மேகதாதுவில் புதிய அணை கட்ட பூமி பூசை போடுவதா? – கர்நாடகத்துக்கு வேல்முருகன் கண்டனம்

காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்துக்கு துரோகம் இழைப்பதில் காங்கிரஸும் பாஜகவும் கைகோர்த்துக் கொண்டிருப்பதை தமிழக மக்கள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள் என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

”காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட பூமிபூஜைகள் கர்நாடக அரசின் ஒத்துழைப்போடு நடத்தப்பட்டுள்ளது. இதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அனைத்து வழக்குகளும் கடந்த 28-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருந்தது. ஆனால் கர்நாடக அரசு இதை இழுத்தடிக்கும் வகையில் மனு தாக்கல் செய்ததால் ஜூலை 19-ஆம் தேதிக்கு இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்காக வாட்டாள் நாகராஜ் உள்ளிட்டோரை தூண்டி விட்டு கர்நாடக அரசு அங்கு பூமி பூஜை போட வைத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில் கர்நாடக அரசின் ஒத்துழைப்போடு நடந்துள்ள இந்த செயலை பாஜக அரசும் கண்டிக்கவில்லை. இந்த விஷயம் தமிழக மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

 காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு முறைப்படி அரசிதழில் வெளியிட்ட பின்னரும் கூட தமிழகத்துக்கான நியாயமான தண்ணீரை திறந்துவிட முடியாது என கர்நாடகா மறுத்து வருகிறது. ஆனால் பாஜக அரசு கெயில், மீத்தேன் எரிவாயு திட்டங்கள் மூலம் தமிழகத்தை பாலைவனமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தின் 20 லட்சம் ஏக்கர் விளைநிலத்தை பாழாக்கவும், 25 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரத்தை சிதைக்கும் வகையிலும் காவிரியின் குறுக்கே மேகதாது, ராசிமணல் ஆகிய இடங்களில் அணைகட்டுவதில் கர்நாடக அரசு மும்முரமாக உள்ளது. இதன் ஒரு பகுதியாகவே தற்போது பூமி பூஜை போடப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவை பாஜக அரசு இன்னமும் அமைக்கவில்லை. தற்போது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் புதிய அணைக்கு பூமி பூஜை போடப்பட்டுள்ளது.

காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழகத்துக்கு துரோகம் இழைப்பதில் காங்கிரஸும் பாஜகவும் கைகோர்த்து கொண்டிருப்பதை தமிழக மக்கள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள். நிச்சயம் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று கூறியுள்ளார்.

Leave a Response