நாட்டின் சிறந்த மருத்துவக் கல்வி நிறுவனமாக, டெல்லியிலுள்ள எய்ம்ஸ் கருதப்படுகிறது. இங்கு பட்டமேற்படிப்பு பயின்று வந்த மருத்துவர் சரவணன், ஜூலை 10 ஆம் தேதி காலை தனது அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கடைசியாக சனிக்கிழமை இரவு சுமார் 12 மணிக்கு தன் பணியை முடித்துக்கொண்டு சரவணன் அறைக்கு திரும்பியுள்ளார்.
மறுநாள் காலை அவர் வழக்கம் போல், வார்டு பணிக்கு வராததால், அவருக்கு போன் செய்து விசா ரிக்கும்படி சரவணனின் சீனியர் கூறியுள்ளார். அவ்வாறு போன் செய்தபோது, சரவணன் தனது போனை எடுக்காமல் இருக்கவே அருகில் வசிக்கும் மற்றொரு மாணவர் அவரது அறைக்குச் சென்று பார்த்துள்ளார்.
அப்போது சரவணன் இறந்து கிடப்பது தெரிய வந்தது. இவரது இறப்பில் பல சந்தேகங்கள் எழுந்த பின்பும் அவர் தற்கொலை செய்துகொண்டதாகவே டெல்லி காவல்துறையினர் கருதுகின்றனர். ஆனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்றே சொல்லப்படுகிறது.
ஜூலை 23 அன்று திருப்பூரில் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக முதுநிலை மருத்துவ மாணவர் சரவணன் கொலை செய்யப்பட்ட நிகழ்வுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொலை செய்யப்பட்ட சரவணன் அவர்களின் தந்தை கணேசன் அவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றார்.
இந்நிகழ்வையொட்டி, கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சு.மூர்த்தியின் பதிவிலிருந்து….
திருப்பூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டு தன்னுடைய மகனை மருதுவப் படிப்புக்கு படிக்கவைத்துள்ளார். சரவணனும் மருத்துவப் படிப்பை முடிந்து விட்டு மருத்துவ முதுநிலைப் (எம்.டி) படிப்புக்காக தகுதி அடிப்படையில் நாட்டின் தலைநகரில் உள்ள எய்மஸ் மருந்துவக் கல்லூரியில் சேர்க்கை வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
இப்படிப்புக்கு மொத்தமாக தேர்வு செய்யப் பட்ட மூன்று மருத்துவ மாணவர்களில் ஒருவராக சரவணன் தேர்வானார். ஆனால், கொடுமை என்னவென்றால்…. திறமை தகுதியின் அடிப்படையில் இப்படி ஒரு வாய்ப்பைப் பெற்றதற்காக கொலை செய்யப்படுகிறார். அதுவும் விச ஊசி மூலம் கொல்லப்படுகிறார். கொலையாளி எப்படிப்பட்டவானாக அல்லது கொலையாளிகள் எப்படிப்பட்டவர்களாக இருக்க முடியும் என்பதை இந்தக் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கருவியின் மூலம் பாமரன் ஒருவன் கூட முடிவுக்கு வர முடியும்.
இந்த நாட்டின் சமூக – சமய வாழ்க்கை முறைப் பண்பாட்டின் அடிப்படையில் சரவணன் ஒரு சூத்திரன். மொழி வழி மனித அடையாளத்தின் அடிப்படையில் ஒரு தமிழன். இந்த அடையாளங்களும் சரவணனின் கொலைக்கு ஒரு சமூகக் காரணமாக இருக்கலாம். ஒருவேளை சரவணன் பிறப்பின் அடிப்படையில் வேறொரு வர்ணத்தைச் சார்ந்தவனாகவோ, மொழி அடிப்படையில் வேறொரு இனத்தைச் சார்ந்தவனாகவோ இருந்திருந்தால், கொலைக்கு ஆளாகி இருக்க வாய்ப்பில்லாமல் இருந்திருக்கலாம்.
நாட்டின் தலைநகரத்தில் இருக்கும் மிகப் பெரிய அரசாங்க மருத்துவக் கல்வி நிறுவனத்தில் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்ந்த ஒரு மாணவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்ட பிறகும் நமது நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் இதற்காக ஒரு அனுதாப வார்த்தை கூட இதுவரை தெரிவிக்கவில்லை.
எளியவர்கள் அநீதிக்கு ஆளாக்கப்படுவதும், எளியவர்கள் கோரும் நீதி கண்டுகொள்ளாமல் போவதையும் போன்ற சமூக, அரசியல் புறச்சூழல்கள் இன்று அப்பட்டமாக நிலவி வருவதை தமிழ் இனத்திற்கும், தமிழனாக வாழ்கின்ற தனி மனிதனுக்கும் ஏற்படுத்தப்படுகின்ற பல்வேறு அநீதிகளோடு இதையும் பொருத்திப் பார்க்கவேண்டியுள்ளது. வலிமை உள்ளவையும் தகுதி உள்ளவையும் தப்பிப் பிழைக்கும் என்ற உயிரியல் விதி, தனி மனித வாழ்வாதாரப் போட்டிகளும் புவிசார் அரசியல், பொருளாதாரப் போட்டிகளும் நிறைந்த இன்றைய சமூக அமைப்புக்குள்ளும் உயிரோட்டமான பங்கு வகிப்பதை உணர முடிகிறது.
சமூக அரசியல் பொருளாதார அமைப்பிற்கேற்ப கல்வி அமைப்பும் கல்வி முறையும் இன்றைக்குக் கட்டமைக்கப்பட்டு வருவதைப் பார்க்கிறோம். இன்றைய முதலாளித்துவ சந்தைத் தேவைக்கான போட்டி நிறைந்த பொருளுற்பத்திச் சூழலில் சமூக – அரசியல் – பொருளாதார நீதி, சமத்துவ நீதி போன்ற நமது அரசியலமைக்குக் குறிக்கோள்கள் வெறும் ஏட்டுச் சுரைக்காய்களாகப் போய்விட்டன. என்வே சமூக – அரசியல் – பொருளாதார அறநெறியற்ற சமூக அமைப்பில் கல்வியிலும் அறநெறிகள் தொலைந்து போய்க்கொண்டுள்ளன. இதன் காரணமாக தனி மனித வாழ்க்கைப் பாதுகாப்பும் கேள்விக்குறி ஆகியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் இயற்கை யோகா மருத்துவக் கல்லூரியில் படித்த மூன்று மருத்துவ மாணவிகள் உயிரிழந்தனர். ஏதோ ஒரு வகையில் கல்லூரி நிர்வாகமும் அரசு நிர்வாகமும் இம்மூன்று மாணவிகளின் உயிரிழப்புக்குக் காரணாமாக இருந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் இருந்து வருவதைப் பார்க்க முடிகிறது. கல்வி வணிகமாயமாக்கப் பட்டுள்ள இன்றைய சூழலில் மருந்துவக் கல்வி நிறுவனங்களில் படிப்பவர்களின் உயிர்களுக்கும் பாதுகாப்பில்லாத நிலை உருவாகிவருவது கவலை அளிக்கக் கூடிய ஒன்றாக நாம் கருதாமல் இருந்து வருகிறோம்.
புற வாழ்க்கைச் சூழலிலும் அக வாழ்க்கைச் சூழலைத் தீர்மானிக்கும் கல்வியிலும் அறநெறிகளை தொலைத்துவிட்ட பிறகு சமூகத்தில் எந்த இடத்திலும் அறநெறிகள் இருக்காது. அறநெறிகள் இல்லாத சமூகத்தில் மனிதம் இருக்காது. மனிதம் இல்லாமல் போவதால் தான் பகைமையும், தன்னல வெறியும், பணவெறியும் கொலைவெறியும் மட்டுமே புதிது புதிதாகப் பிறப்பெடுத்து வருவதைப் பார்க்கிறோம். இந்த வெறிகள் எந்த மனிதனையும் எதற்காக வேண்டுமானாலும் கொலைசெய்ய வைக்கும். சொத்துக்காக மகனே தந்தையைக் கொல்வதும், சாதிக் கெளரவம் என்ற போலித்தனத்திற்கு மகளை அப்பாவே கொல்வதும், தனக்கு வாய்ப்பு வேண்டும் என்பதற்காக சக மனிதனை இன்னொரு மனிதன் கொலை செய்வதும், குறுகிய அரசியல் நலன்களுக்காக சாதி – சமய வெறி ஊட்டப்படுதலும் நடக்கும்.
நாம் யாருக்கும் எந்த கெடுதலும் செய்யவில்லை. அதனால் நமக்கு எந்த ஆபத்தும் இல்லை தானே என்று வாழ்ந்து கொண்டிருப்போம். ஆனாலும் நாம் கொலை செய்யப்படுவோம். ஒருவரைக் கொலை செய்தால் தனக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்கும் என்றால், தனது ஆசை அல்லது வெறி தீரும் என்றால் அதையும் செய்ய சிலர் தயாராக இருப்பார்கள். ஒருவரை யாராவது குறைத்துப் பேசிவிட்டால் கூட அதுவும் கொலையில் போய் முடியலாம்.
போட்டி நிறைந்த தனியுடைமை – நுகர்விய – தனிமனித நல – சமூக – அரசியல் – பொருளாதார வாழ்வியல் அமைப்புக்குள் இப்படிப்பட்ட சமூகச் சீரழிவு வளர்ந்துகொண்டுதான் இருக்கும்.. சமூகத்தைக் கட்டமைக்கும் நோக்கமும் வழிமுறையும் ஒரு சிலரின் காகிதப் பணமூட்டைகளைப் பெருக்குவதற்க்காக – வசதி வாய்ப்புகளைப் பெருக்குவதற்காக மட்டுமே என்று மாறிப்போன சமூக அமைப்புக்குள் ஒட்டுமொத்த சமூக நலன் சார்ந்த வாழ்வியல் அறநெறிகள் எதுவும் மிச்சம் இருக்காது என்ற நிலைதான் பெருகி வருகிறது.
திருப்பூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆறாம் வகுப்பு மாணவன் முதல் வகுப்பு மாணவனை பள்ளியிலேயே கொலை செய்த நிகழ்வு எதைக் காட்டுகிறது.? சாதிக் கெளரவம் என்ற காரணத்திற்காக உடுமலை சங்கர் கடைத்தெருவில் கொலை செய்யப்பட்ட நிகழ்வு, நாட்டின் மிகப்பெரிய மருத்துவக் கல்லூரியில் மருத்துவ முதுநிலை மாணவர் சரவணன் விச ஊசி போட்டுக் கொல்லப் பட்ட நிகழ்வு, தொடர் வண்டி நிலையத்தில் சுவாதி என்ற பெண் கொலை செய்யப் பட்ட நிகழ்வு – இப்படிப் பட்ட நிகழ்வுகளில் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? கொலை செய்வது என்ன கிரிக்கெட் விளையாட்டில் ஓட்டம் எடுப்பதற்காக பந்தைக் குறி பார்த்து அடிக்கும் செயலைப் போன்றதா?
இந்த நிகழ்வுகள் எல்லாம் பணத்திற்காக மட்டும் அலைந்து திரியும் நம்முடைய அவசர வாழ்க்கையில் இடம்பிடிக்கும் சில மணி நேர பரபரப்புகள் அல்லது ஓரிரு நாள் பரபரப்புகள் மட்டும் தானா? அல்லது இது போன்ற செய்திகள் ஊடகங்களுக்கான அன்றாட வருவாய் வேட்டை மட்டும் தானா? முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைக்கும் அதிகார வர்க்க அமைப்பினருக்கும் இது ஒரு சட்டம் ஒழுங்கு சிக்கல் மட்டும் தானா?
ஏதோ சில காரணங்களால் ஏற்பட்ட மனிதத் தவறுகளால் அவ்வப்போது ஒரு சில நிகழ்வுகள் தானே இப்படி நடக்கின்றன, யாரோ ஒரு சிலர் தானே பலியாகிறார்கள் என்று நாம் இருந்துகொண்டிருப்போம். நம் உடலில் எங்காவது ஒரு பகுதியில் தானே சீல் பிடித்திருக்கிறது என்று நாம் இருந்தால் சில நாட்களில் நம் உடல் என்னவாகும் என்பது நமக்குத் தெரியும். அதைச் சரிசெய்யவில்லை என்றால் உடல் மொத்தமும் கெட்டுப்போகும் என்று அஞ்சி உடனே அக்கறையோடு சிகிச்சை எடுத்துக் கொள்வோம். நம் உடலின் பாதிப்பை உணரும் நாம் கோடிக்கணக்கான உயிர்களுக்கும் உடலாக இருக்கும் சமூகக் கட்டமைப்புக்குள் சீல் பிடித்திருப்பதைப் பற்றிக் கவலை கொள்ளாமல் இருக்கிறோம். சமூகம் நோய்க்கு ஆளாவதைப் பற்றி இலட்சத்தில் ஒருவராவது கவலைப் படுகிறோமா? ஆட்சியாளர்களாவது கவலைப் படுகிறார்களா? சமூகத்தில் பரவும் நோயை உணராமல் வாழ்பவர்களும் அதைத் தடுக்க வழி தேடாமல் வாழ்பவர்களும் ஆறறிவு உயிரினமா? அல்லது அறிவற்ற உயிரினமா? விடை தேடுவோம். அனைவரும் சேர்ந்தே.