
நேற்று (ஆகஸ்ட் 7,2025) மக்களவை எதிர்க்கட்சி தலைவர் இராகுல்காந்தி, டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி தேர்தல் ஆணையம் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் முன்வைத்தார்.
அதன் விவரம்….
பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியில் 2024 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரசு வேட்பாளர் மன்சூர் அலிகான், பா.ஜ.க வேட்பாளர் பி.சி.மோகனிடம் 32,707 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
இந்தத் தொகுதி உள்பட கர்நாடகாவில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் நாங்கள் எடுத்த கணக்குப்படி 16 தொகுதிகளில் காங்கிரசு வெற்றி பெற்று இருக்க வேண்டும். ஆனால் 9 தொகுதிகள் மட்டுமே எங்களுக்குக் கிடைத்தது.
இது தொடர்பாக நாங்கள் நடத்திய ஆய்வில் பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட மகாதேவ்புரா சட்டப்பேரவைத் தொகுதியில் மிகப்பெரிய வாக்காளர் மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக காங்கிரசு மேற்கொண்ட ஆய்வில் சரியாக 1 இலட்சத்து 250 போலி வாக்காளர்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதில், 11,965 வாக்காளர்களின் பெயர்கள் இரண்டு முறை பதிவாகி உள்ளன. 40,009 வாக்காளர்களின் முகவரிகள் போலியாவை. 10,452 வாக்காளர்கள் ஒரு குறிப்பிட்ட முகவரியில் மொத்தமாகப் பதிவு செய்துள்ளனர். அதோடு, 4,132 பொருத்தமில்லாத புகைப்படங்கள் ஒட்டப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களைப் பதிவு செய்வதற்கான படிவம் 6 ஐ 33,692 பேர் தவறாகப் பயன்படுத்தி உள்ளனர். இந்தப் படிவத்தைப் பயன்படுத்தி வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் 20 வயதைக் கடந்தவர்கள்.
படிவம் 6 ஐ பயன்படுத்தி 70 வயது மூதாட்டியின் பெயர் ஒரே வாக்குச்சாவடியில் 2 முறை சேர்க்கப்பட்டுள்ளது. அந்த 2 ஓட்டுகளும் பதிவாகியுள்ளன. ஒரே மூதாட்டி ஒரு வாக்குச்சாவடியில் எப்படி 2 வாக்கு போட்டார் என்பதை தேர்தல் ஆணையம்தான் விளக்க வேண்டும்.
திட்டமிட்ட ரீதியில் தேர்தல் முடிவுகளை சீர்குலைக்கும் முயற்சி இது என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பல பதிவுகளில் வீட்டு எண் 0 என குறிப்பிடப்பட்டுள்ளது. ஒற்றை படுக்கை அறை கொண்ட முகவரியில் 46 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஒரு அறை கொண்ட வீட்டில் 80 வாக்காளர்கள் உள்ளனர். அந்த இடத்தைப் பார்வையிட்டபோது அங்கு யாரும் வசிக்கவில்லை. ஒரு வாக்காளருக்கு ஒரே தொகுதியில் 4 வாக்குச்சாவடியில் ஓட்டு உள்ளது. கர்நாடகாவில் ஒரே நபர் பல பூத்களில் வாக்குகளைச் செலுத்தியுள்ளார். இப்படி பலர் வாக்குகளைச் செலுத்தி உள்ளனர். இது தவிர ஒருவருக்கு மகாராஷ்டிரா, உத்தரபிரதேசத்தில் தலா ஒரு ஓட்டும், பெங்களூரு மகாதேவபுரா தொகுதியில் 2 ஓட்டும் உள்ளது.
இது ஒரு குறிப்பிட்ட தொகுதியில் நாங்கள் மேற்கொண்ட ஆய்வு மட்டுமே. இந்த ஆய்வை நாங்கள் செய்து முடிப்பதற்கு எங்களுக்கு 6 மாதங்கள் ஆகி உள்ளது. தேர்தல் ஆணையம் எங்களுக்கு மின்னணு தரவை வழங்குவதில்லை. ஏனென்றால் நாங்கள் வாக்காளர் பட்டியலை கவனமாக ஆய்வு செய்வதை தேர்தல் ஆணையம் விரும்பவில்லை. தேர்தல் ஆணையம் எங்களுக்கு மின்னணு தரவுகளை வழங்கினால் அதை ஆய்வு செய்ய எங்களுக்கு 30 வினாடிகள் போதும். நான் மீண்டும் சொல்கிறேன், அதனால்தான் எங்களுக்கு இதுபோன்ற காகித தரவு வழங்கப்படுகிறது. அதனால் வாக்காளர் பட்டியலை பகுப்பாய்வு செய்ய முடியவில்லை. இந்த ஆவணங்கள் ஓசிஆர் ஆப் பயன்படுத்தி ஸ்கேன் செய்தால், அவற்றிலிருந்து தரவைப் பெறமுடியாது. தேர்தல் ஆணையம் ஏன் இந்த காகிதத் துண்டுகளைப் பாதுகாக்கிறது? தேர்தல் ஆணையம் வேண்டுமென்றே இயந்திரம் படிக்க முடியாத ஆவணங்களை வழங்குகிறது.
இயந்திரம் படிக்கக்கூடிய வாக்காளர் பட்டியலை வழங்காததும், சட்டத்தை மாற்றுவதன் மூலம் சிசிடிவி காட்சிகளை அனுமதிக்காததும், தேர்தல்களைத் திருட பாஜகவுடன் தேர்தல் ஆணையம் கூட்டுச் சேர்ந்துள்ளது என்பதை எங்களுக்கு உணர்த்தியது. நாடு முழுவதும் வாக்கு திருட்டு நடந்ததற்கான ஆதாரங்களை அழிக்க தேர்தல் ஆணையம் முயற்சிக்கிறது. தேர்தல் செயல்முறையை சீர்குலைக்க ஜனநாயக நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. இது அரசியலமைப்பிற்கு எதிரான குற்றம். ஏனெனில் கடந்த 10-15 ஆண்டுகளாக இயந்திரம் படிக்கக்கூடிய தரவுகளையும், சிசிடிவி காட்சிகளையும் தேர்தல் ஆணையம் எங்களுக்கு வழங்கவில்லை என்றால், அவர்கள் குற்றத்தில் பங்கேற்கிறார்கள் என்று அர்த்தம். நாம் மிகவும் விரும்பும் தேர்தல் நடைமுறைகளில் ஜனநாயகம் இல்லாததால் நீதித்துறை இதில் தலையிட வேண்டும்.
தேர்தல்களைப் பாதுகாப்பதில் காங்கிரசு ஈடுபட்டுள்ளது என்பதை தேர்தல் ஆணையத்திற்கு நினைவூட்ட விரும்புகிறேன். பிரதமர் மோடி மிகக்குறைந்த பெரும்பான்மையுடன் பிரதமராக உள்ளார். அவர் ஆட்சியில் நீடிக்க 25 இடங்களை மட்டுமே திருட வேண்டியிருந்தது. மக்களவைத் தேர்தலில் பாஜக 33,000 க்கும் குறைவான வாக்குகளைப் பெற்று 25 இடங்களை வென்றது.
நமது அரசியலமைப்பின் அடித்தளம் ஒருவருக்கு ஒரு வாக்கு கிடைக்கிறது என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டது. நாம் கருத்துக்கணிப்புகளைப் பார்க்கும்போது, ஒரு நபர், ஒரு வாக்கு என்ற கருத்தை எவ்வாறு பெறுவது என்பதுதான் அடிப்படை விசயம். சரியான நபர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுகிறார்களா? போலி நபர்கள் சேர்க்கப்படுகிறார்களா? வாக்காளர் பட்டியல் உண்மையா இல்லையா? என்று சில காலமாக பொதுமக்களிடையே சந்தேகம் உள்ளது.
ஒவ்வொரு கட்சியையும் ஆட்சிக்கு எதிரான அலை தாக்குகிறது, ஆனால் ஜனநாயக கட்டமைப்பில் ஆட்சிக்கு எதிரான அலையால் பாதிக்கப்படாத ஒரே கட்சி பாஜக மட்டுமே. இதனால் தான் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பெருமளவில் தவறாகப் போகின்றன. அதே போல் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் நடத்தும் உள் கருத்துக் கணிப்புகளும் பொய்த்துப்போய் விடுகின்றன. இதே போன்ற தேர்தல் திருட்டு குற்றம் நாடு முழுவதும், மாநிலத்திற்கு மாநிலம் என மிகப்பெரிய அளவில் செய்யப்படுகிறது என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இவ்வாறு இராகுல்காந்தி தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் மீது உரிய ஆதாரத்துடன் ராகுல்காந்தி தெரிவித்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆடிப்போயுள்ளது என தில்லி வட்டார தகவலகள் தெரிவிக்கின்றன.


