மத்தியக்கல்வி (சிபிஎஸ்ஈ) யிலும் மலையாளம் கட்டாயம் – கேரள அமைச்சரவை அதிரடி


ஏப்ரல் 4 ஆம் தேதி நடந்த முதல்வர் பினராயிவிஜயன் தலைமையில் நடந்த கேரள அமைச்சரவைக் கூட்டத்தில், வரும் கல்வியாண்டு முதல், கேரளத்தில் மாநிலக்கல்வி (ஸ்டேட் போர்டு) மத்தியக்கல்வி (சிபிஎஸ்ஈ) என எந்த வகைக் கல்வி என்றாலும் மலையாள மொழி கட்டாயம் என்கிற முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்தியகம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) தலைமை தாங்கும் அமைச்சரவை இம்முடிவை எடுத்திருக்கிறது. அதற்கு வரவேற்பு தெரிவித்து தமிழ்வழிக்கல்விக்காகப் போராடிவரும், ஆழிசெந்தில்நாதன் எழுதியுள்ள குறிப்பில்,

மலையாள மொழிப்போராளிகளுக்கு வாழ்த்துகள்..
கேரளத்தில் மலையாள மொழிக்கு இருக்கவேண்டிய அதிகாரத்தை உருவாக்கும் முயற்சியில் உறுதியாக நிற்கும் சிபிஎம் அரசுக்கு நன்றி.
சர்வதேச சிலபஸ், சிபிஎஸ்இ என எந்த சிலபஸாக இருந்தாலும் மலையாளத்தை புறக்கணிக்கமுடியாத அளவுக்கு ஒரு அவசரச்சட்டத்தை உருவாக்கியிருக்கிறது கேரள அரசு.
இது வெறும் மொழிப்பிரச்சினை அல்ல என்பதை நம்மவர்களும் அறிவார்கள்…
சில மாதங்களுக்கு முன்பு இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்வொன்றில் – கிளியர் அமைப்பு சார்பாக – கலந்துகொண்டதை பதிவிட்டிருந்தேன்.
சிபிஎம், காங்கிரஸ், கேரள காங்கிரஸ் என எல்லாக் கட்சியின் தலைவர்களையும் அழைத்து அதற்கு ஏற்பாடு செய்திருந்த மலையாள ஐக்கிய பிரஸ்தான அமைப்பின் தோழர்கள், பத்து நாள் கேரளம் முழுக்க மொழிப் பயணம் மேற்கொண்டிருந்தார்கள்..
அவர்களுடைய நெடுநாள் கோரி்க்கையை நிறைவேற்றும் வகையில் கேரள அரசு இந்த முடிவை எடுத்திருக்கிறது..
புதிய கல்வியாண்டு தொடங்கப்போகும் நேரத்தில் உறுதியான நடவடிக்கை. சேரன்மாருக்கு நல்வாழ்த்துகள்.

இவ்வாறு அவ்ர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Response