
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14 ஆம் தேதி, உலக குருதிக் கொடை நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது.
1868 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி, குருதிக் குழு அமைப்பைக் கண்டுபிடித்த கார்ல் லேண்ட்ஸ்டெய்னரின் பிறந்தநாள். இதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவரின் நினைவாக ஜூன் 14 ஆம் தேதி அன்று இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த நாள் உயிர்களைக் காப்பாற்றுவதிலும் சுகாதார விளைவுகளை மேம்படுத்துவதிலும் குருதிக்கொடை செய்பவர்கள் வகிக்கும் முக்கிய பங்கை நினைவூட்டுகிறது.
2004 ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பால் (WHO) நிறுவப்பட்ட உலகக் குருதிக் கொடை நாள், குருதிக் கொடையின் முக்கியத்துவத்தை ஊக்குவிப்பதையும், இந்த உயிர் காக்கும் நோக்கத்திற்கு பங்களிப்பவர்களுக்கு நன்றி தெரிவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஒவ்வொரு இரத்த அல்லது பிளாஸ்மா தானமும் ஒரு விலைமதிப்பற்ற உயிர்காக்கும் பரிசாகும், மேலும் பாதுகாப்பான மற்றும் நிலையான இரத்த விநியோகத்தை உருவாக்குவதற்கு மிகவும் முக்கியமானது .
2025 ஆம் ஆண்டு உலகக் குருதிக் கொடை நாளின் கருப்பொருள் ‘குருதி கொடுங்கள், நம்பிக்கை கொடுங்கள், ஒன்றாக நாம் உயிர்களைக் காப்பாற்றுவோம்’ என்பதாகும். இந்தக் கருப்பொருள் குருதிக் கொடையின் முக்கியத்துவத்தையும், அதனால் கிடைக்கும் பலன்களையும் மக்களுக்கு வலியுறுத்துகிறது.
குருதிக்கொடை செய்வதால் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.இது ஓர் உயிரைக் காக்கும் செயல். இது சமூகங்களை வலுப்படுத்துவதோடு, மக்களிடையே ஒற்றுமையின் உணர்வை ஏற்படுத்துகிறது.
குருதிக்கொடை செய்வதால் பெறுபவர் மட்டுமல்லாமல், கொடையாளர்களும் பயன்பெறுகிறார்கள்.இதைச் செய்வதால் உடலில் இயற்கையாகப் புதிய குருதி உற்பத்தியாகும்.அதில் உள்ள ஹீமோகுளோபின் அளவு சீராக இருக்க உதவும்.
இந்த நாளில் குருதிக் கொடை செய்வது குறித்த முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு ஊர்வலங்கள், கருத்தரங்குகள், கூட்டங்கள் ஆகியன உலகம் முழுவதும் நடைபெறுகின்றன.
– செல்வன்


