பார்வையாளர்களை முட்டாள்களே என்றழைத்த தங்கர்பச்சான் – தொலைக்காட்சி விவாதத்தில் பரபரப்பு

7.1.2018 மாலை 6 மணிக்கு சேலத்தில் பார்வையாளர்கள் முன்னிலையில், ஐம்பது ஆண்டு கால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா? வீழ்ந்திருக்கிறதா? என்கிற விவாத அரங்கம் நடந்தது. அதில் பங்கேற்றுப் பேசிய வழக்குரைஞர் அருள்மொழி, அவ்விவாதம் குறித்து எழுதியுள்ள பதிவு….

நேற்று சேலத்தில் நடைபெற்ற நியூஸ் 18 விவாத நிகழ்ச்சியில்…காவிக் கும்பலும் சாதிக்கும்பலும் ….செய்த குழப்பங்கள்.

50ஆண்டுகள் திராவிட அரசியல் கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாடு வளர்ச்சியடைந்ததா வீழ்ச்சியடைந்ததா
என்ற தலைப்பு..

வளர்ச்சி அணியின் தலைவர் கம்பம் செவ்வேந்திரன் அவர்கள் மிக அழுத்தமான ஒரு முன்னுரையுடன் திராவிட இயக்கச் சாதனைகளைச் சொல்லி விவாதத்தைத் தொடங்கினார்.

நான்பேசும்போது வளர்ச்சி பற்றிப் புரிந்து கொள்ள வரலாற்றுப் பின்னணியைப் பார்க்க வேண்டும் என்ற அடிப்படையோடு
1925 ஆம் ஆண்டில் தந்தைபெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்..அதே 1925 இல் ஆர்.எஸ்.எஸ். தொடங்கப்பட்டது
இரண்டு அமைப்புகளும் தேர்தலில் நேரடியாகப் பங்கெடுப்பதில்லை.ஆனால் அவர்களின் சித்தாந்தத்தைக் கொண்ட அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வந்தன.

அப்படி இருவேறு கொள்கைகளின் வழிவந்த ஆட்சிகள் ஆளும் மாநிலங்களை ஒப்பிட்டால்தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி என்ன என்று தெரியும் என்பதையும்..

கியூபா இஸ்ரேல் நார்வே யோடு ஒப்பிடுகிற அளவிற்கு வளரவில்லை ஆனால் தேசியக் கட்சிகளான காங்கிரசும் பிஜேபியும் ஆளும் மாநிலங்களைவிட பன்மடங்கு வளர்ச்சியைத் தமிழ்நாடு பெற்றிருக்கிறது என்றும்

இயற்கை வளங்களைப் பாதுகாக்கத் தவறியதும் தமிழ்வழிக் கல்விக்கான உரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தாமல் விட்டதும் திராவிட அரசியல் கட்சிகள் தவறிய இடங்கள்..என்பதையும் அதிலும் இந்திய அரசின் சர்வதேச வணிக ஒப்பந்தங்களின் குறுக்கீடுகளும் உள்ளன என்பதையும் பேசினேன்.
எங்கள் அணியில் திரு.நாஞ்சில் சம்பத் அவர்கள் தேசியக் கட்சிகளை தமிழ்நாடு ஒரு போதும் ஏற்காது என்று ஓங்கி அடித்தார்.

எனக்கு அடுத்து எதிரணியில் பேசிய இயக்குநர் தங்கர்பச்சான் அவரது வழக்கமான பாணியில் விமர்சனங்களை முன்வைத்தார். திராவிடத்தைச் சொல்லி கர்னாடகத்தில் இருந்து தண்ணீர் வாங்குங்கள் பார்க்கலாம் என்றார். அவரது அணியில் எனக்கு முன் பேசிய பா.ம.க வின் திரு. வடிவேல் ராவணன் அவர்களும் அவர்களது அணியில் இறுதியில் பேசிய திரு.எச்.ராஜா அவர்களும் திராவிடம் என்பது தமிழர்களை ஏமாற்றிய சொல் என்று ஒரே குரலில் பேசினார்கள்.

அதற்கு மறுப்பு சொல்லும் இரண்டாவது வாய்ப்பில் திராவிடம் என்பதை ஆதி சங்கரர் மனோன்மணீயம் சுந்தரனார் அயோத்திதாசர் பாவாணர் ஆகியோரை மேற்கோள் காட்டி பதில் கூறினேன்.

மதுரை ஆற்றுத் தண்ணீரை திருநெல்வேலிக்கு அனுப்புவதில் பிரச்சனை ஏற்பட்டால் மதுரைக்காரர் தமிழரில்லையா என்று கேட்டேன். அடுத்து திவ்யா என்ற தமிழ்ப்பெண் இளவரசன் என்ற தமிழ்ப் பையனை காதல்திருமணம் செய்ததற்காக இரண்டு ஊர் பற்றி எரிந்ததே இருவரில் யார் தமிழரில்லை என்று கேட்டேன்.

முதல்சுற்றில் பேசும்போது ஆர்.எஸ்.எஸ் இயக்கமும் 1925 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது என்று சொன்னவுடன் பின்வரிசைகளில் இருந்த காவி வேட்டி தலையில் காவித் துண்டு என்று பரிவார அடையாளத்துடன் இருந்த சிலர் எழுந்து இந்து மதத்தைப் பற்றிப் பேசாதே என்று கூச்சலிட.. அவர்களை மற்றவர்கள் அடக்க முற்பட கொஞ்சநேரம் கூச்சல் குழப்பம்.. என் கருத்தை நான் பேசுவேன் அதை மறுப்பதற்கு உங்கள் தலைவர் எச்.ராஜா இருக்கிறார்.. தன்னம்பிக்கை இருந்தால் அமைதியாகப் பேச்சைக்கேளுங்கள் என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்து பேசி முடித்தேன்.

இரண்டாவது சுற்றில் இளவரசன் திவ்யா பேரைச்சொன்னவுடன் முன்னால் இரண்டு மூன்றாம் வரிசையில் இருந்த சிலர் ஜாதியைப் பற்றிப் பேசாதே என்று கூச்சலிட….நான் ஜாதிபற்றிப் பேசவில்வை ஜாதியைக் கடந்து தமிழர்களாக இருப்பதைப் பற்றிப் பேசுகிறேன் என்று சொல்லி பேசி முடித்தேன்.

எனக்குப் பதில் சொல்லவந்த இயக்குநர் தங்கர்பச்சான் நாஞ்சில் சம்பத் ஒன்பது ரூபாய் நோட்டு படத்தில் பா.ம.க கொடி உயரப் பறந்த காட்சி பற்றிக் கூறியதைச் சுட்டிக்காட்டி என்னைச் சாதிக்குள் அடைக்கப் பார்க்கிறீர்கள் என்று உணர்ச்சி வசப்பட்டுப் பேசினார். தொடர்ந்து பேச்சு வேகத்தில் பார்வையாளர்களைப் பார்த்து இரண்டு முறை முட்டாள்களே என்று அழைக்க திராவிட முன்னேற்றக் கழகத்தினர் குறுக்கிட்டு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூற ..தங்கர்பச்சானுக்கு ஆதரவாக ஒரு குழுவினர் அவர்களை எதிர்த்தனர். அப்படி தங்கர்பச்சானுக்கு ஆதரவாகக் களமிறங்கியவர்கள் யார் என்றால்.என்னை ஜாதி பற்றிப் பேசாதே என்று கூச்சலிட்டவர்கள்தான்.

கடைசியாக திரு.எச்.ராஜா தன் பங்குக்கு மதுரை வைத்யநாத அய்யரின் கோயில் நுழைவுப் போராட்டம் பற்றிக் கூறி அதைஎதிர்த்து தந்தை பெரியார் பேசியதாக ஏதேதோ சொல்ல …அது பொய் பொய் பொய் என்று விடாது முழங்கினார் ஒரு பெரியாரியத் தோழர்.
மீண்டும் ஒரு சலசலப்பு.

இறுதியில் குணசேகரன் முடிவுரை கூற விவாதம் இனிதே முடிந்தது.

இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

Leave a Response