெறவேண்டும்.
ஈழத்தமிழர்கள் தங்களது அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிக்க ஏதுவாக,பன்னாட்டுக் கண்காணிப்புடன் கூடிய பொதுவாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்கிற கோரிக்கையை உலக அரங்கில் தொடர்ந்து முன்வைக்க வேண்டும்.அதற்கான ஆதரவை உலக நாடுகளிடமும் பன்னாட்டு அமைப்புகளிடமும் சனநாயக வழியில் திரட்டிட வேண்டும்.
தாயகத் தமிழகமும்,ஈழத்தமிழர்களும்,புலம்பெயர்ந்து வாழ்கின்ற உலகத்தமிழர்களும் அறிவாலும்,அன்பாலும், ஒற்றுமையாலும் இணைந்து நிற்கவேண்டிய வரலாற்றுத் தேவையை இந்தநாள் நமக்கு உணர்த்துகிறது.
மாவீரர்கள் எந்தக் கனவிற்காக தங்கள் உள்ளங்கையில் தாய்மண்ணைப் பிடித்துக்கொண்டு தன்னுயிரை தந்தார்களோ அந்தக்கனவை நிறைவேற்ற தமிழராய் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளே உறுதியேற்று நிமிருவோம்.
நமது உள்ளத்து உறுதியிலும்,நம் ஒவ்வொரு அசைவிலும் மாவீரர் தெய்வங்கள் நமக்கு வழிகாட்டடும் !
தாயகக் கனவினில் சாவினை தழுவிய மாவீரர்களுக்கு…
வீர வணக்கம்! வீர வணக்கம்!
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி


