இராமர் கோயில் ஆதரவு, இராமர் கோயில் எதிர்ப்பு என்பனவற்றை அளவையாகக் கொண்டு ‘சங்கிப் பிரிப்பு’ வேலை நடந்துகொண்டிருக்கிறது தமிழ்நாட்டில். ரஜினியை ‘சங்கி’ என்று திட்டுவதும் மேற்கண்ட அளவையைக் கொண்டுதான்.
//இராமர் கோயில் ஆதரவு நிலைப்பாட்டை ரஜினி எடுத்திருக்கிறார் – அதனால் அவர் சங்கி; இராமர் கோயில் எதிர்ப்பு நிலைப்பாட்டை நான் எடுக்கிறேன் – அதனால் நான் சங்கி எதிர்ப்பாளன்! \\ …
இந்த வகையாக ஒரு ஏமாற்றுக் கூட்டம் புறப்பட்டிருக்கிறது. இராமர் கோயில் எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்தவர்கள் எல்லாம் சங்கி எதிர்ப்பார்களா? என்றால் அப்படியல்ல; சங்கி எதிர்ப்பாளர்களின் நிலைப்பாட்டில் இராமர் கோயில் எதிர்ப்பும் ஒன்று. அவ்வளவே! ‘சங்கி எதிர்ப்பு’ என்பதுவும் ‘சங்கிப் புரிதல்’ என்பதும் ஒன்றல்ல.
மொழி வழித் தேசிய இனங்களின் நிலங்களையெல்லாம் விழுங்கி, தேசியப் பண்பாடுகளையெல்லாம் சிதைத்து, தேசிய மொழிகளையெல்லாம் அழித்துக் கபளீகரம் பண்ணிவிட்டு; கலாச்சாரமற்றவர்களாக, மொழியற்றவர்களாக, நிலமற்றவர்களாக, இன அடையாளமற்றவர்களாக, வரலாறு அற்றவர்களாகத் துணைக்கண்ட மக்களை மாற்றி; அவர்களுக்கெல்லாம் சங்கிச் சாயம் ஏற்றுகிற வேலைதான் சங்கி வேலை.
அதனால் உண்மையான சங்கியெதிர்ப்பு என்பது, தேசிய இனங்களின் இறையாண்மையைக் காப்பதில்தான் தங்கிநிற்கிறது. தமிழரைத் ‘தமிழர்’ என்று சொல்ல மறுக்கிற கூட்டங்களெல்லாம் ரஜினியை சங்கி என்கின்றன. ரஜினியை ‘சங்கி’ என்று சொல்பவர்களும் சங்கிகளே – தமிழரைத் ‘தமிழர்’ என்று சொல்ல மறுத்தால்
தமிழ் இலக்கணத்தில் ஐந்து பால் வகைகள் குறிப்பிடப்படுகின்றன ; உயர்திணைக்கு உரியனவாக ஆண்பால், பெண்பால், பலர்பால் ஆகியனவும் ; அஃறிணைக்கு உரியனவாக ஒன்றன்பால், பலவின்பால் ஆகியனவும் சேர்த்து ஐந்து பால்களாகப் பிரிக்கப்பட்டு இருக்கின்றன.
சங்கிகள் எத்தனை வகைப்படும்? என்றால், எத்தனையோ வகைப்படும்! இந்த வகைகளையெல்லாம் ஐந்து பெரும் பிரிவுகளில் அடைக்கலாம். ‘நேர்முகச் சங்கி, மறைமுகச் சங்கி, நாடகச் சங்கி, அறிவிலிச் சங்கி, நனவிலிச் சங்கி’ என்பன அந்த ஐந்து பெரும் பிரிவுகள்.
மகாத்மா காந்தியின் நினைவு நாளில் ரஜினியை மையமாக வைத்து சங்கி உரையாடல் நடத்துகிற வாய்ப்புக் கிட்டியிருக்கிறது. நேர்முகச் சங்கியாகிய ரஜினிக்கும், நனவிலிச் சங்கியாகிய மகாத்மா காந்திக்கும் நன்றிகள்.
மகாத்மா காந்தி, உலகு தழுவிய அன்புப் பிணைப்பைக் கனவு கண்டார். அவருள்ளே, உலகத்தையே தமது வீடாக வரித்துக் கொள்கிற அகண்ட மனம் அமைந்திருந்தது. அவ்வகையில் அவர் சங்கி எதிர்ப்பாளர். ஆனால் காந்தியின் வரலாற்று நனவிலியானது, சங்கியத்திற்கு ஊட்டம் கொடுக்கக்கூடியது. காந்தியின் விருப்பமின்றி, காந்தியின் விழிப்பின்றி – சங்கியாதரவு சங்கிகளுக்குக் கிட்டுகிறது. இப்படியொரு பேராபத்து காந்தியின் புரிதல் முறையில் இருக்கிறது என்கிற உண்மைகூட காந்திக்குப் புரிபட்டிருக்கவில்லை.
இவ்வளவுக்கு நாம் காந்தியை மதிப்பீட்டுக்கு உட்படுத்துகிறோம் என்றால் இந்த மதிப்பீட்டுக்குக் காரணமானவர் மெய்வழிப்பர் ஜே. கிருஷ்ணமூர்த்தி. மகாத்மா காந்தியின் உள்ளம் கட்டுப்படுத்தப்பட்ட உள்ளம்; ஜே கிருஷ்ணமூர்த்தியின் அகம் விட்டு விடுதலையாகிய அகம்.
– ஒரு பிரமிளிஸ்டின் பார்வையில் இருந்து.
பின்குறிப்பு –
கேள்வி : காந்தி, சங்கிகளுக்கு எதிரானவர் என்பது, ஒரு சங்கியால் காந்தி கொலை செய்யப்பட்டதிலிருந்து தெரிகிறது அல்லவா?
விடை : வரலாற்றுப் போக்குகளை விளங்கிக்கொள்வது அவ்வளவு எளிதானது அல்ல. காந்தியைக் கொன்றதாலேயே ‘சங்கிகளின் கோட்பாட்டிற்கு காந்தி எதிரானவர்’ என்று பொருளல்ல. சங்கிகளின் அணுகுமுறையானது காந்தியின் அணுகுமுறையிலிருந்து எதிரானதாக இருந்தது என்பதுதான் காரணம். மேலும், 1947 வரை பிரிட்டிசாரை வெளியேற்றுவதற்காக மக்களை ஒன்றிணைக்கவேண்டி இருந்தது. 1857 இல் தொடங்கி 1947 வரையிலான ‘பிரிட்டிஷ் இந்திய’ அதிகாரத்தை எதிர்க்கும் அளவு மக்களுக்குத் தினவூட்டியவர் காந்தி. அப்படியாக மக்களை ஒருங்கிணைத்து மக்களுக்கு வலிமையூட்டக்கூடிய அளவு சங்கிகள் ஆற்றல் பொருந்தியவர்கள் அல்ல. ஏனெனில் அவர்களால் வெறுப்பு ஊட்டாமல் மக்களை ஒருங்கிணைக்கவே முடியாது. அதனால், அன்பு வழியையும், அகிம்சை வழியையும் சகிப்புத்தன்மையையும் போதிக்கிற காந்தி தேவைப்பட்டார்.
மக்களை ஒருங்கிணைப்பதற்கு காந்தி கண்ட வழிமுறை வேற்றுமையில் ஒற்றுமை. அங்கு மனிதர்களுக்குள் பிளவுகள் இல்லாததாகிறது. ஆனால் சங்கிகள் கையாள நினைத்தது வேற்றுமைகள் அழிந்த ஒருமை. அதுதான் இன்றைய ஃபாசிசமாக உருவெடுத்து நிற்கிறது.
காந்திக்கும், சங்கிகளுக்கும் இடையிலான முரண்பாடு என்பது மிதவாத பிராமணியத்திற்கும், தீவிரவாத பிராமணியத்திற்குமான முரண்பாடு.
அதே முரண்பாடுதான் இன்றைக்கு இராகுல் காந்திக்கும் மோடிசிக்கும் இடையில் நாடகப் பண்புகளுடன் கட்டியெழுப்பப்படுகிற செயற்கை முரண்பாடு. இந்த முரண்பாட்டின் வெகுஜன வடிவம்தான் பிஜேபிக்கும் காங்கிரசுக்கும் இடையிலான முரண்பாடு.
நிதீஷ் குமார் இன்டியா கூட்டணியில் இருந்து என்டிஏ கூட்டணிக்குத் தாவியது என்பது, சங்கிய உள் முரண்களின் வெகுஜன செயல் வடிவக் குழப்பங்களது உச்சமாகும்.
அடுத்து வருகிற 20 ஆண்டுகளில் இந்தக் குழப்பங்கள் துணைக்கண்டம் முழுவதையும் நோய் பீடிக்கச்செய்யும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
– தங்கம்