தமிழகப் பள்ளிகளுக்கு இந்துத்துவாவைப் பரப்பும் விவேகானந்தர் ரதத்தை அனுமதிப்பதா? – கி.வீரமணி கோபம்

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகத்தில் 8-வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி, வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்க உள்ளது. இதையொட்டி விவேகானந்தர் ரதங்கள் ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ரதங்களுக்கு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நேற்று பூஜை நடத்தி, ஊர்வலம் தொடங்கி வைக்கப்பட்டது.

மொத்தம் 25 ரதங்களில் விவேகானந்தர் சிலை வைக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டன. சென்னை ராமகிருஷ்ண மடத்தின் மேலாளர் சுவாமி விமூர்த்தானந்தா, ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி, இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியின் துணைத் தலைவர் ராஜலட்சுமி, நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம் உள்ளிட்டோர் ரத பூஜையில் பங்கேற்றனர். இந்த   ரத ஊர்வலத்தில். 25 ரதங்கள் விவேகானந்தரின் சிலைகளை தாங்கி ஆயிரம் அரசுப் பள்ளிகளுக்கு சென்று அங்குள்ள மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளன என்று சொல்லப்பட்டிருந்தது.

இதைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்….

இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியின் முன்னோட்டமாக மயிலாப்பூரில் விவேகானந்தர் ரத பூஜையுடன் 25 ரதங்களுக்கு  சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. சென்னையிலிருந்து நேற்று இரவு 9 மணிக்கு புறப்பட்ட 25 ரதங்களும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 1000க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பள்ளிகளுக்குச் செல்லுகின்றன என்ற செய்தி வந்துள்ளது.

இந்து மதத்தை அமெரிக்காவரை சென்று பரப்பியவர் என்று புகழப்படுபவர் விவேகானந்தர். இப்பொழுது இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சியோடு சம்பந்தப்படுத்தி விவேகானந்தர் ரதங்கள் பள்ளிகளுக்குச் செல்லுவது என்பது அனுமதிக்கத் தகுந்தது தானா? ஏற்கத் தகுந்ததுதானா?

மாணவர்கள் மத்தியில் ஒரு குறிப்பிட்ட மதச் சிந்தனையை வளர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடலாமா? இந்துத்துவா பெயரில் நாட்டில் ஆங்காங்கே மதக் கலவரங்களை விசிறி விட்டுக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில், மாணவர்கள் மத்தியிலும் இத்தகைய சிந்தனைகளைத் தூண்டுவது ஆபத்தான செயல் அல்லவா?

மத்திய பிஜேபி என்னும் இந்துத்துவா ஆட்சியோடு, தமிழ்நாடு அரசும் கைகோத்துக் கொண்டு விட்டதா? இது மதச் சார்பற்ற அரசின் தன்மைக்கு விரோதமானதல்லவா?

தமிழக முதல் அமைச்சர் இதன்மீது கவனம் செலுத்தி மதச்சார்பின்மையைப் பாதுகாக்க முன் வருவாரா? விவேகானந்தர் ரதம் ஊர்வலத்தைத் (குறைந்தபட்சம் பள்ளிகளுக்குச் செல்வதையாவது) தடுப்பாரா? எங்கே பார்ப்போம்

என்று கூறியிருக்கிறார்.

Leave a Response