கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் முதல் அலையை விட இரண்டாவது அலையில் அதிகளவிலான பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது.
இதன் காரணமாக மத்தியக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) நடத்தும் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெறவில்லை.
இந்தத்தேர்வுகள் நடத்தப்படுமா என்ற கேள்வி, நாடெங்கும் எதிரொலித்தது.
ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி நடைபெற இருந்த சி.பி.எஸ்.இ. 10 ஆம் வகுப்பு தேர்வுகள் இரத்து செய்யப்பட்டன. மே மாதம் 4 ஆம் தேதி நடைபெற இருந்த 12 ஆம் வகுப்பும் தேர்வுகளை சி.பி.எஸ்.இ. ஒத்திவைத்தது.
ஆனால் மாணவ, மாணவியர் நலன் கருதி 12 ஆம் வகுப்பு தேர்வுகளையும் இரத்து செய்ய வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது.
சி.பி.எஸ்.இ. 12 ஆம் வகுப்பு தேர்வுகள் குறித்து ஜூன் 1 ஆம் தேதியோ, அதற்குப் பின்னரோ முடிவு எடுக்கப்படும் என்று மத்தியக் கல்வி வாரியம் கூறியது.
இந்த நிலையில் சி.பி.எஸ்.இ. 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் குறித்து முடிவு எடுப்பதற்காக டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நேற்று காணொலிக் காட்சி வழியாக நடைபெற்றது.
இதில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா (உள்துறை), ராஜ்நாத் சிங் (ராணுவம்), நிர்மலா சீதாராமன் (நிதி), பியூஷ்கோயல் (வர்த்தகம்), பிரகாஷ் ஜவடேகர் (தகவல், ஒலிபரப்பு), தர்மேந்திர பிரதான் (பெட்ரோலியம்), ஸ்மிரிதி இரானி (பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு), பிரதமரின் முதன்மைச் செயலாளர் பி.கே.மிஷ்ரா, மத்திய மந்திரிசபை செயலாளர் ராஜீவ் கவுபா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.
இந்தக்கூட்டத்தில், இதுவரையில் நடந்த பரந்த மற்றும் விரிவான ஆலோசனைகள், மாநில அரசுகள் உள்பட சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகள் குறித்து அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.
அதைத்தொடர்ந்து சி.பி.எஸ்.இ. 12 ஆம் வகுப்பு இறுதித்தேர்வுகளை இரத்து செய்வது என மத்திய அரசு முடிவு எடுத்து அறிவித்தது. மாணவர்கள் நலனையொட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
சி.பி.எஸ்.இ. 12 ஆம் வகுப்பு மாணவர்களின் முடிவுகளை (ரிசல்ட்) பொறுத்தமட்டில், நன்கு வரையறுக்கப்பட்ட புறநிலை அளவுகோலின்படி உரிய கால கட்டத்தில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை சி.பி.எஸ்.இ. மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இதுபற்றி மத்திய அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற நிலைமைகளையும், இது தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளையும் கவனத்தில் கொண்டு, 12 ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வுகள் இந்த ஆண்டு நடத்தப்படமாட்டாது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் கடந்த ஆண்டைப்போலவே, சில மாணவர்கள் தேர்வுகளை எழுத விரும்பினால், எப்போது நிலைமை உகந்ததாக இருக்குமோ அப்போது அவர்களுக்கு சி.பி.எஸ்.இ. வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது.
12 ஆம் வகுப்புத் தேர்வுகள் இரத்து என்பதோடு நில்லாமல் மாணவர்கள் தேர்வெழுத விரும்பினால் எழுத வாய்ப்பு வழங்க வேண்டும் என்றுசொல்லியிருப்பது பல குழப்பங்களுக்கு வழிவகுக்கும் என்கிறார்கள்.