உங்கள் வாக்கைப் பெற இலஞ்சம் தரமாட்டேன் – வேட்பாளர் சுப.உதயகுமாரின் பகிரங்க ஒப்பந்தம் (முழுமையாக)

இராதாபுரம் தொகுதியில் போட்டியிடும் சுப.உதயகுமார், தொகுதி வாக்காளர்களுக்கு ஒரு ஒப்பந்தப் பத்திரம் கொடுத்துள்ளார். அதில்,

வாக்காளர் தோழர்களே…
உங்களோடு ஓர் ஒப்பந்தம்!

வணக்கம்! இராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் “பச்சைத் தமிழகம்” கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் சு.ப. உதயகுமார் ஆகிய நான் உங்களுடன் கீழ்க்கண்ட அம்சங்கள் கொண்ட ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறேன். இந்த ஒப்பந்தத்தை முழுமையாக நிறவேற்ற நான் உறுதி பூணுகிறேன்.

எனது பெயர் சு.ப. உதயகுமார். நான் யூன் 8, 1959 அன்று நாகர்கோவிலில் பிறந்தேன். மதுரை மற்றும் கேரளா பல்கலைக்கழகங்களில் கணிதத்தில் இளங்கலைப் பட்டமும், ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றேன். பின்னர் எத்தியோப்பியா நாட்டில் ஆங்கில ஆசிரியராக ஆறாண்டுகள் பணியாற்றினேன். கடந்த 1989-ஆம் ஆண்டு முதல் 2000 வரை அமெரிக்காவிலுள்ள நோட்ரே டேம் மற்றும் ஹவாய் பல்கலைக்கழகங்களில் சமாதானக் கல்வியில் முதுகலைப் பட்டமும், அரசியலில் முனைவர் (டாக்டர்) பட்டமும் பெற்றேன். சமூக-அரசியல்-பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து பல நூல்களும், கட்டுரைகளும் எழுதியிருக்கும் நான், சுமார் முப்பது நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன், பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கற்பித்திருக்கிறேன். தமிழ், ஆங்கிலம், மலையாளம் மொழிகளை சரளமாகப் பேசுவேன். இந்தி, அம்ஹாரிக், ஸ்பானிஷ் மொழிகள் ஓரளவு தெரியும். எனது பெற்றோர் திரு. சு. பரமார்த்தலிங்கம், திருமதி. சு. பொன்மணி, மனைவி திருமதி. மீரா உதயகுமார், மகன்கள் சூர்யா, சத்யா ஆகியோருடன் நாகர்கோவில் நகரில் வாழ்கிறேன்.

[1] இராதாபுரம் தொகுதியிலுள்ள இடிந்தகரையில் சுமார் மூன்றாண்டுகள் (2011-2014) தொடர்ந்து வாழ்ந்த என்னை நீங்கள் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுத்து அனுப்பும்பட்சத்தில், இராதாபுரத்தில் தங்கியிருந்து உங்களை மாதந்தோறும் தொடர்ந்து சந்திப்பேன். உங்கள் குறைகளைக் கேட்டு, அவற்றைக் களைய பல்வேறு ஊர்களிலும், கிராமங்களிலும் “அக்கம்பக்கக் கூட்டங்கள்” நடத்துவேன். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படவிருக்கும் முக்கியமான மசோதாக்கள் மற்றும் தீர்மானங்கள் மீது வாக்களிக்கும் முன்னர் அவை குறித்து உங்களோடு கலந்தாலோசிப்பேன்.

[2] யாரிடமிருந்தும், எந்தக் காரணத்துக்காகவும், எந்த விதத்திலும் கையூட்டுப் பெறமாட்டேன். எனது எம்.எல்.ஏ. பதவி முடியும் வரை, ஒவ்வொரு நிதியாண்டின் துவக்கத்திலும் எனது சொத்துக் கணக்கையும், வருமான வரிக் கணக்கையும் உங்களுக்குத் தெரிவிப்பேன்.

[3] உங்கள் வாக்குகளைப் பெற ஒருபைசாகூட லஞ்சம் தரமாட்டேன். காரணம் இப்போது “முதலீடு” செய்துவிட்டு, பின்னர் உங்கள் வரிப்பணத்தை, செல்வங்களை, இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பது எனது நோக்கமல்ல.

[4] எம்.எல்.ஏ. தொகுதி வளர்ச்சி நிதியை மேலாண்மை செய்வதற்கு ஐந்து ஆண்களும், ஐந்து பெண்களும் கொண்ட குழு ஒன்றை அமைத்து செயல்பட்டு, ஊழல் நடக்காமல் தடுப்பேன். நிறைவேற்றப்படும் திட்டங்களில் எனது பெயரைப் பொறிக்கமாட்டேன்.

[5] என்னுடைய அனைத்து செயல்பாடுகளிலும், சாதி, மத உணர்வுகளுக்கு இடங்கொடுக்காது, அனைத்துத் தரப்பு மக்களுக்குமானத் தொண்டனாகச் செயல்படுவேன்.

தொகுதிப் பிரச்சினைகள்

[6] அணுத்தீமை: ஆபத்தான நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலிரண்டு அலகுகளை நிரந்தரமாக மூடிட ஆவன அனைத்தும் செய்வேன். அங்கேத் தொடங்கப்பட்டிருக்கும் விரிவாக்கப் பணிகளை எதிர்ப்பேன், தடுப்பேன்.

[7] கடல்/கடலோடிகள் நலம்: கடலுக்கும், கடலோடிகளுக்கும் தீங்கு விளைவிக்கும் தாதுமணல் ஆலைகள், இரசாயன ஆலைகள் போன்ற தொழில்நிறுவனங்கள் அமைவதை உறுதியாக நின்று எதிர்த்து அவற்றை மூடிடப் பாடுபடுவேன். கடலையும், கடலோடிகளையும் பாதுகாக்கும் வண்ணம் கடற்கரை மேலாண்மைச் சட்டம் பயன்படுத்தப்பட ஆவன செய்வேன். மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணையில் இருக்கும் பவளப்பாறைகளையும் சூழலியல் நலத்தையும் அழிக்கும் சேது சமுத்திர திட்டத்தைத் தொடர்ந்து எதிர்ப்பேன். பாரம்பரியக் கடலோடிகளை பழங்குடியினர் பிரிவில் சேர்க்கவும், அவர்களுக்கென தனி சட்டமன்றத் தொகுதி உருவாக்கவும் உழைப்பேன்.

[8] நீர் வளம்: இராதாபுரம் தொகுதியில் ஏராளமான ஊர்களின் பெயர்கள் குளம், ஏரி என்று முடிந்தாலும், அங்கேயுள்ள நீர்நிலைகள் அனைத்தும் பராமரிப்பின்றி, பாழ்பட்டு, தூர்ந்து கிடக்கின்றன. அத்தனை நீர்நிலைகளிலும் தூர்வாரி, தண்ணீர் நிரப்பி, நிலத்தடி நீரைப் பெருக்கி வேளாண்மை தழைக்க உழைப்பேன். தொகுதியின் பல பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்தும், உப்புத்தண்ணீராகவும் மாறிவரும் நிலையில், வெள்ளநீர் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்ற பாடுபடுவேன். தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் அனைத்து ஊர்களுக்கும் தண்ணீர் கிடைக்க வழிவகை செய்வேன். நம்பியாறு, கருமேனியாறு, அனுமன் நதி, பச்சையாறு போன்ற நதிகளை இணைக்க ஆவன செய்வேன். பேச்சிப்பாறை அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரை தோவாளை கால்வாய் – நிலப்பாறை வழியாகக் கொண்டுவந்து தொகுதியிலுள்ள ஐம்பதுக்கும் மேற்பட்டக் குளங்களை நிரப்புவேன்.

[9] வேளாண்மை, உணவு: விவசாய விளைநிலங்களைப் பாதுகாக்கவும், வேளாண்மையை விருத்தி செய்யவும், விதைப் பண்ணை அமைக்கவும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் ஆவன அனைத்தும் செய்வேன். நெல் போன்ற விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை நிர்ணயித்து, அவற்றை அரசே கொள்முதல் செய்யும் நிலையங்கள் அமைக்கப் பாடுபடுவேன். சீமைக்கருவேல மரத்தை ஒழிப்பேன். திசையன்விளைப் பகுதியில் உற்பத்தியாகும் முருங்கைக்காய் அதிக விலையில் ஏற்றுமதி செய்யப்படுவதற்குத் தேவையான பதப்படுத்தும் நிலையங்கள் அமைப்பேன். காவல்கிணறு சந்திப்பில் உள்ள மலர் வணிக வளாகத்தை பூ விவசாயம் உயர்ந்தோங்க பயன்படுத்துவேன். தொகுதி முழுவதும் இயங்கும் கால்நடை மருத்துவமனைகளை தரம் உயர்த்துவேன். புதிய பகுதிநேர கால்நடை மருத்துவமனைகள் பலவற்றை உருவாக்குவேன். வீடுகள் குறைவாக உள்ள கிராமங்களில் பகுதிநேர ரேஷன் கடைகளும், 150 வீடுகளுக்கும் அதிகமாக உள்ள அனைத்து கிராமங்களிலும் முழுநேர ரேஷன் கடைகளும் அமைக்கச் செய்வேன்.

[10] வணிகம்: சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டைக் கடுமையாக எதிர்ப்பேன், வணிகர் நலன்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பேன்.

[11] தொழில் வளம், வேலைவாய்ப்பு: தொகுதியில் மீன் அரவை ஆலை, மாட்டு எலும்பு அரவை ஆலை போன்ற மக்கள் நலன்களுக்கு எதிரான திட்டங்களைத் தடுப்பேன். எளிய மக்களின் வாழ்வுரிமை, வாழ்வாதார உரிமைகளைப் போற்ற என்னாலான அனைத்தையும் செய்வேன். மாசுபடுத்தாத, சூழலைக் கெடுக்காத தொழிற்பேட்டை அமைத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் உருவாக்குவேன். பீடி சுற்றும் பெண்களுக்கு தொழிலாளர் உரிமைகளும், அரசு சலுகைகளும் கிடைக்கப் பாடுபடுவேன். தொகுதியிலுள்ள பனைத் தொழிலாளர்களுக்கு அரசு உதவிகள் அனைத்தும் கிடைக்கச் செய்வேன். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட மத்திய, மாநில நிறுவனங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப் பாடுபடுவேன். தொகுதியின் பல பகுதிகளிலுள்ள காற்றாலைகள், சூரிய ஒளி ஆலைகள் போன்ற மரபுசாரா எரிசக்தியை இன்னும் பெருக்க முயற்சிப்பேன்.

[12] போக்குவரத்து: தொகுதியெங்கும் சாலைகள் மிக மிக மோசமான நிலையில் இருப்பதனால் ஆபத்துக்களும், விபத்துக்களும் நிறைந்தவையாக இருக்கின்றன. விசுவநாதபுரம் முதல் பெரியதாழை வரையிலான கிழக்குக் கடற்கரை சாலை உள்ளிட்ட அத்தனைச் சாலைகளையும் விரிவுபடுத்தி, செப்பனிட்டு, சீரமைப்பேன். திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி போன்ற ஊர்களிலிருந்து தொகுதியின் பல ஊர்களுக்கும் பேருந்து சேவையை அதிகரிக்கச் செய்வேன். தொகுதியின் உட்பகுதியிலுள்ள அணைக்கரை, புளிக்குளம், பாப்பான்குளம், கொத்தன்குளம், பெட்டைக்குளம் போன்ற கிராமங்களிலிருந்து மாணவ மாணவியர் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்றுவரத் தேவையான பேருந்து வசதி செய்து கொடுப்பேன். ஆத்தங்கரைப் பள்ளிவாசலிலிருந்து திசையன்விளை செல்லும் சாலையிலுள்ள தரைப்பாலத்தை மேம்பாலமாக மாற்றுவேன். வள்ளியூரில் ரயில்வே மேம்பாலம் கட்ட ஆவன செய்வேன். பணகுடியில் அதிகமான சாலை விபத்துக்கள் நடக்கும் நான்குவழிச் சாலை சந்திப்பில் மேம்பாலம் கட்டுவேன். காவல்கிணறு சந்திப்பு ரயில் நிலையத்தில் குறிப்பிட்ட ரயில்கள் நின்றுசெல்ல ஆவன செய்வேன். காவல்கிணறு, செட்டிக்குளம் உள்ளிட்ட பெரும்பாலான ஊர்களில் பயணிகள் நிழற்குடை அமைப்பேன்.

[13] மருத்துவம், சுகாதாரம்: இராதாபுரத்தில் இயங்கும் தாலுகா தலைமை மருத்துவமனை மற்றும் வள்ளியூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துவேன். கூடங்குளத்திலும், ஏனைய ஊர்களிலுமுள்ள அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்களும், செவிலியர்களும் பணியாற்ற ஆவன செய்வேன். கூடங்குளத்திலுள்ள கழிவுநீர் ஓடைகளை நெறிப்படுத்தி, நாற்றமும், கொசுவும், நோய்களுமின்றிச் செய்வேன்.

[14] கல்வி: தொகுதியின் மையப்பகுதியான இராதாபுரத்தில் அரசு கலைக் கல்லூரி அமைத்திடப் பாடுபடுவேன். அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த ஆவன அனைத்தும் செய்வேன்.

[15] சுற்றுலா: தொகுதியில் அமைந்துள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில், உவரி கப்பல் மாதா ஆலயம் மற்றும் அந்தோணியார் திருத்தலம், மற்றும் முக்கிய தர்காவான ஆத்தங்கரைப் பள்ளிவாசல் போன்றவற்றில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, சுற்றுலாத் துறை போன்றவற்றோடு கைகோர்த்து இத்திருத்தலங்கள் இன்னும் அதிக முக்கியத்துவம் பெறச் செய்வேன்.

[16] திசையன்விளை வளர்ச்சி: திசையன்விளைப் பகுதியை தனித் தாலுகாவாக்கிட முயற்சிப்பேன். அங்கேயிருந்த ரயில்வே தடத்தைப் புதுப்பித்து, ரயில் போக்குவரத்து மீண்டும் நடக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்வேன். இந்தப் பகுதியில் 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்துவேன்.

[17] மேற்குறிப்பிட்டத் திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்தும்பொருட்டு ஆய்வுகள் மேற்கொள்ள, முன்னேற்பாடுகள் செய்ய மக்கள் குழுக்களை உடனடியாக நியமிப்பேன். எனது மேற்பார்வையில் அவர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். ஆளும் அரசோ, அதிகாரிகளோ ஒத்துழைக்க மறுத்தால் மக்களைத் திரட்டிப் போராடுவேன். பின்வாங்க மாட்டேன்.

இராதாபுரம்,
ஏப்ரல் 2, 2016.

டாக்டர் சு.ப. உதயகுமார், MA, MA, Ph.D.
வேட்பாளர் கையெழுத்து
_______________________________
உங்கள் கையெழுத்து

[தயவு செய்து இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பத்திரப்படுத்தி, இதன் அடிப்படையில் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். நாம் ஒன்றாக செயல்பட்டு பெரும் மாற்றத்தைக் கொண்டு வருவோம்.] என்னைத் தொடர்பு கொள்ள:
Mobile: 9943392086;
Email: spudayakumar@gmail.com;
Skype: spudayakumar;
Facebook: s.p.udayakumaran;
Twitter: spudayakumar.

Leave a Response