தோழர் ரஞ்சித் அவர்களுக்கு,
வணக்கம்.
நான் நேற்றைய நிகழ்வு கண்டேன். கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்.
என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்துள்ளீர்கள். எங்கோ மூலையில் இசைத்துக் கொண்டு என்னைக் கண்டுகொள்ள யாருமில்லையே எனப் புலம்புவதில் பயனில்லை. அதனைக் கோலாகலமாகப் பெரு விருந்தாக மக்கள் கண்களில் படைத்துக் காட்ட வேண்டும். இந்த அசத்தல்தான் பகைவரையும் அக்கலையைச் சுவைக்கச் செய்யும். அந்த ஐந்து நட்சத்திரத் தகுதியை கானா கலைக்கு வழங்கியுள்ளீர்கள். இதற்கு உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
நீங்கள் செய்து காட்டியிருப்பது சாதாரணச் சாதனை அல்ல. கானா கலை ஒரு குறிப்பிட்ட சாதியின் கலை, எனவே அது இழிகலை என்பதை உடைக்கும் வழி என்ன? அந்த இசையின் உன்னதங்களைப் பறைசாற்றிக் கொண்டிருப்பதல்ல? அது என்றும் சாதியர்களின் காதில் விழப் போவதில்லை. அந்த இசையை அந்தச் சாதியினரையே இசைக்கச் செய்வது. அதைத்தான் நீங்கள் சாதிக்க இருக்கிறீர்கள்.
ஐஐடி பார்ப்பன மாணவர்கள் 2006இல் இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராடிய போது, இடஒதுக்கீடு தொடரும் விவாதம் என்ற புத்தகம் எழுதினேன். அது பெரும் விற்பனையாகி, பலரின் பாராட்டையும் பெற்றது. ஆனால் இது போன்ற புத்தகங்கள் பல சேர்ந்தாலும் ஏற்படுத்தவியலாத ஓர் உணர்வினை நேற்றைய கானா பாடல் ஏற்படுத்தியது. அழுத்தந்திருத்தமாக இடஒதுக்கீடு சலுகை அல்ல, உரிமை என்ற உணர்வை லட்சம் புத்தகங்கள் தர முடியாது. கானா பாடல் கொடுத்தது. மகிழ்ச்சி.
இப்படி, மீனவர் துயர், உழவர் வாட்டம் எனப் பல பல உணர்வுகளையும் கானா பாடல்கள் பிய்த்து மேய்ந்தன.
குறிப்பாக அம்பேத்கர் போற்றிய இரு கானா பாடல்களும் உச்சம்.
எளிய மக்களிடம் சாதியெதிர்ப்பு மனநிலை ஏற்படுத்துவதற்கு, கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் என்ற ஆங்கிலச் சொற்றொடர் உதவுமா? அல்லது சாதியற்றோர் ஒருமைப்பாடு, சாதியற்ற தமிழன் போன்ற சொற்றொடர்கள் உதவுமா? தயவுசெய்து சிந்தித்துப் பாருங்கள்.
மீண்டும் ஒரு முறை உங்களின் அருபெரும் முயற்சியை வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்.
கானா பெருவிருந்து கொடுத்தமைக்கு நன்றி. நன்றி. நன்றி. – நலங்கிள்ளி