மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அக்கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கடந்த 12 ஆம் தேதி இரவு பரப்புரை செய்தார்.
அரவக்குறிச்சி தொகுதி பள்ளப்பட்டி அண்ணாநகர் சந்திப்பில் அவர் பேசுகையில், ‘அந்தக் காலத்தில் வெள்ளையனே வெளியேறு என்று போராடினோம். தற்போது கொள்ளையனே வெளியேறு எனப் போராட வேண்டிய சூழல் வந்து விட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து. அவர்தான் நாதூராம் கோட்சே. நான் காந்தியின் மானசீகக் கொள்ளுப்பேரன். அந்தக் கொலைக்குக் கேள்வி கேட்க நான் வந்திருக்கிறேன் என நினைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.
கமல்ஹாசனின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தீவிரவாதத்தையும், இந்து மதத்தையும் தொடர்புப்படுத்தி கமல்ஹாசன் கூறிய இந்தக் கருத்துகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இந்து மதத்துக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேச்சு இருந்ததாக கூறி கமல்ஹாசனுக்கு பாஜக அதிமுக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கரூர் மாவட்ட இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் கே.வி.ராமகிருஷ்ணன் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் நேற்று மாலை கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு கொடுத்தார்.
அந்த மனுவில், கமல்ஹாசனின் பிரசார பேச்சு இந்துக்களிடம் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பள்ளப்பட்டி பகுதியானது முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதியாக இருப்பதால், அவர்களின் ஓட்டுகளை அவர் கட்சிக்கு பெறுவதற்காக அவ்வாறு பேசியுள்ளார். இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த இந்துக்களை அவதூறாகவும், தீவிரவாதி என்றும் சித்தரித்துப் பேசினார். அவரது பேச்சு இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் பகை உணர்வை ஏற்படுத்துவதாகவும் தூண்டுவதாகவும் இருந்தது. எனவே, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் கூறப்பட்டிருந்தது.
புகாரின் பேரில், அரவக்குறிச்சி காவல் ஆய்வாளர் திருமேனி, இ.பி.கோ சட்டப்பிரிவு 295 (ஏ) (இந்துக்களை இழிவுப்படுத்துதல்), மற்றும் 153 (ஏ) (பொது இடத்தில் மதகலவரத்தை தூண்டுவதுபோல் பேசுதல்) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்தார்.
இதுதொடர்பாக கரூர் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் வி.விக்ரமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்து மதத்தைப் புண்படுத்தும் விதமாகப் பேசிய மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமல்ஹாசன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் மற்றும் மதம், இனம், மொழி, சாதி சம்பந்தமாக வன்முறையைத் தூண்டும் விதமாக பேசுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதால் கமலைக் கைது செய்யவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால் அககட்சியினர் பதட்டத்தில் உள்ளனர்.